பலஸ்தீனின் காஸா மீது இஸ்ரேல் ஒரு வாரத்திற்கும் மேலாக நடாத்தி வரும் தாக்குதல்களில் 200 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மனிதாபிமானமற்ற இந்த கொடூர தாக்குதல்களால் காஸா மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர். அவர்களது உயிர்களும் உடைமைகளும் கணப்பொழுதில் அழிக்கப்பட்டுள்ளன. இப்படியொரு அநீதியும் அவலமும் உலகில் வேறு எங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. இந்த தாக்குதல்களின் போது இழப்புகளைச் சந்தித்த காஸா மக்கள் சிலரின் துயர்மிகு அனுபவங்களையும் கண்ணீர் கதைகளையும் இங்கு தருகிறோம்.
– நதீன் அப்துல் தாயிப்
10 வயது காஸா சிறுமி
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இடிந்து கிடக்கும் இந்த கட்டிடங்களை என்னால் மீளக் கட்ட முடியுமா? எனக்கு இப்போதுதான் 10 வயதாகிறது. நான் ஒரு வைத்தியராக வந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். எனக்கு
பயமாகவுள்ளது. எனது மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் போலுள்ளது. ஆனால் என்னால் முடியவில்லை. இதையெல்லாம் பார்த்து ஒவ்வொரு நாளும் அழுது கொண்டிருக்கிறேன். ஏன் எங்களுக்கு மாத்திரம் இவ்வாறு நடக்கிறது. நாம் என்ன செய்தோம். நாம் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் (இஸ்ரேலியர்கள்) எம்மை வெறுப்பதாக எனது குடும்பத்தினர் கூறுகிறார்கள். நாங்கள் முஸ்லிம்களாக இருப்பது குற்றமா? என்னைச் சுற்றி நிற்கும் சிறுவர்களைப் பாருங்கள். ஏன் எங்கள் மீது ஏவுகணைகளை அனுப்பி கொலை செய்கிறீர்கள்? நீங்கள் செய்வது நீதியல்ல.
****************************************************
– முஹம்மத் அல் ஹதீதி, காஸா
குண்டுத் தாக்குதலில் எனது மனைவியையும் எனது நான்கு ஆண் குழந்தைகளையும் என்னிடமிருந்து பறித்துவிட்டார்கள். இப்போது நானும் எனது 5 மாத ஆண் குழந்தையுமே எஞ்சியிருக்கிறோம்.
ஷுஐப் (வயது 13), யஹ்யா (வயது 11), அப்துர் ரஹ்மான் (வயது 8), ஒஸாமா (வயது 6) ஆகிய எனது ஆண் மக்களும் 36 வயதான எனது மனைவி மஹா அபூ ஹத்தாபுமே என்னைவிட்டும் இறைவனை சந்திக்கப் போனவர்கள். நாங்களும் நீண்ட காலம் இங்கு நிலைத்திருக்க விரும்பவில்லை. யா அல்லாஹ் எங்களையும் விரைவாக உன் பக்கம் அழைத்துவிடு.
பெருநாள் தினம் என்பதால் எனது மனைவி, பிள்ளைகளை எமது உறவினரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பிள்ளைகள் அனைவரும் புதிய ஆடைகளை அணிந்திருந்ததுடன் விளையாட்டுப் பொருட்களையும் தம்முடன் கொண்டு சென்றார்கள். அன்றிரவு அங்கேயே தங்க தாம் விரும்புவதாக பிள்ளைகள் என்னிடம் கெஞ்சிக் கேட்டார்கள். அதற்கு நான் அனுமதி வழங்கினேன். பின்னர் நான் மாத்திரம் வீட்டில் தனியாக உறங்கினேன். அன்றிரவு திடீரென குண்டுச் சத்தங்கள் கேட்டு கண்விழித்தேன். அப்போதுதான் எனது மனைவியும் பிள்ளைகளும் சென்றிருந்த வீடும் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதாக அயலவர்கள் வந்து சொன்னார்கள். அங்கு விரைந்து சென்றபோது இடிந்த கட்டிடத்தை மட்டுமே காண முடிந்தது. மீட்புப் பணியாளர்கள் சடலங்களை வெளியில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டிலிருந்து எனது உறவினரான பெண்ணும் அவரது நான்கு பிள்ளைகளும் கூட மரணித்துவிட்டார்கள்.
*****************************
– முகம்மத் கதாதா, காஸா
“எமது அலுவலகம் அமைந்துள்ள 13 மாடிக் கட்டிடத்தை 2 மணி நேரத்திற்குள் தகர்க்கப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதாக அதன் பாதுகாப்பு அதிகாரி என்னிடம் கூறினார். அந்தக் குறுகிய கால அவகாசத்திற்குள் எமது அலுவலக தளபாடங்கள், ஆவணங்க
ளை வெளியிலெடுக்க நாம் முயற்சிக்கவில்லை. உயிர்களை பாதுகாத்துக் கொள்ளவே முற்பட்டோம். நான் 2017 இல் இந்தக் கட்டிடத்தில்தான் டிஜிட்டல் சேவை நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். இன்று அதில் 30 பேர் பணியாற்றுகிறார்கள். எனக்கு 31 வயதுதான் ஆகிறது. இளம் வயதில் ஒரு தொழில் நிறுவனத்தைக் கட்டியெழுப்பிய எனக்கு இந்த அழிவு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நானும் எனது நிறுவன பணியாளர்களும் அதிர்ச்சியில் உள்ளோம்”
*****************************
– அப்துர் ரப்பு அல் அத்தார், பெய்த் லஹியா
குண்டுவீச்சினால் எனது அயல் வீடு முற்றாக சிதைந்துவிட்டது. அவர்களது அலறல் சத்தம் கேட்டே நாம் வெளியில் வந்தோம். அங்கிருந்த நான்கு சிறுவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். லம்யா, ஆமிர், இஸ்லாம் அல் அத்தார், மொகமட் அல் அத்தார் ஆகிய சிறார்களே உயிரிழந்தவர்கள். நாங்கள் செத்துமடியப் போகிறோம் என்றே நினைத்தோம். இஸ்ரேல் எல்லாவற்றின் மீதும் குண்டு போட்டு தகர்த்துவிட்டது. சுமார் 50 தடவைகள் எமது பகுதியில் குண்டுகள் வீசப்பட்டன.
8 கிலோ மீற்றர் தூரம் கால் நடையாக வந்தே தற்காலிக அகதி முகாம் ஒன்றை அடைந்தோம். நாம் எதையுமே எம்முடன் எடுத்துவரவில்லை. இப்போது எமது வீடுகளும் தரைமட்டமாகியிருக்கலாம்.
அகதி முகாமில் எமது பிள்ளைகள் வெற்றுத் தரையில் தூங்குகிறார்கள். இப்படியொரு இரக்கமற்ற மோசமான தாக்குதலை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை
***************************
– முகம்மது தாபித்,
காஸா மின் விநியோக நிறுவனம்
குண்டுத் தாக்குதல்களால் மின் கட்டமைப்பு முற்றாகச் சேதமடைந்துவி
ட்டது. எரி பொருட்களைக் கொண்டு வருவதற்கான கராம் அபு சலாம் பாதை மூடப்பட்டுள்ளதால் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கையிருப்பிலுள்ள எரிபொருட்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்கே போதுமானவையாகவுள்ளன. இதனால் பல நிறுவனங்களை மூட வேண்டி ஏற்பட்டுள்ளது. கத்தாரின் உதவியுடன் உள்ளூர் சந்தைக்கு தேவையான பெற்றோலை வழங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
******************************
– ஆபித் ஷெமாலி, காஸா
மரணித்தவர்கள் உறங்கும் மையவாடிகளைக் கூட இஸ்ரேல் விட்டு வைக்கவில்லை. இறந்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? மையவாடி மீதான தாக்குதலையடுத்து வீதிகள் எங்கும் எலும்புகளும் உடல் பாகங்களும் சிதறிக் கிடக்கின்றன. எங்கள் உறவினர்களின் அடக்கஸ்தலங்களுக்கு என்ன நடந்ததோ எனப் பார்க்க ஓடி வந்தோம். எச்சங்களைப் பொறுக்கி பைகளில் இட்டு மீண்டும் அடக்கம் செய்தோம்.இஸ்ரேலின் ஆக்கிரமிப்பானது இறந்தவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. எங்களைப் பார்க்க கேட்ககூட யாருமில்லை. ஏன் இந்த அநியாயத்தைச் செய்கிறீர்கள் என இஸ்ரேலைத் தட்டிக் கேட்க யாருமில்லை.
*****************************************************
– அஹ்மத், காஸா
இந்தக் கட்டிடத்தில் சிவிலியன்களே வசித்து வந்தோம். நானும் தந்தையும் நான்கு சகோதரர்களும் இதில் வாழ்ந்தோம். எங்கள் மனைவிமாரும் பிள்ளைகளும் என 15 பேரளவில் இங்கிருந்தோம். எங்கள் கட்டிடத்தை தாக்கப் போவதாக எமக்கு அறிவிக்கவும் இல்லை. அயலவர்களுக்குத்தான் கூறியிருக்கிறார்கள். இது ஒரு நான்கு மாடி குடியிருப்பு. மேலுள்ள இரண்டு மாடிகளை அண்மையில் தான் கட்டி முடித்தோம். எங்கள் இரு இளைய சகோதரர்கள் அண்மையில்தான் திருமணம் முடித்தார்கள். அவர்களது குடும்பம் வாழவே இதனைக் கட்டினோம். அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் தகர்த்துவிட்டார்கள்.
********************************
– அத்லி அல்கொலாக், காஸா
இஸ்ரேலிய விமானங்கள் ஏறக்குறைய காஸாவின் எல்லா வீதிகளிலுமே குண்டுகளை வீசிவிட்டன. கட்டிடங்களும் உட்கட்டமைப்புகளும் முற்றாக சிதைக்கப்பட்டுவிட்டன. எமது பொருளாதாரத்தையும் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் சீர்குலைப்பதே அவர்களது நோக்கமாகும்.
இப்போது எமக்கு குடிநீரைப் பெற முடியவில்லை. கழிவுகளை அகற்ற முடியவில்லை. எந்தவித அத்தியாவசிய சேவைகளையும் எம்மால் பெற முடியவில்லை. வீதிகள் உடைந்து கிடப்பதால் காயமடைந்தவர்களைக் கொண்டு செல்ல வரும் அம்பியூலன்ஸ்களால் உரிய இடத்தைச் சென்றடைய முடியவில்லை. -Vidivelli