தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு கோரி ரிஷாத், ரியாஜ் உயர் நீதிமன்றில் மனு
தடுப்புக் காவல் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரிக்கை
( எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆவது உறுப்புரைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக, அவர்கள் இவ்வாறு தனித் தனியாக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நேற்றும் நேற்று முன் தினமும் தாக்கல் செய்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கடந்த செவ்வாயன்று தாக்கல் செய்த மனுவில், சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.டி. குமாரசிங்க, சி.ஐ.டி.யின் பொறுப்பதிகாரி, சி.ஐ.டி. பணிப்பாளர் , சி.ஐ.டி.க்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசியலமைப்பின் 134 மற்றும் 35 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ரிஷாத்தின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா, தானே மனுதாரராக முன்னின்று நேற்றுமுன்தினம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. ஜயசேகர, சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.டி. குமாரசிங்க, சி.ஐ.டி. பணிப்பாளர் , சி.ஐ.டி.க்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசியலமைப்பின் 134 மற்றும் 35 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்திய மொஹம்மட் இப்ராஹிம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான குளோசஸ் எனும் செப்பு தொழிற்சாலையுடன் தொடர்புபட்ட விவகாரத்தில் தன் மீது விரல் நீட்டப்பட்டாலும், குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல்களுடன் தனக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என ஆவணங்களையும் இணைத்து ரிஷாத் பதியுதீன் இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில், கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி தான் கைது செய்யப்பட்டதும், 27 ஆம் திகதி 90 நாள் தடுப்புக் காவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி வழங்கிய அனுமதியும் சட்டத்துக்கு முரணானது எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்குமாறும், சி.ஐ.டி. யில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார். அத்துடன் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் 500 கோடி ரூபா நட்ட ஈட்டினை பிரதிவாதிகளிடம் இருந்து பெற்றுத்தருமாறும் ரிஷாத், தனது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றை கோரியுள்ளார்.
ரியாஜ் பதியுதீனுக்காக தானே மனுதாரராக நின்று சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா நேற்று தாக்கல் செய்த மனுவில்,
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே தான் ( ரியாஜ்) 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் அப்போது கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தான் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் சாட்சியங்கள் இல்லையென்ற அடிப்படையில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வெள்ளவத்தையில் வைத்து தன்னை கைது செய்தமையும், அது தொடர்பில் தடுத்து வைத்துள்ளமையும் சட்ட விரோதமானது எனவும் தனது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அந்த செயற்பாடுகள் உள்ளதாகவும் ரியாஜ் பதியுதீன் சார்பிலான மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்து, அதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.- Vidivelli