-
சவூதியில் வாழும் 60 ஆயிரம் பேருக்கு மாத்திரமே வாய்ப்பு
-
அனைவரும் தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டும்
-
ஆண் துணையின்றி பெண்கள் யாத்திரை மேற்கொள்ள அனுமதி
-
மூன்று வகையான கட்டண பொதிகள் அறிமுகம்
-
தெரிவாகி 3 மணி நேரத்துக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்
ஏ.ஆர்.ஏ.பரீல்
சவூதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு இவ்வருட ஹஜ் கடமைக்காக விண்ணப்பங்கள் கோரியுள்ள நிலையில் முதல் 24 மணித்தியாலங்களில் 4 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இத்தகவலை சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு வெளியிட்டுள்ளது. இந்த கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் 60 வீதமானவை ஆண்களினதும் எஞ்சிய 40 வீத விண்ணப்பங்கள் பெண்களிடமிருந்தும் கிடைக்கப்பெற்றுள்ளவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்வருடம் 60 ஆயிரம் யாத்திரிகர்களையே சவூதி அரசாங்கம் அனுமதிக்கவுள்ளது. அவர்கள் சவூதி நாட்டவரும் சவூதியில் வாழும் ஏனைய நாட்டவர்களுமாவர்.
புனித பிரதேசத்தினுள் ஹஜ் யாத்திரிகர்கள் முதற் கட்டத்தில் தங்குவதற்காக நிறுவனங்களுக்கு கூடாரங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை இவ்வார இறுதிவரை தொடரும் எனவும் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஏற்பாடுகள் கொவிட் 19 தொற்றிலிருந்தும் யாத்திரிகர்களைப் பாதுகாப்பதற்காக உரிய சுகாதார வழிகாட்டல்களுடன் அவர்களுக்கு தரமான சேவைகள் வழங்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹஜ் விண்ணப்பங்கள் சவூதியில் வாழ்ந்துவரும் எந்த நாட்டினரிடமிருந்தும் பாகுபாடற்ற வகையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என சவூதி அரேபிய ஹஜ், உம்ரா பிரதியமைச்சர் அப்துல் பத்தாஹ் மஸ்ஹட் தெரிவித்துள்ளார். விண்ணப்பித்துள்ளவர்களில் கடந்த 5 வருடங்களுக்குள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை 2021ஆம் ஆண்டில் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ள சவூதி அரேபியாவில் வாழும், உள்நாட்டு வெளிநாட்டு பிரஜைகள் தங்களை ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைக்கு கணினி மூலம் பதிவு செய்துகொள்வதற்கு உரிய தெளிவுகளை சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சு வெளியிட்டுள்ளது.
பெண் யாத்திரிகர்கள் முன்னரைப் போலல்லாது ஆண் துணையின்றி (மஹ்ரம்) ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை மேற்கொள்வதற்கு இவ்வருடம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏனைய பெண்களுடன் இணைந்து யாத்திரை மேற்கொள்ள முடியும்.
‘ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விரும்பும் பெண்கள் தங்களை தனியாக பதிவு செய்து கொள்ள முடியும் என சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சு மூன்று வகையான ஹஜ் பொதிகளை (Package) அறிவித்துள்ளது. முதலாவது பெக்கேஜ் கூடாரங்களில் தங்கியிருக்கும் விரும்தோம்பலாகும். இந்தப் பெக்கேஜுக்குரிய கட்டணம் 12,113 சவூதி ரியால்களாகும். கூடாரங்களில் வித்தியாசமான வசதிகளைக் கொண்டது இரண்டாவது பெக்கேஜ் ஆகும். இதற்குரிய கட்டணம் 14,381 சவூதி ரியால்களாகும். மூன்றாவது பெக்கேஜ் உயர்ந்த கோபுர கட்டிடங்களில் யாத்திரிகர்கள் தங்குவதாகும். அதற்குரிய கட்டணம் 16,560 சவூதி ரியால்களாகும்.
ஹஜ் யாத்திரைக்காக தங்களைப் பதிவு செய்து கொள்வதற்காக அவர்கள் பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- வயதெல்லை 18 – 65க்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
- தேகாரோக்கியம் – நோய்க்கு எதிரான முதலாவது தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவராக, தடுப்பூசி மூலம் குணமடைந்தவராக இருக்க வேண்டும்.
நீடித்த, நாட்பட்ட நோய்களுக்குட்பட்டவர்களாக இருக்கக் கூடாது. - கடந்த ஐந்து வருடங்களுக்குள் ஹஜ் கடமையை நிறைவேற்றாத சவூதி நாட்டவர்களாக, அல்லது சவூதி அரேபியாவில் வாழும் ஏனைய நாட்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறானவர்களுக்கே ஹஜ் யாத்திரைக்காக தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.
பதிவுகள் ஜூன் 13 முதல் ஜூன் 23 வரை http://localhaj.haj.gov.sa ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஜூன் 25ஆம் திகதியிலிருந்து ஹஜ் பதிவுகள் வகைப்படுத்தப்பட்டு நிறைவு செய்யப்படும்.
தெரிவு செய்யப்பட்ட பதிவுகளுக்கு உரியவர்கள் தாம் தெரிவு செய்த பெக்கேஜுக்கான கட்டணத்தை, தெரிவு செய்யப்பட்டு 3 மணி நேரத்துக்குள் செலுத்த வேண்டும். இல்லையேல் பதிவு இரத்துச் செய்யப்படும்.
தெரிவுகள் யாத்திரிகரின் தேகாரோக்கியம் மற்றும் வழமையான சுகாதார தரங்களுக்கு அமைய இடம்பெறும். குறிப்பிட்ட வயதுக்குட்பட்டவர்களின், விண்ணப்பங்களில் முன்பு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளாத விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் சவூதி அரேபிய ஹஜ் , உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் 60 ஆயிரம் பேருக்கு ஹஜ் கடமைக்காக அனுமதி வழங்குவதாக அமைச்சு தெரிவித்திருந்தது. அவர்கள் சவூதி நாட்டவர்களும், சவூதி அரேபியாவில் வாழும் வெளிநாட்டவர்களும் எனக் குறிப்பிட்டிருந்தது.
சவூதி அரேபியா முன்னரைப் போன்று ஹரம் ஷரீப் பள்ளிவாசல் மற்றும் நபிகள் நாயகத்தின் மதீனா பள்ளிவாசல்களில் தங்கள் ஹஜ் மற்றும் உம்ரா கடமையை நிறைவேற்றும் வகையிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ எனவும் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இவ்வருட ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்பங்களை இரத்துச் செய்துள்ளதாக கடந்த வாரம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli