பலஸ்தீனர்கள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
பலஸ்தீனின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் பலஸ்தீனத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதும் மேற்கொண்டுள்ள தாக்குதல்களையும் வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காஸா பிராந்தியம் மற்றும் அல் அக்ஸா வளாகம் என்பன மீது இஸ்ரேல் நடத்தி வரும் மனிதாபிமானமற்ற கொடூர தாக்குதல்களை கண்டிக்க முன்வருமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
இஸ்ரேலின் விமான குண்டு வீச்சினால் இதுவரை காஸாவில் 50 சிறுவர்கள் உள்ளடங்கலாக 180 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் கருத்துகளை அகற்றுவதற்கு சமூக ஊடக நிறுவனங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் கண்டனத்துக்குரியவை. இது மனித உரிமைகளுக்கு ஆதரவான குரல்களை நசுக்கும் முயற்சியாகும். அதேபோன்று களத்தில் நின்று அறிக்கையிடும் பல பலஸ்தீன ஊடகவியலாளர்களும் இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். காஸாவில் அமைந்துள்ள அல்ஜஸீரா, அசோசியேட் பிரஸ் போன்ற பிரதான சர்வதேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் கலையகங்கள் அமைந்துள்ள கட்டிடம் இஸ்ரேலிய வான் படையினரால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது ஊடக சுதந்திரத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அத்துமீறலாகும்.
இவ்வாறு இஸ்ரேலின் மனித குலத்துக்கு எதிரான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. அந்த வகையில் மேற்படி தாக்குதல்களை நாம் கண்டிப்பதுடன் பலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அடாவடித்தனங்களை முடிவுக்குக் கொண்டுவர விரைந்து செயற்படுமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச பொறிமுறைகளை கோருகிறோம். அத்துடன் பலஸ்தீன மண்ணில் அமைதி திரும்பவும் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமடையவும் இந்த நன்னாட்களில் பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.- Vidivelli