எம்.எஸ்.அமீன் ஹுசைன்
பலஸ்தீன மக்களின் சுதந்திரத்தை பூண்டோடு அழித்த பிரகடனமே “பால்போர்” பிரகடனமாகும் (Balfour declaration). இந்த பிரகடனம் செய்யப்பட்டு 2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதியுடன் 103 வருடங்கள் நிறைவடைகின்றது. இந்த 103 வருடங்களும் பலஸ்தீன மக்கள் இறைமைக்காகவும், தன்னாதிக்கம், சுயாதிபத்தியம், நீதி, சமாதானம் மற்றும் சுதந்திரம் என்பவற்றுக்காகவும் போராடி வருகின்றனர். இந்நிலையில் பால்போர் பிரகடனத்தின் பின்னரான பலஸ்தீனில் நீதிக்கான தேடல் என்ற தலைப்பிலான இந்த கட்டுரை பால்போர் பிரகடனத்தின் பின்னணியில் அமைந்துள்ள பல விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதாக அமைகின்றது. காரணம் இப்போது மீண்டும் பலஸ்தீன இஸ்ரேல் மோதல்கள் வலுவடைந்து வருகின்றன. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் தாக்குதல் காரணமாக 250 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர்.
பால்போர் பிரகடனம்
அரபு தேசத்திற்கு சொந்தமான பலஸ்தீன மண்ணில் 1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கமைய யூதர்களுக்கான தனி நாடாக இஸ்ரேல் ஏற்படுத்தப்பட்டது. 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 02 ஆம் திகதி பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளராக இருந்த ஆர்தர் பால்போருக்கும் இங்கிலாந்தில் வாழ்ந்த யூத சியோனிச தலைவனாக இருந்த வோல்டர் ரொட்செல் ஆகியோருக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் உட்படுத்தப்பட்டிருந்த பிரகடனத்தின் அடிப்படையில் அரபு தேசத்திற்கு சொந்தமான பலஸ்தீன நிலப்பரப்பில் பலவந்தமாக இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வு உலக வரலாற்றில் ஒரு இரத்தக்கறை படிந்த நாளாக பதிவாகின்றது. மத்திய கிழக்கில் அமைதிக்கும் சமாதானம், சக வாழ்வு என்ற கோட்பாடுகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்ட நாளாக இது அமைந்தது.
1948 ஆம் ஆண்டு ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட இஸ்ரேலை உருவாக்கும் திட்டத்தை அன்றைய அரபு நாடுகளான எகிப்து, லெபனான், சிரியா, ஈராக், ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்ததோடு இஸ்ரேல் மீது தாக்குதலையும் நடத்தின. அன்று முதல் பலஸ்தீன மண்ணில் இரத்த ஆறு ஓட ஆரம்பித்தது. 1948 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதல் காரணமாக 13,000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 530 பலஸ்தீன கிராமங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதுவரையில் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் தமது நிலங்களில் வாழ்ந்து வந்த சுமார் 750,000 பலஸ்தீனர்கள் அளவில் அவர்களது வாழ்விடங்களில் இருந்து இஸ்ரேல் பலவந்தமாக வெளியேற்றியதால் அவர்கள் அகதிகளாகினர். அன்று ஆரம்பமாகிய அரபு இஸ்ரேல் மோதல் இன்று வரையில் சுமார் 73 வருடங்களாக நிரந்தர தீர்வின்றி தொடர்கின்றது. சுதந்திர பலஸ்தீனுக்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மோதல் காரணமாக அகதிகளாகி அயலில் உள்ள அரபு நாடுகளில் இன்று வரையில் தஞ்சமடைந்திருப்போர் எண்ணிக்கை 70 இலட்சத்திற்கு மேலாகும் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
பால்போர் பிரகடனம் ஏன் வெளியிடப்பட்டது என்பது இந்த பிரகடனத்தின் பின்னணியில் எழுகின்ற வினாவாகும். யூதர்கள் மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் சிதறுண்டு வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கென்று தனியான நாடு இருக்கவில்லை. இங்கிலாந்தில் வாழ்ந்த யூதர்கள் மிகவும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததோடு அந்நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சமூகமாக இருந்தனர். 1915 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரில் இங்கிலாந்திற்கு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் யூத சமூகம் பெருமளவிலான பொருளாதார உதவிகளைச் செய்திருந்தது. அதற்கு பிரதி உபகாரமாக நாடற்ற சமூகமாக இருந்த யூத இனத்திற்கு பலஸ்தீனில் தனியான நாட்டை உருவாக்கித் தருவதாக வழங்கிய வாக்குறுதியாகவே பல்போர் பிரகடனம் அமைகின்றது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அத்துடன் பால்போர் பிரகடனத்திற்கு வழிவகுத்த பிரதான உந்து சக்தியாக அமைந்தது அவுஸ்திரியாவைச் சேர்ந்த யூத சிந்தனையாளரான தியேடோர் ஹேசல் என்பவவரால் முன்வைக்கப்பட்ட யூத இனத்திற்கான தனியான தேசம் அமையவேண்டும் என்ற சிந்தனையாகும். சர்வதேச சியோனிச காங்கிரசின் முதலாவது கூட்டத்தில் இந்த சிந்தனை முன்மொழியப்பட்டது. இது அரபு உலகில் யூதர்கள் “சியோனிச பிச்சைக்காரர்கள்” என்று தாழ்த்தப்பட்ட மிக மோசமான சமூகமாக அழைக்கப்பட்ட காலம்.
பால்போர் பிரகடத்தையடுத்து யூத அரபு மோதல்கள் ஆரம்பமாகின. சட்டம், ஒழுங்கு, அமைதி என்பன சீர்குலைய ஆரம்பித்தது. 1929 ஆம் ஆண்டு பலஸ்தீனில் இடம்பெற்ற மோதல்களில் 133 யூதர்களும் 116 பலஸ்தீனர்களும் பலியாகியதாக தகவல்கள் கூறுகின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் யூதர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. 1918 ஆம் ஆண்டு 10 வீதமாக இருந்த யூத சனத்தொகை 1939 ஆம் ஆண்டு 30 வீதமாக அதிகரித்ததை அவதானிக்க முடிகின்றது.
ஜேர்மனியில் ஹிட்லர் இலட்சக்கணக்கான யூதர்களை கொண்டு குவித்ததால் பால்போர் பிரகடனத்தின் அடிப்படையில் பிரிட்டன் யூதர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய தேவை அவசரமாக உணரப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பலஸ்தீன் உதுமானிய பேரரசின் கீழ் இருந்துவந்த நிலப்பரப்பாகும். இதில் பலஸ்தீனின் வடக்கு ஆக்ரே, நேப்ள்ஸ் ஆகிய மாவட்டங்கள் பெய்ரூட்டின் ஒரு பகுதியாகவும் ஜெரூசலம் மற்றும் பெத்லஹேம் பிரதேசங்கள் நேரடியாக உதுமானியப் பேரரசின் தலைநகரான இஸ்தான்பூலின் கட்டுப்பாட்டிலும் இருந்து வந்தன.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகில் சமாதானத்தை நிலை நிறுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகச் செயலாகவும் பலவந்தமாக இஸ்ரேலை உருவாக்கி மத்திய கிழக்கில் அரபு தேசத்தில் பாரிய முரண்பாட்டிற்கும் மோதல்களுக்கும் வழிவகுத்த சந்தர்ப்பமாகவும் இந்த நிகழ்வு அமைகின்றது.
ஐ.நா. சபை ஏற்படுத்தப்பட்ட நோக்கத்திற்கு நேர் மாற்றமான சட்டவிரோத செயலாகவும் பலஸ்தீன மக்களின் சுதந்திரம், வாழ்வுரிமை, இறைமை, சுயாதிபத்தியம் என்பவற்றை பலவந்தமாக பறித்தெடுத்த சந்தர்ப்பமாகவும் ஐ.நா. சபை 1947ஆம் ஆண்டு முன்வைத்த பலஸ்தீனில் அரபு – இஸ்ரேல் என்ற இரண்டு நாடுகள் தீர்மானமும் 1948ஆம் ஆண்டு பலவந்தமாக ஐரோப்பிய சமூகத்தின் தேவைக்காக இஸ்ரேலை உருவாக்கியமையும் அமைகின்றது. உலகில் நிரந்தர சமாதானத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய முதலாவது நாடாக பிரிட்டனை குறிப்பிடலாம். 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட பால்போர் பிரகடனத்தை உலக சமாதானத்திற்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பிரகடனமாக நோக்க வேண்டியிருக்கின்றது.
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தை ஐ.நா. அமைப்பு வெளியிட்டது. ஆனாலும் அந்த சாசனம் கூறும் எந்தவிதமான விதிகளும் இஸ்ரேலுக்கு செல்லுபடியாவதாக இல்லை. எந்தவொரு சர்வதேச சட்டத்திற்கும் இஸ்ரேல் கட்டுப்படுவதாக இல்லை. பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அனைத்துவிதமான மனித உரிமை மீறல்களையும் அமெரிக்கா உலக அரங்கில் நியாயப்படுத்தி இஸ்ரேலை பாதுகாக்கும் பலமான சக்தியாக இருந்து வருகின்றது. பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்ற நாடு ஏற்படுத்தப்பட்ட பின்னர் ஐ.நா. சபை இதுவரையில் இஸ்ரேலுக்கு எதிராக 77 தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்றது.
1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் கைப்பற்றிய பிரதேசங்களில் இருந்து வெளியேற வேண்டும், பலஸ்தீனர்களின் சுதந்திரம், அடிப்படை உரிமைகள், அரசியல் அதிகாரம் என்பவற்றை அங்கீகரிக்க வேண்டும் என்ற விடயங்களை உட்படுத்தியதாக ஐ.நா. சபை 1962 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி நிறைவேற்றிய தீர்மானமே 242 ஆம் இலக்க தீர்மானமாகும். அதன் பின்னர் 1973 ஆம் ஆண்டு இஸ்ரேலை பலஸ்தீனில் போர் நிறுத்தம் ஒன்றிற்கு வலியுறுத்திய ஐ.நா. சபை 338 ஆம் இலக்க தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனாலும் இஸ்ரேல் அதன் அடாவடித்தனங்களை நிறுத்தவில்லை.
இஸ்ரேலை கட்டுப்படுத்த உலகில் எந்த சக்தியாலும் முடியவில்லை. பலஸ்தீனத்தை அழித்து இஸ்ரேலை பலமடையச் செய்வதே இஸ்ரேலின் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையில் இலட்சக்கணக்கான பலஸ்தீனர்களின் குடியிருப்புக்களை இஸ்ரேல் அழித்திருக்கின்றது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைக்கமைய 6279 பலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு எதிராக எந்த நாடும் எதிர்த்து பேசாத அளவிற்கு உலகில் பக்கசார்பான நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றது. இஸ்ரேல் கடந்த 73 வருடங்களாக மிகவும் பலம்பெற்ற நாடாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. அதற்காக அமெரிக்கா பில்லியன் கணக்கிலான டொலர்கள் நிதி உதவிகளையும் ஏனைய பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளையும் செய்து கொண்டிருக்கின்றது.
அரபு நாடுகளின் முயற்சி
பலஸ்தீனத்தை மீட்பதற்காக எகிப்து தலைமையில் அரபு நாடுகள் 1948, 1956, 1967, 1973 ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. பலஸ்தீனத்தை மீட்டெடுப்பதற்காக பல அமைப்புக்கள் உருவாகின. ஹமாஸ், பலஸ்தீன விடுதலை இயக்கம் உட்பட 10 இற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் பலஸ்தீன விடுதலைக்காக போராடுகின்றன.
பலமுறை சமாதான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. 1967ஆம் ஆண்டு சமாதான மாநாடு, 1977ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மெட்ரிட் மாநாடு, 1993ஆம் ஆண்டு நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை, 2000ஆம் ஆண்டு நடைபெற்ற கேம் டேவிட் உடன்படிக்கை, 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற “தபா” பேச்சுவார்த்தை, 2003 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பயணப்பாதை வரைபடம், 2007 ஆம் ஆண்டு சவுதி ஆரேபியாவின் ரியாதில் நடைபெற்ற பேச்சுவார்த்தை உட்பட பல சந்தர்ப்பங்களை குறிப்பிடலாம். ஆனாலும் எல்லா சந்தர்ப்பங்களையும் இஸ்ரேல் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வந்திருப்பதோடு எந்தநிலையிலும் அதன் பலத்தையும் விட்டுக்கொடுப்பதாக இஸ்ரேல் நடந்துகொள்ளவில்லை. இன்றைய நிலையில் இஸ்ரேல் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றது.
1987 ஆம் ஆண்டு பலஸ்தீன மக்கள் எழுச்சி (இந்திபாதா) காசா மற்றும் மேற்கு கரை பிரதேசங்களில் நீதி மறுக்கப்பட்ட பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தியது. இதன் எதிரொலியாக பலஸ்தீனர்களுக்கு சுயாட்சி வழங்கும் தீர்மானம் ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அது தொடர்பான உடன்படிக்கை 1994 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. பலஸ்தீன சுயாட்சி அதிகாரசபை ஏற்படுத்தப்பட்டு புதிதாக பலஸ்தீன அரசாங்கம் ஒன்றுக்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த அதிகார சபையின் ஜனாதிபதியாக யாசீர் அரபாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இஸ்ரேலின் சதித் திட்டங்கள்
அரபு உலகத்தை ஒற்றுமைப்படாது பிளவுகளை வளர்ப்பதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக செயற்பட்டு வருகின்றன. இஸ்லாமிய நாடுகளான ஈரான், ஈராக், சிரியா, எகிப்து, துருக்கி, சவுதி அரேபியா, லிபியா உட்பட முக்கியமான நாடுகள் ஒற்றுமைப்பட்டால் அதனால் இஸ்ரேலுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்து இஸ்லாமிய ஒற்றுமையை சீர்குலைக்க திட்டமிட்டு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
பலஸ்தீன விடுதலைக்காக குரல் எழுப்பிய, போராடிய தலைவர்களை கொலை செய்வதை இஸ்ரேல் இலக்காக் கொண்டிருந்தது. இஸ்ரேலுக்கு எதிராக செயற்பட்ட எகிப்தின் ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் இஸ்ரேலின் கையாள் ஒருவனால் 1958 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 1982 ஆம் ஆண்டு லெபனானிற்குள் ஊடுருவி பலஸ்தீன விடுதலை இயக்கத்தை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதலால் 17,825 பலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டனர். அகதி முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அப்பாவிகளை கொன்று குவித்தது. 2004 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி ஹமாஸ் இயக்கத்தின் தலைவராக இருந்த ஷெய்க் யாசீனை கொலை செய்தது. பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யசீர் அரபாத்தையும் கொலை செய்ய பல முறை முயற்சித்தது. 2004 நவம்பர் 11 ஆம் திகதி யசீர் அரபாத் மரணமடைந்தார். அவர் இஸ்ரேலினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதாகவே நம்பப்படுகிறது. 2000 ஆம் ஆண்டின் பின்னர் அரேபிய தீபகற்பத்தில் ஏற்பட்ட அமைதியின்மை, முஅம்மர் கதாபி, சதாம் ஹுசைன் மற்றும் பின்லாதின் ஆகியோரின் கொலைகள், சிரியாவிற்குள் ஏற்பட்டுள்ள அமைதியின்மை ஆகியவற்றின் பின்னணியும் இஸ்ரேலின் பாதுகாப்பே ஆகும். ஈராக், லிபியா, சிரியா ஆகிய தேசங்களை குண்டுமழை பொழிந்து ஜனநாயகத்தை பாதுகாப்பது என்ற பெயரில் அமெரிக்கா அழித்தமையும் இஸ்ரேலை பாதுகாப்பதற்கான திட்டம் எனலாம்.
முடிவுரை
103 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டன் செய்த அனைத்துவிதமான சர்வதேச சட்டங்களுக்கும் முரணான முறையில் நிறைவேற்றிய பால்போர் பிரகடனத்தின் விளைவே இவையாகும். கடந்த 103 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீனில் நடைபெறும் அனைத்துவிதமான மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், அழிவுகள், பொருளாதார இழப்புக்கள் அனைத்தையும் இங்கிலாந்தே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறான ஒரு நிலையில் பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு என்ன? அந்த தீர்வை யார் முன்வைப்பது என்பதே இன்றை பிரதான கேள்வியாகும்.
கடந்த ஏழு வருடங்களாக ஓய்ந்திருந்த பலஸ்தீன இஸ்ரேல் மோதல்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளன. இனி மோதல்கள் உக்கிரமடைந்தால் நிலைமை மிக மோசமடையலாம். பிராந்திய நாடுகளும் இந்த மோதல்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒன்றிணையுமானால் அது பாரிய யுத்தமாக மாறும் அபாய நிலை உருவாகியிருக்கின்றது.
இன்றைய நவீன அணு ஆயுத ஏவுகனை காலகட்டத்தில் பலஸ்தீனத்திற்காக இஸ்ரேலை அழிக்கும் நோக்கில் மீண்டும் ஒரு யுத்தம் புரிவதானது எந்தவகையில் சாத்தியப்படும் என்பது பிரதான சவாலாகும். அவ்வாறான ஒரு நிலைக்கு அரபு நாடுகள் முன்வருமானால் அமெரிக்கா தலைமையிலான உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் இஸ்ரேலின் பக்கமே நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறான ஒரு நிலை உருவாகினால் அது நிச்சயமாக மூன்றாம் உலக மகாயுத்தம் என்றே கூறலாம். அதனால் ஏற்படப்போவது சிந்தித்துப் பார்க்க முடியாத அழிவாகும். அவ்வாறாயின் ஆக்கபூர்வமான சமாதான வழியில் பலஸ்தீனத்தில் எல்லைகளில் இஸ்ரேலின் அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டி மக்கள் சுதந்திரமாகவும் இறைமையுடனும் வாழ்வதற்கான உத்தரவாத்தை அடைவதற்கான முயற்சிகளே இன்றைய காலத்தின் தேவையாகும்.- Vidivelli