கொவிட் 19 தொற்று மூன்றாவது அலை: முஸ்லிம் சமூகத்தில் மரண வீதம் அதிகரிப்பு
செயற்திறன் மிக்க முன்னெச்சரிக்கை தேவை என முஸ்லிம் சிவில் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்து
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக முஸ்லிம் சமூகத்தில் மரண வீதம் அதிகமாக காணப்படுவது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள், மஸ்ஜித் நிர்வாகிகள் தங்கள் பிரதேசத்திலும் மாவட்ட மட்டத்திலும் கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு செயற்திறன் மிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அந்தந்த பகுதிகளில் வைரஸ் பரவுவது குறித்து தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தேசிய சூரா கவுன்ஸில், சூபி தரீக்காக்களின் சுப்ரீம் கவுன்ஸில், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே இஸ்லாமி, மர்கஸ் இஸ்லாமிய நிலையம், சோனக இஸ்லாமிய கலாசார நிலையம், அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் பெண்கள் அமைப்பு, இஸ்லாமிய கற்கை நிலையம், அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பு, ஸம்ஸம் பவுண்டேசன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் சிவில் சமூகம், ஸ்ரீ லங்கா கதீப், முஅத்தின் நலன்புரி சங்கம், கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஸ்ரீ லங்கா மலே அமைப்பு, ஸ்ரீ லங்கா மேமன் அமைப்பு, முஸ்லிம் பெண்கள் கற்கை வட்டம் உட்பட பல சிவில் சமூக அமைப்புகள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளன.
கூட்டாக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘கொவிட் 19 தொற்று ஏற்பட்டால் அதை உடனடியாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு (PHI) அறிவிக்க வேண்டும். அத்தோடு அது சம்பந்தமாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அல்லாஹ்வின் பக்கம் மீண்டு, தற்போது ஏற்பட்டிருக்கும் இந்நிலைமையை சீராக்கவும், நாமும் நமது நாடும் இயல்பு நிலைக்கு திரும்பவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
கொவிட் 19 தொற்றின் மூன்றாவது அலை மிகவும் ஆபத்தானதாக காணப்படுகிறது. அதன் காரணமாக ஒவ்வொரு நாளும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் மரண வீதம் அதிகமாக காணப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
நிலைமை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வரும் காரணத்தினால் கொவிட் 19 னால் ஏற்படும் ஜனாஸாக்களின் வீதத்தையும் புள்ளிவிபரங்களையும் கவனத்தில் கொண்டு, இவ்விடயத்தில் மிக அக்கறையுடனும், விழிப்புடனும் இருக்குமாறு அனைவரிடமும் அன்பாக வேண்டுகிறோம்.
முஸ்லிம் சமூகத்தை தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு ஆர்வமூட்டுமாறு வேண்டிக் கொள்கிறோம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. -Vidivelli