முஸ்லிம் சமூகத்தைப் பணயம் வைத்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்
ஏ.ஜே.எம்.நிழாம்
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நிகழ்ந்த குண்டுத் தாக்குதல்கள் அரசியல் நோக்கம் கொண்டவையாகும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முடிவாகக் குறிப்பிட்டதுடன் ஜனாதிபதியின் விசாரணைக்குழு அறிக்கை திருப்தி தரவில்லை, முறையான விசாரணை வேண்டும், இன்றேல் சர்வதேசத்தை நாடவேண்டிவரும் எனவும் கூறியுள்ளார். அத்தாக்குதல்களில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்களும் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களும் அழிவுற்றதால் நிகழ்ந்தவை பற்றி இவரது கருத்துக்களே முக்கியத்துவம் பெறுகின்றன.
சர்வதேச முஸ்லிம், கிறிஸ்தவப் பகையின் விளைவே இத்தாக்குதல்கள் என்னும் செய்தி முதலில் பரவலானது. சில முஸ்லிம்களின் பெயர்கள் இதில் அடிபட்டதாலும் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் அழிவுக்குள்ளானதாலுமே அத்தகைய நம்பிக்கை வலுப்பெற்று முஸ்லிம் கிறிஸ்தவக் கலவரம் நேரலாம் என்னும் நிலை ஏற்பட்டது. உடனே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அமைதி காக்கும்படி கிறிஸ்தவர்களிடம் வேண்டிக்கொண்டதால் கலவர சூழல் ஏற்படவில்லை. இது முழுதாக விடயத்தை அறியமுன் விடுத்த வேண்டுகோளாகும். எனினும் முஸ்லிம் விரோதப் பேரினவாதிகள் கிறிஸ்தவ அனுதாபத்தின் பெயரால் சில நகரங்களில் முஸ்லிம்களைத் தாக்கினர். மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அங்கெல்லாம்போய் நிலைமையை சுமுகமாக்கினார். அவர் அவ்விதம் செய்திருக்காவிட்டால் முஸ்லிம் விரோதப் பேரினவாதிகள் கிறிஸ்தவர்களையும் தம்மோடு இணைத்துக்கொண்டு முஸ்லிம்களைப் பேரழிவிற்கு உள்ளாக்கியிருப்பார்கள்.
அவரது அத்தகைய அப்போதைய செயற்பாட்டுக்காக இலங்கை முஸ்லிம் சமூகம் அவருக்கு பெரிதும் நன்றிக்கூறக் கடமைப்பட்டுள்ளது எனக் கூறலாமா? அதே காலகட்டத்தில் அதுரலியே ரத்ன தேரர் கண்டி தலதா மாளிகைக்கு அருகே முஸ்லிம்களுக்கு எதிராக உபவாசம் இருக்க ஞானசார தேரர் முஸ்லிம் அமைச்சர்களையும் ஆளுநர்களையும் நீக்காவிட்டால் களியாட்டம்தான் என்றார். அந்த நிகழ்வில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் கலந்து கொண்டார். பெளத்த சிங்கள யாப்பு, பெளத்த சிங்கள அரசு, பெளத்த சிங்கள அமைச்சரவை என்றெல்லாம் அங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனவே. அங்கு இவர் எதற்காகப் போனார். அந்த கூட்டத்தில் ஞானசார தேரர் முஸ்லிம் விரோதக் கருத்துக்களைக் கடுமையாகப் பரப்புரை செய்து எச்சரிக்கையும் விடுத்திருந்தார். பெளத்த சிங்களவர் மட்டும் என்னும் கூட்டத்திலும், உபவாசத்திலும், கிறிஸ்தவ மதத்தலைவர் ஏன் கலந்து கொண்டு ஆசி வழங்க வேண்டும். இது தமிழர்களையும் முஸ்லிம்களையும் மட்டுமல்ல கிறிஸ்தவர்களையும் பிரிப்பதாகும் என்பது தெரியாதா? பெளத்த சிங்களவாதமே இலங்கையின் பேரினவாதமாகும். பெளத்த யாப்பு, பெளத்த அரசு, பெளத்த அமைச்சரவை என்பனவற்றை இவர் சரி கண்டாரா? அந்த வகையில் தான் பெரும்பான்மை மக்களின் மனங்கள் துருவப்படுத்தப்பட்டு ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆக தேசிய பாதுகாப்பை முன்வைத்து தனி நபர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தனித்து அமோக மக்களாணையோடு உருவாகவும் அந்த குண்டு வெடிப்புகளே காரணமாகியிருந்தன. தற்போதைய நிலை என்ன?
போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் கூட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து பாதிக்கப்பட்ட 289 பேர் நஷ்ட ஈடு கோரி வழக்குத்தாக்கல் செய்துள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 6 பேர் மீது இரு மாவட்ட நீதிமன்றங்களில் இவ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றங்கள் மூலம் 1250 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது. கட்டுவாப்பிட்டியவில் பாதிக்கப்பட்ட 182 பேர் நீர்கொழும்பு நீதிமன்றத்திலும், கொழும்பு கொச்சிக்கடையில் நிகழ்ந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட 107 பேர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இவற்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தன, முன்னாள் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவ்விரு வழக்குகளும் பாதுகாப்புத்துறையை மட்டுமே குறிக்கின்றன என்பதையும் முஸ்லிம்களையல்ல என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதில் அரசியல் நோக்கம் உள்ளது எனவும் விசாரணையில் திருப்தியில்லை எனவும் சர்வதேசத்துக்குக் கொண்டு செல்வேன் எனவும் குறிப்பிட்டிருக்கையில் அந்த குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புத்துறை மீது வழக்குகள் தொடுத்திருக்கையில் முழு முஸ்லிம் சமூகத்தையும் ஏன் விரட்டி விரட்டி வேட்டையாடுகிறார்கள். இதன் நோக்கம் என்ன? அரபுப் போராளிகளின் இலக்கு மேலைநாட்டு ஏகாதிபத்தியவாதமேயாகும். அவர்களுக்கு இலங்கையில் வேலையில்லை. எனினும் அதன் பெயரைப் பாவித்து சில முஸ்லிம்களைப் பயன்படுத்திப் பயிற்சி வழங்கிக் கிறிஸ்தவர் மீது தாக்குதல் தொடுத்து முஸ்லிம் கிறிஸ்தவ சண்டையை மூளச் செய்து அதன் மூலம் கிறிஸ்தவரின் அபரிமித வாக்குகளைப் பெற்று முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாதப்பூச்சாண்டியைக் கிளப்பி அதன் மூலமும் பெருவாரியாக சிங்கள வாக்குகளைப் பெற அவர்களின் உள்ளங்களைத் துருவப்படுத்துவதா?இவற்றின் மூலம் வடக்கு கிழக்குத் தமிழரின் கோரிக்கைகளைத் திசை திருப்பி அவர்களின் சர்வதேச முன்னெடுப்புகளையும் பின் தள்ள வைப்பதா? கடந்தகால பேரினவாத செயற்பாடுகள் தாம் இவ்விதமெல்லாம் நம்மை எண்ண வைக்கிறது.
முஸ்லிம்களுக்கு அறிமுகமற்ற ஏழெட்டு முஸ்லிம்கள் திடீரென சம்பந்தப்பட்ட ஒரு செயலுக்காக அந்த வெடிப்புகள் நிகழவில்லை.அவர்கள் குறிப்பிட்ட காலம்வரை பாதுகாப்பும் பயிற்சியும் வளங்களும் பெற்று இயங்கியிருக்கிறார்கள். இவற்றுக்கு முழு முஸ்லிம் சமூகமும் பொறுப்பல்ல. இவர்களுக்கு இந்த வாய்ப்புக்களை வழங்கிய ஒரு மறைகரம் இருக்கிறது. அது எது என்பது இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை. அதுவே முழு முஸ்லிம் சமூகத்தையும் பணயம் வைத்து தனது இலக்கை எட்டியிருக்கிறது. கிறிஸ்தவர்களும் இதில் பணயமாக்கப்பட்டிருக்கிறார்கள். இவையே பேரினவாதமாகும்.
மேற்படி குண்டுத்தாக்குதல்கள் அரசியல் நோக்கம் கொண்டவை எனவும் ஜனாதிபதியின் விசாரணைக்குழு அறிக்கை திருப்தி தரவில்லை எனவும் முறையான விசாரணை இல்லாவிட்டால் சர்வதேசத்தை நாடவேண்டிவரும் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் குண்டுத்தாக்குதல்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என இவர் குறிப்பிடுவது இங்கு ஒரு முக்கியவிடயமாகும். அப்படியானால் இவருக்கு அந்த அரசியல் நோக்கம் பற்றித் தெரியும் எனக் கூறலாமா? இல்லாவிட்டால் அவர் இதை இப்படி உறுதியாகக் கூற மாட்டார். இவர் ஒரு சாதாரண ஆளல்ல. கிறிஸ்தவமதகுரு. எனினும் பேரினவாதத்தின் திட்டத்தை பின்புதான் இவர்அறிந்து கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் இவர் அதுரலிய தேரரின் உபவாசத்திற்கு போயிருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த விசாரணைக்குழு அவர் மீதே குற்றம் சுமத்தியிருக்கிறது. ஞானசார தேரர்மீதும் குற்றம் சுமத்தியிருக்கிறது. எனினும் அவ்விருவருக்கும் குற்ற விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவோ? என்பதால்தான் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விசாரணை அறிக்கையில் திருப்தியில்லை என்கிறாரோ? இல்லாவிட்டால் சர்வதேசத்தை நாட வேண்டிவரும் எனவும் அவர் கூறியிருக்கிறாரே? என்ன அர்த்தம் உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்பது தானே. இதையே மனித உரிமை விடயத்தில் வடக்கு கிழக்கு தமிழர் தொடர்ந்து 12 ஆண்டுகளாகக் கோரிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது நிவாரணம் கிடைத்ததா இல்லையே. சிலவேளை இது பௌத்தருக்கும் கிறிஸ்தவருக்கும் இடையிலான நெடுங்கால முறுகலாகவும் ஆகிவிடும். ஞானசார தேரரும் அதுரலியே ரதன தேரரும் குறிப்பிடுவதுபோல் எதிர்காலத்தில் பௌத்த யாப்பு பௌத்த ஆட்சி பௌத்த அமைச்சரவை ஆகியவை அமையும் பட்சத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரும் முறையான விசாரணை நீர்த்துப் போய் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படலாம். இது ஈஸ்டர் தாக்குதலை விடவும் ஆபத்தாகும்.
ஆக, சர்வதேச விசாரணை என அவர் குறிப்பிடுவது அமெரிக்கா உட்பட ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளையே என நினைக்கிறேன். தற்போது சீனாவின் பக்கம் அதிகம் சார்ந்திருக்கும் இலங்கை அதற்கெல்லாம் மசியப்போவதில்லை. இதனால் அரசியல் கெடுபிடிகளுக்கும் அவர் ஆளாகலாம். ஒருவேளை இவர் தனது கோரிக்கையை மனித உரிமைப் பேரவையின் அக்டோபர் மாதக் கூட்டத்தில் முன் வைக்கும் வாய்ப்பு உண்டு. தற்போது 46/1 கூட்டத்தொடரில் தோல்வியுற்றிருக்கும் இலங்கை இதனால் மேலும் பாதிப்புறுமானால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலை மீது பெரும் பழி விழ நேரிடும்.
பேராயர் சர்வதேச விசாரணை பற்றிக் குறிப்பிடுகையில் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட வேண்டியுள்ளதால் அவர்களைத் தண்டிக்க காலதாமதங்கள் ஏற்படும் எனப் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன குறிப்பிடுகிறார். அப்படியானால் இனித்தானா ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். ஆதாரங்கள் இன்றியும் ஆதாரங்களைச் சேகரிக்காமலுமா கைது செய்திருக்கிறார்கள். தக்க ஆதாரங்களோடு கைது செய்வது வேறு. சந்தேகத்தின் பெயரால் ஆதாரங்களின்றி கைது செய்து விட்டு ஆதாரங்களைத் திரட்டுவது வேறு, ஒருவன் மீதான சந்தேகம் அவனைக் குற்றவாளியாக்கிவிடக் கூடாது. ஒருவன் மீதான நம்பிக்கை அவனை சுத்தவாளியாக்கிவிடவும் கூடாது.
விரைவான விசாரணைக்குப் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்க கால தாமதங்கள் ஏற்படும் என்றால் என்ன அர்த்தம். எத்தனை காலமாயினும் சிறையில் இருக்க வேண்டியது தான். இது இருவகை தண்டனைகள் அல்லவா? வழக்கு தொடுக்கப்பட்டுள்ள போதும் தண்டிக்க வலுவான ஆதாரங்கள் வேண்டும். அவற்றையே திரட்டுகின்றோம் எனப் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிடுகிறார். அப்படியானால் தண்டிப்பதற்கான ஆதாரங்கள் இவரிடம் இல்லை என்றாகிறது. அப்படியானால் எதற்காக தடுத்து வைத்திருக்க வேண்டும். பிணையில் விட்டுவிட்டுத் தக்க ஆதாரங்களைச் சேர்த்துக் கொண்டு கைது செய்யலாமே. தக்க ஆதாரங்கள் இருந்தும் உடனடி நடவடிக்கை இல்லை. ஆதாரங்கள் இல்லாமலும் உடனடி நடவடிக்கை என்பதிலேயே அரசியல் தலையீடு இருக்கிறது.
முழு நாட்டையும் உலுக்கி அதிர்ச்சியடையச் செய்த அந்த தாக்குதல்கள் முஸ்லிம்களில் 40 அல்லது 50 பேரை மட்டும் சார்ந்ததா? இல்லை. அவர்கள் சக்திமிக்க ஒரு தரப்பால் பயன்படுத்தப்பட்டு மட்டுமே இருக்க முடியும். காரணம் முழுமையான கட்டமைப்பைக் கொண்ட தமிழ் ஆயுதப் போராளிகளாலேயே ஒரு நொடியில் அப்படி செய்ய முடியவில்லை. எனவே சொற்ப முஸ்லிம்கள் களத்தில் நிறுத்தப்படும் மனித கேடயத்தைப் போல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஏனெனில் முஸ்லிம்களுக்கு இந்த வலு இருந்திருக்குமாயின் வடக்கு கிழக்கில் தமிழ் போராளிகளிடமும் தெற்கில் ஞானசார தேரரிடமும் வருடக் கணக்கில் தொல்லைக்குட்பட்டிருக்கமாட்டார்கள். கிழக்கில் ஓர் முஸ்லிம் ஆயுதக் குழுவை உருவாக்கித் தமிழ் தரப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் முஸ்லிம் தனித்துவக் கட்சிகளை முடக்கவும் பேரினவாதம் கருதியிருக்கலாம். அதற்கென மத தீவிர வாத முஸ்லிம்களைத் தெரிவு செய்து பிக்குகளோடு மோத விட்டு சிங்கள மக்களை உசுப்பேற்றி அவர்களின் வாக்குகளை அள்ளிப் பெறுவதோடு முஸ்லிம் சமூகத்தையும் முடக்க பேரினவாதம் எண்ணியிருக்கலாம். பின்வரும் கேள்விகளுக்கு விடைகள் தேவை. சம்பவம் நிகழும் முன் இந்திய புலனாய்வுத் தகவல் கிடைத்தது என்கிறார்கள். அதன்படி ஏன் செயற்படவில்லை. சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒரு பெண் இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டாள் என்கிறார்கள். அந்த இக்கட்டான கட்டத்தில் ஒரு பெண்ணால் அப்படி பாதுகாப்பாகத் தனித்துக் கடல் கடக்க முடியுமா? சில சிங்கள இளைஞர்களும் சிலை உடைத்த தகவல் மறைக்கப்பட்டதே. சிலை உடைத்த இந்தியர் சிறையில் மாண்டு போனாரே அவர் ஏன் எப்படி இறந்தார்?- Vidivelli