(எம்.ஐ.அப்துல் நஸார்)
முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் வடக்கு ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி அகற்றும் அமைப்பின் வளாகத்தில் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 10 பணியாளர்கள் கொல்லப்பட்டதோடு 16 பேர் காயமடைந்தனர்.
பக்லான் மாகாணத்தில் உள்ள ஹாலோ டிரஸ்ட் தொண்டு முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இத் தாக்குதல் நடத்தப்பட்டபோது 110 பணியாளர்கள் தங்கி இருந்தனர்.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட அவ்வமைப்பின் தலைமை நிறைவேற்றதிகாரி ஜேம்ஸ் கோவன், சர்வதேச ஊடகமொன்றிடம் தகவல் தெரிவிக்கையில், துப்பாக்கிதாரிகள் ‘ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சேர்ந்தவர்களை தனியாக இலக்கு வைத்துள்ளனர்’ எனத் தெரிவித்தார்.
புதன்கிழமை இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளதாக SITE புலனாய்வு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, இத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பே பெறுப்பு என அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது, எனினும் குறித்த ஆயுதக் குழு அதனை மறுத்திருந்தது.
குறித்த தினத்தில் அந்த பகுதியில் கண்ணி வெடிகளை அப் பிரதேசத்திலிருந்து அகற்றியதன் பின்னர் பணியாளர்கள் வளாகத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர உண்மையில் தலிபானின் போராளிகள் உதவியதாக ஹாலோ டிரஸ்ட் அமைப்பு தெரிவித்திருந்தது.
‘உண்மையில் உள்ளூர் தலிபான்கள் எமக்கு உதவினார்கள், தலிபான்களும் பொறுப்பை மறுத்துவிட்டனர் – எனவே இது வேறு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்பது என் சந்தேகம்’ என கோவன் தெரிவித்தார்.
ஐந்து அல்லது ஆறு ஆயுததாரிகள் வளாகச் சுற்றுமதில் மேலாக ஏறி உள்ளே வந்து அனைவரையும் ஒன்று சோர்த்து ஹசாரா இனத்தவர்கள் யாரேனும் இருக்கின்றனரா என வினவியதாக தாக்குதலில் இருந்து தப்பிய ஒருவர் சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்தார்
‘அதற்கு யாரும் பதிலளிக்கவில்லை,’ என தன்னை அடையாளப்படுத்த விரும்பாத ஒருவர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வளாகத் தலைவரிடம் அவரை யாரென்று கூறுமாறு கேட்டுவிட்டு அவரைச் சுட்டுக் கொன்றார்.
‘பின்னர் ஆயுததாரிகளுள் ஒருவன் ‘அனைவரையும் கொல்லுங்கள்’ என்று கூறினான், அவர்கள் அனைவரும் எங்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள், நாங்கள் அனைவரும் தப்பிக்க முயன்றோம். சிலர் கொல்லப்பட்டனர், என்னைப் போலவே சிலர் காயமடைந்தனர்.’ என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் 30 மில்லியன் மக்கள் தொகையில் 15 சதவிகிதம் வரையானோர் ஷியா ஹசாரா சமூகத்தினராவர். இச் சமூகத்தினர் ஐ.எஸ் பயங்கரவாதிகாளால் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்படுகின்றனர்.
தாக்குதலுக்குப் பின்னர் உயிர்பிழைத்த தொழிலாளர்களுள் பெரும்பாலானோர் அருகிலுள்ள கிராமங்களுக்கு தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்களுக்கு உதவுவதற்காக பொலிஸார் செயற்பட்டு வருவதாகவும் அப்பகுதியில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.- Vidivelli