கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
முன்னுரை
முன்னொரு காலத்தில் இலங்கை மங்கையரின் வதனங்களின் வசீகரத்தைக் கண்டு மயங்கிய அரேபியா இந்த நாட்டை செம்பவளப் பூமி (ஜெசீரதுல் யாகூப்) என அழைத்தனர். பிற்காலத்து வரலாற்றாசிரியர்களோ இந்து சமுத்திரத்தின் முத்து என இலங்கையை வருணித்தனர். பிரித்தானிய எழுத்தாளர்கள் இந்தியாவின் கழுத்து மாலையில் தொங்கும் பதக்கம் என்றனர். இன்றோ இந்தியாவின் கோகினூர் இரத்தினம் பிரித்தானியாவசம் சிக்கியதுபோன்று இலங்கையெனும் இந்து சமுத்திர முத்து சீன ராஜதந்திரத்தினால் சீனாவின் கழுத்து மாலையில் ஜொலித்துத் தொங்குகிறது. இந்த முத்து எவ்வாறு சீனாவின் அணிகலனாக மாறியது? அதனை இலங்கை அரசினர் சீனாவிடம் அடகு வைத்தனரா விற்றுவிட்டனரா? அதனை சீனாவிடமிருந்து காப்பதற்கு யார் யார் முயற்சிக்கின்றனர் என்பனவற்றைச் சுருக்கமாக இக்கட்டுரை ஆராய்கிறது.
உள்நாட்டுப் போரும் சீன நுழைவும்
இலங்கையில் உள்நாட்டுப்போர் தொடங்கிய காலம் தொட்டு இதுவரை இடம்பெற்ற அத்தனை அரசியல் நிகழ்வுகளினதும் மாற்றங்களினதும் பின்னணியில் இழையோடி நிற்கும் ஓர் அம்சம் இலங்கைக்குள் படிப்படியாக ஊடுருவி பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து நிற்கும் சீனச் செல்வாக்கு. இதனை செல்வாக்கென சாதாரணமாக விபரிப்பதைவிட சீன வலைவீச்சென விதந்தழைப்பது பொருந்தும். அந்த வலைக்குள் சிக்குண்டு தவிக்கிறது இந்த நாடு. இது எப்போது யாரால் எவ்விதம் ஆரம்பிக்கப்பட்டது?
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு ஆயுதப்போர் செய்யத் தொடங்கியபோது புலிகளை ஒரு பயங்கரவாதக் கும்பலாகக் கணித்து, அவர்களின் இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கமாகக் கருதி, அதற்கெதிராகத் தடைவிதித்து, அந்த இயக்கத்தைத் தோற்கடிப்பதற்காக ஆயுதங்களையும் வழங்கியது அமெரிக்கா. ஆயுதமேந்திய பயங்கரவாதம் உலகளாவிய ரீதியில் பரவத்தொடங்கியதால் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் அதற்கெதிராகப் போர் தொடுத்த காலம் அது. இலங்கையிலே அப்பொழுது ஆட்சியில் அமர்ந்திருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தன, அமெரிக்க முதலாளித்துவத்தின் செல்லப்பிள்ளையாக இருந்தமையால் இலங்கையுடனான அமெரிக்காவின் நேச உறவு வலுவடையலாயிற்று.
புலிகளுக்கெதிரான அமெரிக்க ஆதரவு ஜெயவர்த்தனவுக்குப் பிறகும் 2005இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற காலம்வரை தொடர்ந்திருந்தது. எனினும், புலிகளுக்கெதிரான போர் ஒரு முடிவற்ற தொடர்கதையாக நீண்டு கொண்டே சென்றதும், சமாதானப் பேச்சு வார்த்தைகள் பலன் தராமற்போனதும் மகிந்த ஆட்சியை எவ்வழியிலாவது, யாரிடம் கடன்பட்டாவது, உலக சந்தையில் ஆயுதங்களை வாங்கிப் புலிகளைக் கூண்டோடு அழிப்பதற்குத் தூண்டியது. மகிந்தவின் இளையோன் நந்தசேனாவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்து அவரது தலைமையில் ஆயுதப்போர் ஒரு கொடூர வடிவத்தைப்பெற்று புதிய உத்வேகத்தை அடைந்தது. ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் அரச இராணுவப் படைகளுக்குப் பலியாகினர். மனித உரிமை மீறல்கள் இருதரப்பிலும் கட்டவிழ்த்து விடப்பட்டன. வடக்கும் கிழக்கும் மயான பூமியாக மாறின. அரச படைகளுக்கும் புலிகளின் தாக்குதல்களுக்குமிடையில் முஸ்லிம் சமூகமும் சிக்கித் தவித்தது. இதனைக் கண்டித்த அமெரிக்காவும் அதன் மேற்கு நேச நாடுகளும் ராஜபக்ச அரசுக்கு வழங்கிய ஆதரவை நிறுத்தலாயின. இது சீனாவுக்குக் கிடைத்த ஓர் வரப்பிரசாதம். சீனச் செல்வாக்கு இங்கேதான் இலங்கையில் கால்பதிக்கத் தொடங்கியது.
அமெரிக்கா இழைத்த வெற்றிடத்தை இந்தியா நினைத்திருந்தால் நிரப்பி இருக்கலாம். உதாரணமாக, 1971இல் சேகுவராவின் மக்கள் விடுதலை முன்னணியினர் திருமதி பண்டாரநாயக்காவின் அரசைக் கவிழ்க்க முயன்றபோது முதன் முதலில் கைகொடுத்து உதவி அந்த அரசைக் காப்பாற்றியது இந்தியா அல்லவா? ஆனால் இந்தப் போர் தமிழருக்கெதிராக நடைபெற்றதால் இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தலையிட்டு தமிழ்நாட்டின் ஆதரவை புதுடில்லி இழக்க விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல், சீனாவின் பிராந்திய ஆதிக்க அபிலாஷைகளையும் இந்திய ராஜதந்திரிகள் குறைவாகவே அப்போது மதிப்பிட்டிருந்தனர்
சீனாவின் எழுச்சி
1976 க்குப் பின்னர் சீனாவில் ஏற்பட்ட பொருளாதாரப் புரட்சி அந்த நாட்டையே உலகின் மிகப்பெரிய கைத்தொழிற்சாலையாக மாற்றியமை யாவரும் அறிந்த விடயம். சீனாவின் பொருளாதார வளர்ச்சி வியத்தகு வேகத்துடன் உயர்ந்து, அதன் மொத்த அளவும் அமெரிக்காவினது பொருளாதாரத்தையும் விஞ்சி நின்றது. வறுமை விரட்டப்பட்டு நாடு செழித்தது. அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகளின் முதலீட்டாளர்களும் வர்த்தக நிறுவனங்களும் சீனாவுக்குப் படையெடுக்கலாயினர் ஆனாலும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசியல் அதிகாரம் மட்டும் அணுவளவும் குறையவில்லை. சந்தைப் பொறிமுறையிலான பொருளாதாரத்தை சீனா தழுவிய போதிலும் சந்தைகள் கிளிக்கூண்டுச் சந்தைகளாகவே அரசின் கட்டுப்பாட்டினுள் இயங்கின. எனவேதான் பொருளியலாளர்கள் சீனப் பொருளாதாரத்தை பறவைக் கூண்டுப் பொருளாதாரம் என அழைக்கலாயினார். எனினும் ஒரு காலத்தில் உலகின் எல்லாப் பாதைகளும் ரோமாபுரியை நோக்கிச் சென்றதுபோல் 1980 களுக்குப்பிறகு அனைத்துப் பாதைகளும் சீனாவை நோக்கியே செல்லலாயின.
இத்தனைக்கும் மத்தியில், அரை நூற்றாண்டுக்கும் மேலாக உலகையே ஆட்டிப்படைத்த பனிப்போரும் முடிவுக்கு வந்த ஒரு காலம் அது. இந்த சூழலிலேதான் சீனத்தலைமைத்துவம் சீனாவை ஒரு வல்லரசாக மாற்றி உலக ஆதிக்கத்தையே கைப்பற்ற முடிவெடுத்தது. அது சாத்தியமாக வேண்டுமாயின் முதலில் சீனாவின் வெளிநாட்டுப் போக்குவரத்துப் பாதைகள் தடைகளற்றதாகப் பாதுகாக்கப்பட வேண்டியிருந்தது. மத்திய காலத்தில் எவ்வாறு தரை மார்க்கமான ஒரு பட்டுப்பாதை சீனப் பொருள்களை மத்திய கிழக்கினூடாக ஐரோப்பாவரை கொண்டு சென்றதோ அதேபோன்று இப்போது நீர்மார்க்கமான ஒரு பட்டுப்பாதை உருவாக்கப்பட வேண்டியிருந்தது. உலகத்தைக் கட்டி ஆளும் ஆசை அன்று சீனாவுக்கு இருக்கவில்லை. இருந்திருந்தால் 14 ஆம் நூற்றாண்டில் சீன முஸ்லிம் தளபதி செங் ஹே இலங்கையின் கோட்டை ராஜதானிக்குள் நுழைந்து அதன் அரசனை நீக்கியபோது சீனா இலங்கையை முற்றாகக் கைப்பற்றி இருக்கலாம். சீனாவுக்கு உலக அதிகார ஆசை அப்போது இருக்கவில்லை. ஆனால் இன்று அந்த ஆசை உண்டு. எனவே, அந்தப் புதிய பாதை பொருளாதார ரீதியில் மட்டுமல்ல ராஜதந்திர ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றது. மேலும், அந்தப்பாதை இந்து சமுத்திரத்தினூடாகச் செல்லவேண்டி இருந்ததால் முதலில் அந்தச் சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம்.
இந்து சமுத்திரம் யாருக்குரியது?
இந்து சமுத்திரம் நீண்டகாலமாக இந்தியாவுக்கே சொந்தமானதொன்று என்று வரலாறும் புவியியலும் கூறுகின்றன. அதனலேதான் காலஞ்சென்ற புகழ்பூத்த இந்திய வரலாற்றாசிரியன் கவளம் மாதவன் பணிக்கர் இந்து சமுத்திரத்தை இந்தியா கட்டியாளாவிட்டால் இந்தியா பொருளாதாரச் செழிப்படைவதும், வர்த்தக வளம்பெறுவதும், கைத்தொழில் வளர்ச்சி காண்பதும், அரசியல் ஸ்திரம் அடைவதும் கடினம் என்று 1945 இல் எழுதி வைத்தார். சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அத்தனை இந்திய அரசுகளும் அதனை ஒரு தாரக மந்திரமாகக் கொண்டிருந்தன. இருந்தபோதும், இந்தியாவின் வடமுனையின் பாதுகாப்பிலேயே அதிகம் கவனம் செலுத்திய இந்தியா தென்முனையிலிருந்தும் எதிர்காலத்தில் நெருக்கடிகள் வளரும் என்பதை சரியாக எடைபோடவில்லை. சீனாவின் எழுச்சியும் அதன் உலகாதிக்க ஆசையும் தென் முனையிலிருந்து இந்தியாவுக்கு ஏற்பட்ட ஒரு புதிய தலை இடி. இந்தியாவுக்கு மட்டுமா?
சீனாவின் மொத்த உலக வர்த்தகப் பெறுமதியில் 60 சதவீதம் தென் சீனக்கடலின் ஊடாகவும், இந்து சமுத்திரத்தின் ஊடாகவும் செல்கின்றது. உலகத்தின் மூன்றிலிரண்டு பங்கு எண்ணெய் பொருள்கள் இந்து சமுத்திரத்தினூடாக நகர்கின்றன. மத்திய கிழக்கின் பொருளாதாரத்தில் எவ்வாறு பாரசீகக்குடா முக்கியத்துவம் வகிக்கிறதோ அதேபோன்று இந்து சமுத்திரம் உலக பொருளாதாரத்தின் உயிர் நாடியாகத் திகழ்கிறது. அத்துடன் இந்து சமுத்திரக்கரை 40 நாடுகளைத் தொட்டு நிற்கின்றது. உலக சனத்தொகையில் 40 சதவீதமான மக்கள் அந்த நாடுகளில் வாழ்கின்றர் அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளான ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பும் அதன் சுதந்திரமும் இன்றியமையாததொன்று. எனவே அந்தச் சமுத்திரத்தை இந்தியா தன்னுடையது மட்டுமென்று இக்காலத்தில் உரிமை கொண்டாடலாமா?
சீனாவின் காலடியில் இலங்கை
அது ஒரு புறமிருக்க, இலங்கை அரசுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவு நிறுத்தப்பட்டதும் அந்த இடைவெளியை நிரப்ப சீனா ஓடோடிவந்தது. போராயுதங்களும் பணமும் ராஜபக்ச ஆட்சிக்குச் சீனாவிலிருந்து வந்து குவிந்தன. அதுமட்டுமல்ல, சீனப் போர் விமானங்களை ஓட்டுமாறு சீனாவின் தோழனாய் மாறிய பாகிஸ்தானையும் சீனா கேட்டுக் கொண்டது. இதனால் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். ராஜபக்ச வெற்றிவாகை சூடினார். சீனா வாழ்த்தியது. இலங்கையோ நன்றிக்கடனாக சீனாவின் காலடியில் வீழ்ந்தது. சீனப் பொறிக்குள் சிக்கியது இலங்கை.
அதன் பிறகு அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி, மத்தளை விமான நிலையம், சங்கிரிலா உல்லாச விடுதி, தாராளமான கடனுதவி என்றவாறு சீனாவின் கால்கள் இலங்கையில் ஆழமாகப் பதியலாகின. இந்தியா வெகுண்டது. எனவே இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக கொழும்புத் துறைமுக கிழக்குக் கொள்கலன் அபிவிருத்தியை இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் வழங்க அரசு முன்வந்தது. ஆனால் அதையும் தடுப்பதற்காக சீனத்தின் தூண்டுதலால் தொழிற் சங்கங்களும் பௌத்த துறவிகளும் அயராத ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அரசாங்கம் பயந்தது. தனது முடிவை மாற்றி, அந்த மகள் சம்மதிக்காததால் இந்த மகளை உனக்குக் கட்டி வைக்கிறோம் என்பதுபோல் துறைமுகத்தின் மேற்குக் கொள்கலன் அபிவிருத்தியை இந்தியாவுக்கு வழங்கியது. அதை இதுவரை இந்தியாவோ ஜப்பானோ ஏற்கவில்லை.
கொழும்புத் துறைமுக நகரா? கொழும்பிலே சீனத் துறைமுக நகரா?
இறுதியாக, சீனா தன் சொந்தச் செலவில் தனது நாட்டு முயற்சியாளர்களையும் தொழிலாளிகளையும் தொழில் நுட்பத்தையும் கொண்டு உருவாக்கிய கொழும்புத் துறைமுக நகர் விரைவில் பூர்த்தியாகப்போகிறது. அந்த நகருக்குள் நடைபெறப்போகும் பொருளாதார, நிதி, முதலீடுகள் அனைத்தும் அரசின் எந்தக் கட்டுப்பாடுகளுமற்ற சுயாதீனமான ஒரு குழுவின் நிர்வாகத்தின்கீழ் நடைபெறும் வகையில் சட்டமியற்றப்பட்டுள்ளது. அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் இப்பொழுது விசாரிக்கின்றது. ஆனால் நீதித்துறையே அரசியல் மயமாக்கப்பட்ட இலங்கையில் அந்த வழக்குகள் யாருக்குச் சார்பாகத் தீர்க்கப்படும் என்பதைப்பற்றி விபரிக்க வேண்டியதில்லை. ஆனாலும் ஒன்றுமட்டும் உண்மை. நூற்றுக்கணக்கான கோடி டொலர்களைச் செலவு செய்து தானே உருவாக்கிய அந்த நகரை இலங்கை உட்பட மற்றவர் பயனடைய சீனா அனுமதிக்கப் போவதில்லை. அந்த நகருக்குள் சீன மொழி நடமாடுவதை அரசாங்கம் தடுக்குமா? சீன மொழி விளம்பரங்களும், சீனத்துக் கிளிகளும், களியாட்டங்களும் அந்தச் சொர்க்க பூமிக்குள் ஜொலித்து விளங்குவதை பௌத்த துறவிகள் ஏற்பார்களா? அந்தத் தனி உலகால் இலங்கையின் இதர பகுதிகளும் மக்களும் என்ன பயனையடையப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதை கொழும்புத் துறைமுக நகர் என்பதைவிட கொழும்பிலே இயங்கும் சீனத் துறைமுக நகரென்பது பொருந்தும்.
நாட்டின் இறைமையைக் காப்பேன் என்று ஜனாதிபதியாகிய நந்தசேன கோத்தாபய ராஜபக்ச அந்த இறைமை இந்த நகருக்குள் செல்லுபடியாகாது என்பதை இப்போது உணராவிட்டாலும் விரைவில் சீனா அவருக்கு அதை உணர்த்தும். சீனப் பொறிக்குள் சிக்கிய இலங்கைக்கு அடிபணிவதைவிட வேறு வழியும் இல்லை.
பிராந்திய இராஜதந்திரச் சுழிக்குள் இலங்கை
இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இந்து சமுத்திரம் தடையற்ற ஒரு நீர்வலயமாக இருப்பது அந்த நாடுகளின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் மிக அவசியம். சீனாவின் இராஜதந்திர மாலையில் இலங்கை, வங்காளதேசம், பாக்கிஸ்தான், மியன்மார் போன்ற நாடுகளின் கரையோரத் தளங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்களாகும். அந்தத் தளங்களை ஆயுதப் பலம்கொண்ட தளங்களாக சீனா மாற்றி இந்து சமுத்திரத்தினைக் கட்டியாள விரும்புகிறது என்ற பயம் மேலே குறிப்பிட்ட நாடுகளுக்குண்டு. இந்த நிலையில் சீனத்தின் செல்லப் பிள்ளையாக இன்றைய இலங்கை அரசு மாறுவதை அவை கவலையுடன் நோக்குகின்றன. அந்தக் கவலையின் ஒரு விளைவே அண்மையில் ஜெனிவாவில் இலங்கைக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் தோல்வியும். அண்மையில் இஸ்லாமிய உலகக் கூட்டுறவு வெளிப்படுத்திய இலங்கைக்கு எதிரான கண்டன அறிக்கை இன்னுமோர் உதாரணம். அதைப்பற்றி அடுத்த கட்டுரையில் ஆராயப்படும்.
யானைகள் மோதினாலும் மோகத்தினால் கட்டிப் புரண்டாலும் நசுங்குவது புல், என்பது உலக வல்லரசுகளின் வரலாற்றில் மறுக்கமுடியாத ஓருண்மை. இலங்கை போன்ற சிறிய நாடுகள் வல்லரசுகளின் எடுபிடிக்குள்ளிருந்து தப்பி ஏதாவது நன்மை பெறவேண்டுமாயின் அதற்குரிய முக்கிய தேவை சிறந்த அரசியல் சாணக்கியம். இலங்கையின் இன்றைய அரசாங்கத்தில் அது பற்றாக்குறையாக உள்ளது என்பதை ஜெனிவா வெளிப்படுத்திற்று.
இந்து சமுத்திரத்தில் இந்தியாவை முன்னிறுத்திய சீனாவுக்கெதிரான பனிப்போரொன்று இப்போது நடைபெறுகின்றது. அது வெஞ்சமராக மாறக்கூடாது என்பதையே உலகம் விரும்புகிறது. ஆனாலும் எதிர்பாராத நிகழ்வுகள் அப்படியான ஒரு போரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காகத் தொடக்கலாம். அந்த எல்லையாக இலங்கை அமையக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு.
சீனாவின் கடனாளி
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான ஒரு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அந்த நெருக்கடியைப்பற்றி இங்கே விபரிப்பது கட்டுரையின் நோக்குக்கு அப்பாற்பட்டது. ஆனால் அது சம்பந்தமாக ஒன்றை மட்டும் உணர்த்த வேண்டியுள்ளது. கொரோனாவின் தாக்கமும் போரினால் பட்ட கடனும் சேர்ந்து இலங்கையின் தேசிய வருமானத்தைப் பாதித்துள்ளன. எனவே ஒருவரிடம் பட்ட கடனை அடைக்க இன்னொருவரிடம் கடன் பெறவேண்டிய நிலையை இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. சீனாவோ கேட்டதும் கொடுக்கும் வள்ளலாக இலங்கைக்குத் தேவையான கடனுதவிகளை வழங்க முன்வந்துள்ளது. அந்தக்கடனை தடுப்பதெப்படி? பொருளாதாரம் துரித வளர்ச்சி காணாதபட்சத்தில் ஏதோ ஒன்றை விற்கவோ அடகு வைக்கவோ நேரிடாதா? அம்பாந்தோட்டையை அடகு வைத்தது அதனால்தானே. கொழும்புத் துறைமுக நகரும் அவ்வாறு மாறலாம் என்பதில் இன்னும் சந்தேகமா?
பாதுகாப்பும் அபிவிருத்தியும்
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது என்று அண்மையில் சமல் ராஜபக்ச கூறியுள்ளார். அந்தப் பாதுகாப்பு நாட்டுக்கு வெளியேயிருந்து வரும் ஆபத்துகளுக்கெதிராகவா? உள்ளேயிருந்து எழும் எதிர்ப்புகளுக்கெதிராகவா? என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. சீனாவின் எல்லை கடந்த ஊடுருவல் நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு பிரச்சினை என்பதை மறுக்க முடியுமா? அவுஸ்திரேலியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சீனப் போர்ப்பறையின் சத்தம் ஓங்கி ஒலிக்கிறதென அண்மையில் கூறியிருந்தார். அந்த ஒலி இலங்கையிலும் கேட்கிறதோ தெரியாது. எதுவாக இருப்பினும் பாதுகாப்பு என்பது அரசுக்குப் பாரிய செலவை ஏற்படுத்தும் ஒரு துறை. தற்போது பாதுகாப்பு என்ற போர்வைக்குள் அரசுக்கெதிராக எழும் எதிர்ப்புகளையெல்லாம் முறியடிக்கும் ஒரு தந்திரமாகவே பாதுகாப்புப்படை பலப்படுத்தப்பட்டு வருவது கண்கூடு. அதனால் பாதிப்படைவது அபிவிருத்தியே. அபிவிருத்திக்கு முடக்கவேண்டிய பணத்தையெல்லாம் படைகளுக்கென்று ஒதுக்கினால் அபிவிருத்தி ஏற்படுமா? உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சுமுகமாகப் பேசித்தீர்த்தால் ஏன் படைகள் மேல் பணத்தை விரயமாக்க வேண்டும்? உலக அளவிலும்கூட இன்று பசிக்கும் வறுமைக்கும் கோடிக் கணக்கான மக்கள் பலியாவது அபிவிருத்திக்குத் தேவையான வளங்கள் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கும் படைகளைப் பெருக்குவதற்கும் செலவாகுவதால் என்பதை அரசியல்வாதிகள் என்று உணர்வார்களோ? இதை வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராய்வோம்.- Vidivelli