தீர்ப்புக்கு அமைய அரசியல் தீர்மானம்

எனக்கும் ரணிலுக்கும் தனிப்பட்ட முரண்பாடு இல்லை என்கிறார் ஜனாதிபதி

0 851

அரசியலில் இன்று இடம்பெறும் போராட்டம்  எனக்கும் ரணிலுக்கும் இடையிலான தனிப்பட்ட போராட்டமல்ல. தேசியத்துக்கும் சர்வதேசத்திற்கும் இடையிலான போராட்டமே இடம்பெற்று வருகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியல் நெருக்கடியை தீர்க்க அனைவரும் நீதிமன்றத் தீர்ப்பொன்றை எதிர்பார்த்துள்ளோம். இதில் நீதிமன்ற தீர்மானம் என்னவாக அமைகின்றதோ  அதனை மதித்து அடுத்த கட்ட அரசியல் தீர்மானம் எடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று காலை பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சிலர் அரசியல் கட்சிகளின்  முரண்பாடாக கூறுகின்றனர். இன்னும் சிலர் இதனை எனக்கும் ரணிலுக்கும் இடையில் இடம்பெறும் போராட்டமாகக் கருதுகின்றனர். ஆனால் இன்று இடம்பெறுபவை இவை இரண்டுமல்ல. இது தேசியவாதத்துக்கும் சர்வதேச வாதத்துக்கும் இடையிலான போராட்டமே இன்று இடம்பெற்று வருகின்றது. இதனை இந்த நாட்டு மக்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். எமது நாட்டுக்காக எமது பொறுப்புகளை கடமைகளை நாம் சரியாகச் செய்ய வேண்டும். எமக்குள்ள சவால்களை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொண்ட நாம் சுயாதீனமான நாடாக முன்னோக்கி செல்ல எடுக்கும் முயற்சிகளில் பழைய அடக்குமுறைக்காரர்களின் நிழல்கள் இன்று எமக்கு தடையாக அமைகின்றது. இவற்றையே நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இன்று அனைவரும் நீதிமன்ற தீர்ப்பொன்றை எதிர்பார்த்து நீதிமன்றத்தை நோக்கிப் பார்க்கின்றன நிலைமை உருவாகியுள்ளது. பிரதமர் ஒருவரும் அமைச்சரவையும் இருந்தும் கூட அதன் செயற்பாடுகள் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளன. நாட்டின் நிருவாகம் ஜனாதிபதியிடம் மட்டுமே உள்ள நிலைமை உருவாகியுள்ளது. எக்காரணம் கொண்டும் மகிழ்ச்சியடையக்கூடிய காரணியல்ல இது. ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும். நாட்டில் தனி நபரின் கீழான ஆட்சி இடம்பெறுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. அவ்வாறான தனி நபர் ஆட்சி இந்த நாட்டுக்கு எப்போதும் அவசியமிலலை. கடந்த சில தினங்களாக பிரதமர், அமைச்சரவை இல்லாது முழுப் பொறுப்பையும் நான் மிகவும் பொறுப்புடன், பொறுமையுடன், சரியாகவும்  செய்து வருகின்றேன். ஆகவே இந்த நிலைமையை நீதிமன்றம் கருத்திற்கொண்டு நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்தவும், பொருளாதாரத்தை பலப்படுத்தவும், தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தவும் குறிப்பாக ஆண்டு இறுதியில் கொண்டுவரும் வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் நீதிமன்றம் இவற்றை கருத்தில் கொண்டு விரைவாக ஒரு தீர்ப்பினை தருவார்கள் என நான் நம்புகின்றேன்.

நீதிமன்றம் எவ்வாறான தீர்ப்பினை வழங்கினாலும் அவர்கள் வழங்கும் எந்த தீர்ப்பினும் கௌரவமாக ஏற்றுகொள்ள நான் தயாராக உள்ளேன். அந்த தீர்ப்புக்கு அமைய எடுக்க வேண்டிய அரசியல் தீர்மானங்களை நான் முன்னெடுப்பேன். நாட்டினை பலப்படுத்த வேண்டும், ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.