பர்தாவும் கல்வியும்

0 1,515
  • இப்னு செய்யத்

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின்பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்றி நடப்பதென்பது அடிப்படை உரிமையாகும். இதனைத் தடை செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அந்தவகையில் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், அலுவலங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் முதல் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அவர்களின் மத விழுமியங்களைப் பின்பற்றி உடைகளை அணிந்துகொள்ள பூரண சுதந்திரமுள்ளது. இச்சுதந்திரத்தை யாராவது தடைசெய்ய முற்பட்டால் அல்லது இடையூறு விளைவித்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் முடியும். ஆனால், ஒருசில அதிகாரிகள் இனவாத ரீதியாக சிந்தித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, இவர்கள் முஸ்லிம்களை இலக்குவைத்து அவர்களின் மத விழுமியங்களை பின்பற்றுவதற்கு இடையூறுகளையும், தடைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் முஸ்லிம் ஆண்களை விடவும் பெண்களே அதிக தொல்லைகளுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் மதவிழுமியங்களுக்கு மாற்று மதத்தினர்தான் இடையூறாக இருக்கின்றார்கள் என்றால் ஒருசில இடங்களில் முஸ்லிம் அதிகாரிகளும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அவர்களிடம் இஸ்லாமிய நடைமுறைகள் முற்றாக இல்லாதிருப்பதனாலும் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகையவர்கள் இஸ்லாமிய மத விழுமியங்களை பின்பற்றாதிருப்பது அவர்களின் சுயவிருப்பம். அதில் தலையிட முடியாது. ஆனால், அவர்கள் இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றி நடக்கின்ற முஸ்லிம்களின் சுதந்திரத்தில் தலையீடு செய்து காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது. இத்தகையவர்களின் மீது முஸ்லிம் அரசியல் தலைமைகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பர்தாவுக்கு தடை

முஸ்லிம் மாணவிகள் பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக செல்லும்போது தமது கலாசாரத்தை பேணும் வகையில் பர்தா அணிந்துகொண்டு செல்வது வழக்கமாகும். இதேபோன்று பாடசாலைகளில் ஆசிரியைகளாகக் கடமையாற்றுகின்றவர்களில் பெரும்பாலானவர்களும் பர்தா அணிந்துகொண்டு செல்கின்றார்கள். மட்டுமன்றி, வேறு அரச மற்றும் தனியார் அலுவலங்களில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்களும் பர்தா அணிந்துகொண்டு செல்லுகின்றார்கள்.

இவ்வாறு முஸ்லிம் பெண்கள், மாணவிகள் பர்தா அணிந்து கொண்டு செல்வதனை ஒருசில இனவாதிகள் கேள்விக்குட்படுத்திய சம்பவங்கள் நாட்டின் பல இடங்களில் நடைபெற்றுள்ளன. முஸ்லிம் ஆசிரியைகள், மாணவிகளுக்கு இத்தகைய சம்பவங்கள் மாற்று மதத்தவர்கள் பெரும்பான்மையாக கல்வி பயிலும் ஒருசில பாடசாலைகளிலேயே இடம்பெற்றுள்ளன.

மேலும், பொதுபலசேன போன்ற பௌத்த இனவாத அமைப்புக்கள் பர்தாவுக்கு எதிராகப் பல கருத்துக்களை முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் போதும், பர்தாவுடன் பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகளை பர்தாவை கழற்றுமாறு பரீட்சை மேற்பார்வையாளர்கள் கேட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன.

அத்தகையதொரு சம்பவம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2018 – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்போது நடைபெற்றதாக தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அநுராதபுர மாவட்டத்திலுள்ள கனேவல்பொல முஸ்லிம் வித்தியாலயம், பமுனுகம முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் மேற்படி பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் தாம் அணிந்திருந்த பர்தாவை கழற்றிவிட்டு பரீட்சைக்குத் தோற்றுமாறு மேற்பார்வையாளர்கள் பணித்துள்ளனர். இச்சம்வபம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் பத்திரத்திற்கு தோற்றுவதற்காக மாணவிகளில் பலர் பல மைல்களுக்கு அப்பாலுள்ள தமது வீடுகளுக்கு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்குத் தோற்றியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வடமத்திய மாகாண அமைப்பாளர் எச்.எம்.சமீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பரீட்சை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் எச்.எம்.சமீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சாதாரண தரப் பரீட்சைக்கு பர்தா அணிந்து தோற்றும் முஸ்லிம் மாணவிகள் தொடர்பில் குரல்கள் இயக்கம் இணையதளங்களின் மூலமாக பின்வருமாறு தெரிவித்துள்ளது.

கலாசார ஆடைகளை அணிந்து கொண்டு வரும் மாணவிகள் தங்களின் ஆடை சம்பந்தமாக ஏதாவது பிரச்சினைகளை ஏற்படுத்தினால் அவர்களின் தகவல்களை குறிப்பேட்டில் எழுதி உரிய அலுவலகங்களுக்கு அனுப்புமாறு பரீட்சைக் கண்காணிப்பாளர்களுக்கு உத்தியோகபூர்வமற்ற வகையில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும், அதன்மூலம் அந்த மாணவிகளின் பெறுபேறுகளில் பாதிப்பு செலுத்துகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் குரல்கள் இயக்கத்திற்கு நம்பத்தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன என்று குரல்கள் இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாணவிகளுக்கு கலாசார உடை சம்பந்தமாக ஏதாவது பிரச்சினைகள் எற்பட்டால் 0766484119 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அந்த இயக்கம் கேட்டுள்ளது.

குரல்கள் இயக்கத்தின் இவ்வறிக்கையில் உள்ள மிகப்பெரிய ஆபத்து கலாசார ஆடை சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்படும் போது அந்த மாணவிகள் பற்றி குறிப்பேட்டில் எழுதுவதென்பதாகும். குறிப்பேட்டில் என்ன எழுதப்படுகின்றது என்பது மாணவிக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அவ்வாறு எழுதப்படும் பட்சத்தில் சில வேளைகளில் பெறுபேறுகள் வராமலிருப்பதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குரல்கள் இயக்கத்தின் இவ்வறிக்கை உண்மையாயின் முஸ்லிம் மாணவிளே பாதிக்கப்படுவார்கள். மேலும், குரல் இயக்கத்தின் கருத்துப்படி பர்தாவுக்கு தடைகளை ஏற்படுத்தக்கூடிய மறைமுகமானதொரு ஆதரவை மாகாண கல்வித் திணைக்களம் வழங்கியுள்ளதென்று அறிய முடிகின்றது.

மேலும், கடந்த 2017ஆம், 2016ஆம் ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தில் ஒருசில இடங்களில் பரீட்சைகளின்போது இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால், இவ்வருடம் அத்தகைய சம்பவங்கள் நடைபெறவில்லை. கலாசார ஆடை பற்றிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் மாணவிகள் பற்றி குறிப்பேட்டில் எழுதுவதற்கு உத்தியோகபூர்வமற்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பணிப்புரைதான் இதற்கு காரணமா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. எவ்வாறு இருந்தாலும் இதிலுள்ள உண்மைத்தன்மையை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தான் கூறுதல் வேண்டும்.

மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிக்கை

இதேவேளை, கடந்த 2018 ஏப்ரல் மாதம் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் பர்தாவை அணிந்துவரக் கூடாதென்று பாடசாலையின் அதிபரினால் கட்டளையிடப்பட்டது. இதனால், பெரிய சர்ச்சைகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இவ்விவகாரம் தொடர்பில் மத்திய கல்விமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களத்தினால் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விசாரணை தொடர்பில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் மத்திய கல்வி அமைச்சுக்கு ‘முறைப்பாட்டு இலக்கம்  HRC/TCO/27/2018’ என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில் மேற்படி பர்தா சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியைதான் குற்றமிழைத்துள்ளார் என்பது போல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதம் 2018 நவம்பர் 08ஆம் திகதி எழுதப்பட்டு மாகாண கல்விப் பணிப்பாளரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘மேற்படி விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 26.10.2018ஆம் திகதியிட்டு எமக்கு முகவரியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைப்படி விசாரணை முடியும் வரை முறைப்பாட்டாளர்கள் அவர்களது நிரந்தர சேவை இடமான தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் (தேசிய பாடசாலை) கடமையாற்ற வேண்டும். (இணைப்பு – 01)

இந்த அபாயா தொடர்பான பிரச்சினையானது இனங்களுக்கு இடையே இறுக்கமான நிலையை தோற்றுவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இடைக்கால நிவாரணத்தை அமுல்படுத்தி மீண்டும் இவ்வாசிரியர் தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் தேசிய பாடசாலைக்கு சேவையாற்ற அனுமதிக்கும் போது கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளின் பாதிப்பு இப்பாடசாலையில் மட்டுமல்லாது வேறு பாடசாலைகளிலும் ஏற்பட வாய்ப்புண்டு.

மேலும், நிரல் கல்வி அமைச்சின் சுற்று நிருபம் 2012/37 பிரிவு 5.6 இன் அடிப்படையில் இப்பாடசாலையின் பொதுமக்களின் நம்பிக்கையினை இவ் ஆசிரியர்கள் வெல்லவில்லை என்பதும் பிரிவு 5.7 இன்படி, அடிப்படையில் பாடசாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய கொள்கைகளை அமுல்படுத்த உதவவில்லை என்பதையும் பிரிவு 6.1 இன் அடிப்படையில் மோதலைத் தவிர்த்துக் கொள்வதற்கு முயலவில்லை என்பதையும் அறியக் கூடியதாகவுள்ளது.

மேலும், இலங்கை தாபன விதிக் கோவை II ஆம் தொகுதி  XI,VII ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் 1.5 இல் இவர்களின் செயற்பாடுகள் தனிப்பட்ட கருமங்களுக்கும் அரச கருமங்களுக்குமிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கக்கூடிய நிலைமைகளையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி அறியத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிமை மறுப்பு

மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கடிதம், தொடர்புடைய ஆசிரியைகளின் அடிப்படை உரிமையை மீறும் ஒன்றாக இருக்கின்றது.  ஒருவர் தாம் விரும்பும் மதத்தையும், அதன் கலாசாரத்தையும் பின்பற்றுவதற்கு அரசியல் யாப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்டையில்தான் முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்பித்துக் கொண்டிருக்கும் இந்துப் பெண் ஆசிரியைகள் அவர்களின் கலாசாரத்தின்படி ஆடை அணிந்து செல்லுகின்றார்கள். மாகாண கல்விப் பணிப்பாளரின் கடிதத்தின்படி முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் இந்து பெண் ஆசிரியைகள் பர்தா அணிந்து வர வேண்டுமென்று அதிபர் பணித்தால் அந்த ஆசிரியை பர்தா அணிந்து செல்ல வேண்டுமென்பதாகவே இருக்கின்றது. இதுவொரு பிழையான வழிகாட்டுதலாகவும் இருக்கின்றது.

மேலும், மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கடிதத்தின்படி ‘அபாயா தொடர்பான பிரச்சினையானது இனங்களுக்கு இடையே இறுக்கமான நிலையை தோற்றுவித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை மூலமாக குறிப்பிட்ட முஸ்லிம் ஆசிரியைகள்தான் இன இறுக்கத்தை தோற்றுவித்த காரணகர்த்தாக்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றது. நாட்டில் இன இறுக்கம் நீண்டகாலமாக இருந்து கொண்டிருக்கின்றது. இதனால்தான் மிகப்பெரிய சிவில் யுத்தம் சுமார் 30 வருடங்களாக நீடித்தது. ஆதலால், மாகாண கல்விப் பணிப்பாளர் ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை முன்வைத்துள்ளார். மேலும், முஸ்லிம்களின் கலாசாரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இனவாதிகளினால் அநாகரிக்க தர்மபால காலம் முதல் நடைபெற்று வருகின்ற வரலாற்று உண்மையை யாரும் மறுதலிக்க முடியாது.

பாடசாலைகளுக்குத் தனிப்பட்ட கலாசாரங்கள் இருக்கின்றன. மாணவர்களுக்கு சீருடை இருக்கின்றன. ஆனால், ஆசிரியர்களுக்கு சீருடை கிடையாது. அவர்கள் தங்களின் கலாசாரத்திற்கேற்ப ஆடை அணியலாம். அந்த ஆடை ஒழுக்கத்தை பேணியதாக இருக்க வேண்டும். கிறிஸ்தவ கன்னியாஸ்த்திரி ஒருவர் எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியையாக நியமிக்கப்பட்டால் அதனை தடை செய்வதில்லை. அவர் முஸ்லிம்களைப் போன்றே உடை அணிந்துள்ளார். இந்த அனுமதிகூட அவருக்கு இருக்கின்ற அடிப்படை உரிமையாகும். நாட்டில் காமத்தை தூண்டக்கூடிய கவர்ச்சியான ஆடைகளை பெண்கள் அணிந்துகொண்டு செல்வதற்கு அனுமதி இருக்கின்ற போது கவர்ச்சியல்லாத மதவிழுமியத்தின் அடிப்படையிலான உடையை அணிந்துகொள்வதற்கு அனுமதி மறுப்பதென்பது முஸ்லிம் ஆசிரியைகளின் உரிமையை வேண்டுமென்று மறுப்பது மட்டுமல்லாது இன ரீதியான சிந்தனையுமாகும். மேலும், ஒருவர் எக்காரணம் கொண்டும் தமது மத உரிமையை மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பதற்கு இடமில்லை.

முஸ்லிம் மாணவிகள் மாற்று மதத்தினர் பெரும்பான்மையாக கல்வி கற்கும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளைகளில் அவர்களின் பர்தாவுக்கு பாடசாலையின் அதிபர்களினால் தடை விதிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனை ஆட்சேபித்து நீதிமன்றம் சென்ற போது, நீதிமன்றம் பர்தா அணிவதற்கு அனுமதியளித்தது.

உயர் நீதிமன்றம் 2014.07.24ஆம் திகதி வழங்கிய தீர்ப்பின்படி எந்தவொரு பிரஜையும் தமது முக அடையாளங்களை மறைக்காத வகையிலான கலாசார ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் கே.ஸ்ரீபவன் (இவரும் பிரதம நீதியரசராக கடமையாற்றியவர்), நீதியரசர் பிரிந்த ஜயவர்தன ஆகிய மூவர் கொண்ட குழுவே இந்த தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சண்முக இந்து மகளிர் தேசிய பாடசாலையில் கற்பித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு சிபார்சு செய்துள்ளது. காரணம், பர்தா அணிவது மனித உரிமையாகும் என்று மனித உரிமைகள் ஆணைக் குழு முடிவு செய்துள்ளது. இந்த நிவாரணத்தைக்கூட மாகாண கல்விப் பணிப்பாளர் மறுத்துள்ளார்.

மேலும், முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாசாரப்படி பர்தா அணியலாம். அவற்றை கழற்றி வீசிவிட்டு பாடசாலைக்கு வரவேண்டிய எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. எல்லா சமூகத்தவர்களும் தமக்கே உரித்தான பாரம்பரிய கலாசார விழுமியங்களையும், பண்பாடுகளையும் சிறப்பாகப் பேணிப் பாதுகாத்து அதன்படி நாட்டில் வாழ்வதற்கு எல்லா உரிமைகளும் உள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.

பர்தா எனும் ஆடை முஸ்லிம் பெண்களது இஸ்லாமிய, கலை கலாசார ஆடையாகும். அதனை அவர்கள் அணிவதற்கு உரிமை உண்டு. எனினும் அதனை அணிய வேண்டாமென சொல்லி தடைவிதிக்க யாராலும் முடியாது என்று முன்னாள் கல்வி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அகிலவிராஜ் காரியவசம் மருதாணை அல் – ஹிதாயா வித்தியாலயத்தின் பழைய மாணவரான எம்.சி.புகார்டீனின் சொந்த நிதியில் (ரூபா 50 இலட்சம்) பாடசாலைக்கான கூட்ட மண்டபம் மீள நிர்மாணிக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட ஒரு மண்டபமாக மாற்றியமைக்கப்பட்ட வைபவத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

ஆகவே, ஒரு முஸ்லிமாக இருக்கின்ற கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இருக்கின்ற பர்தா அணியும் உரிமையை சண்முகா இந்து மகளிர் தேசிய பாடசாலையில் ஏற்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சுக்கு எழுதிய கடிதத்தின் மூலமாக மறுதலித்துள்ளார். இதன் மூலமாக அவரே ஓர் அடிப்படை உரிமை மீறல் பிரச்சினையை தோற்றுவிப்பதற்கும், பர்தா அணியக் கூடாதென்று உரிமை மறுப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், அவர்களின் போராட்டத்தை நியாயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஆதலால், இது விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்றந உறுப்பினர்கள் தமது கவனத்தை செலுத்தவேண்டும். தமது விரல்களே கண்களை குத்துவதற்குத் தயாராக இருக்கின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.