கனடாவில் முஸ்லிம் குடும்பம் ஒன்று மீது திட்டமிட்டு வாகனத்தால் மோதி படுகொலை
நால்வர் மரணம்; 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்
ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதிஹா சல்மான் (44), சல்மான் அஃப்சல் (46), யாம்னா அஃப்சல் (15), அஃப்சலின் 74 வயது தாய் ஆகியோர் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலை தொடர்பாக 20 வயதான கனேடிய நபர் மீது கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் என்பதற்காகவே அவர்கள் தாக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி பால் வைட் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்கள் மோதிக் கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நடந்த தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல் என்று கண்டித்தார்.
இது தொடர்பாக கனடா பாராளுமன்றத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, இது இந்த நாட்டில் வெறுப்புணர்வுக்கோ இனவாத போக்குக்கோ இடமில்லை என கருதுவோர் உண்டென்றால், பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குழந்தையின் முகத்தைப் பார்த்து எப்படி என்னால் அதை தெரிவிக்க முடியும்? இஸ்லாமோஃபோபியா என்பது உண்மையில்லை என்பதை எப்படி அந்த சிறாரின் குடும்பத்தினரின் கண்களைப் பார்த்து என்னால் எப்படி தெரிவிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
கொரோனா பெருந்தொற்றால் மாதக்கணக்கில் வீடுகளிலேயே முடங்கிக் கடந்த கனடா மக்களுக்கு தற்போது பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வந்து தூய்மையான காற்றை சுவாசித்தபடி நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், குடியேறி முஸ்லிம் குடும்பத்தை இலக்கு வைத்து டிரக் மோதி நடந்த தாக்குதல் கனடாவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
2017ஆம் ஆண்டு க்யூபெக் பள்ளிவாசலில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நடந்திருக்கும் மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.- Vidivelli