ரெஹான் ஜெயவிக்ரம இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இளம் அரசியல்வாதி. ஏப்ரல் 13 அன்று அவர் ஒரு அற்புதமான அறிவித்தலை வெளியிட்டார்.
“நான் ஒரு பெளத்தர். நான் என் வாழ்நாள் முழுவதும் பெளத்த தத்து வத்தை பின்பற்றவே முயற்சிக்கிறேன். ஆனால் இந்த ஆண்டு புனித ரமழான் மாதத்தில் எனது முஸ்லிம் சகோதர, சகோதரிகளுடன் இணைந்து ரமழான் நோன்பை அனுஷ்டிக்க நான் எதிர்பார்த்துள்ளேன். இதுபோன்ற நல்ல அதிர்ஷ்டத்தை நான் பெறுவது இதுவே முதல் முறை.” என தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டிருந்தார்.
வெலிகம நகர சபையின் தலைவராக உள்ள ரெஹான் ஜெயவிக்ரம , ஏப்ரல் 14 ஆம் திகதி ரமழான் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, முஸ்லிம்கள் பகலில் சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்ப்பதைப் போன்று தானும் அந் நேரத்தில் உண்பதையும் குடிப்பதையும் தவிர்த்து வருகிறார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 14 இல் இலங்கையில் வாழும் மூன்று சமூகங்களுக்கு ஒரு சிறப்புக்குரிய நாளாக அமைந்தது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் முஸ்லிம்களது நோன்பு மாதமான ரமழான் மாதத்தின் தொடக்க நாள் இரண்டும் ஒன்றாக அமைந்த ஓர் அரிய சந்தர்ப்பம் இதுவாகும்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவினரால் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களால் பல இன மக்கள் வாழும் இலங்கை சமூகம் அதிர்ச்சியடைந்தது. இதில் கிட்டத்தட்ட 270 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பெரும்பான்மை சமூகத்தில் பரவியுள்ள முஸ்லிம்- விரோத மனப்பான்மையை அகற்றும் நோக்கத்துடன் தான் இந்த ஆண்டு முஸ்லிம்களுடன் இணைந்து நோன்பு நோற்பதாக பெளத்தரான ரெஹான் ஜயவிக்ரம கூறுகிறார்.
இதற்கிடையில், ரெஹான் ஜயவிக்ரமவை விமர்சிக்கும் சிலர் “முஸ்லிம் வாக்குகளுக்குப் பின்னால் இவர் ஓடுகிறார்’’ என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு பதிலளித்த இளம் அரசியல்வாதியான ரெஹான், தனது ஆதரவாளர்கள் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு கருத்தை நினைவு கூர்ந்தார்.
“வெறுப்பை விதைப்பதை விட மத நல்லிணக்கத்தை வளர்ப்பதன் மூலம் வாக்குகளை வெல்வது நல்லது.” என அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று கத்தோலிக்க ஊடகவியலாளரான மேரி ஆன் டேவிட், 15 ஆண்டுகளுக்கும் மேலாக தான் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று வருவதாக கூறுகிறார். அவர் “தன்னை மையமாகக் கொண்டு முக்கியமான விடயங்களை தியானிப்பதற்கு” ரமழான் மாதத்தை பயன்படுத்துவதாக அவர் கூறுகிறார்.
” நோன்பிருப்பதன் மூலம் உணவைப் பற்றி தொடர்ந்து சிந்திப்பதைத் தவிர்க்க முடிகிறது. அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கச் செய்கிறது, அன்றைய நாளை ஒழுக்கத்துடன் திட்டமிட நோன்பு உதவுகிறது” என்று மேரி ஆன் கூறினார்.
ரமழான் மாதம் தனது குறிக்கோள்களை வலுப்படுத்தி ஆரோக்கியமான உணர்வை உருவாக்குகிறது என்றும் அவர் கூறுகிறார்.
” ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு பகலில் சாப்பிடாமல் இருப்பது என்பது ஒன்றும் பெரிய தியாகம் அல்ல. ஆனால் ஒரு நல்ல உணவைப் பெறுவதற்கு வழியில்லாதவர்களுக்கும் கடினமான இடங்களில், வெளியில் வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கும் இது மிகவும் கடினமானது.” என்றும் மேரி குறிப்பிடுகிறார். நோன்பு மற்றவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற உணர்வை நம்மில் ஏற்படுத்துகின்றமை மிக முக்கியமான விடயம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
“உணவு மற்றும் பானத்திலிருந்து விலகி இருக்கும்போது எங்களால் முடிந்த அளவு தேவையுடையவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வறியவர்களுக்கு உணவு மற்றும் குடிபானம் வழங்க வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பிறரை நோன்பு நோற்குமாறு நாம் ஊக்குவிக்க வேண்டும்.” என்றார்.
“இது ஒழுக்கம் அல்லது தியாகத்திற்கான நேரம் மட்டுமல்ல, அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டிய நேரம் இது” என்கிறார் மேரி ஆன்.
“நோன்பு நேரத்தின் முடிவில் எங்களை அழைக்கும் நண்பர் அல்லது பிற குடும்பத்தினரின் வீட்டிற்கு நாங்கள் செல்லும்போது, ஒரு இரவு விருந்தில் பங்கேற்கும் உணர்வு கிடைக்கிறது. அங்கு மதுபானம் மாத்திரமே இருக்காது” என மேரி ஆன் விளக்கினார்.
“நாங்கள் நோன்பு காலத்தில் புதிய உணவுகளை சாப்பிடுகிறோம், உண்மையான சுவையை அனுபவிக்கிறோம்.” என்கிறார்.
இருப்பினும், வெலிகம மேயர் ரெஹான் ஜெயவிக்ரம, “ரமழான் நோன்பை அனுபவிப்பது எளிதான காரியம் அல்ல” என்றார்.
“நான் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வேர்க்கடலை, தயிர் மற்றும் பழங்களை காலை உணவுக்கு சாப்பிடுகிறேன், பின்னர் மாலை 6:30 மணி வரை எந்த உணவும் உட்கொள்வதில்லை” என்று ரெஹான் கூறினார்.
இந்த புதிய அனுபவம் மாலை வேளையில் அவருக்கு சிறிது புத்துணர்ச்சியைத் தருவதாக இளம் அரசியல்வாதி ரெஹான் கூறுகிறார். ஆனால் ரமழான் மாதம் முழுவதும் இவ்வாறு தன்னால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற சந்தேகமும் அவருக்கு உள்ளது.
“இந்த ரமழான் நோன்பை என்னால் முடிந்தவரை தொடருவேன்” என்று அவர் எம்மிடம் கூறினார்..
ஆனால் அவர் கொஞ்சம் பதற்றமாக, “தண்ணீர் குடிக்காமலிருப்பது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது” என்றார்.
இலங்கையின் புகழ் பெற்ற முன்னாள் கிரிக்கட் வீரரான சனத் ஜயசூரிய தான் வருடாந்தம் ரமழான் மாதத்தின் 27 ஆம் நாளில் நோன்பு நோற்பதாக கூறுகிறார். ‘‘இன்று எனக்கு சிறப்பானதொரு நாள். இது நான் ஒவ்வொரு வருடமும் கடைப்பிடிக்கும் பாரம்பரியம். அதனையே இன்றும் செய்கிறேன். கஞ்சி மற்றும் பேரீத்தம் பழத்துடன் நோன்பு துறந்தேன்’’ என சனத் ஜயசூரிய தான் நோன்பு துறக்கும் புகைப்படத்துடன் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
‘‘நீங்கள் இன்று நோன்பிருப்பதாக கேள்விப்பட்டேன். 6.20 மணி வரை பொறுமையாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்’’ என ஊடகவியலாளர் அசாம் அமீன் கொடுத்த பதிவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சனத் ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அதேபோன்று சமூக ஊடக செயற்பாட்டாளரான பிரசாத் பெரேராவும் தான் ஒரு நாள் நோன்பிருப்பதாக அறிவித்திருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டிருந்தார். ‘‘ நான் நாளை நோன்பிருக்கப் போகிறேன். காலை முதல் மாலை வரை எனது நோன்பு தூய்மையானதாக அமையவும் அதன் நோக்கத்தில் குறியாகவிருக்கவும் எனக்காக பிரார்த்தியுங்கள். எனது முஸ்லிம் நண்பர்கள் இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை பாராட்டவும் உணவின்றி சில மணித்தியாலங்கள் இருப்பது எவ்வளவு கஷ்டமானது என்பதை எனக்கு நினைவூட்டவுமே வருடாந்தம் நான் இவ்வாறு ஒரு நாள் நோன்பு நோற்கிறேன்’’ என பிரசாத் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு வெறுப்பு பிரசாரங்கள் இன்றும் தொடர்கின்ற போதிலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சரிவர புரிந்து கொண்டவர்கள் பெரும்பான்மை சமூகங்களில் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் சக வாழ்வை விரும்புகிறார்கள் என்பதையுமே நோன்பு நோற்கும் மேற்படி சகோதர, சகோதரிகளின் கதைகள் கூறி நிற்கின்றன. அவர்களுக்காக நாம் இந்த நன்னாளில் பிரார்த்திப்பதுடன் வெறுப்பு பிரசாரங்கள் இன்றும் தொடர்கின்ற போதிலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சரிவர புரிந்து கொண்டவர்கள் பெரும்பான்மை சமூகங்களில் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் சக வாழ்வை விரும்புகிறார்கள் என்பதையுமே நோன்பு நோற்கும் மேற்படி சகோதர, சகோதரிகளின் கதைகள் கூறி நிற்கின்றன. அவர்களுக்காக நாம் இந்த நன்னாளில் பிரார்த்திப்பதுடன் வாழ்த்துக்களையும் கூறுவோம். (பி.பி.சி. சிங்கள இணையத்தளம் வெளியிட்ட கட்டுரையையும் இங்கு பெயர் குறிப்பிட்ட சிலரது டுவிட்டர் பதிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)- Vidivelli