தடையை எதிர்த்து உயர் நீதிமன்றில் 3 தௌஹீத் அமைப்புக்கள் வழக்கு
• சமல், கமல், சவேந்திர, சுரேஷ் சலே உள்ளிட்டோர் பிரதிவாதிகள் • வர்த்தமானிக்கு இடைக்கால தடையும் கோரப்பட்டது
• சமல், கமல், சவேந்திர, சுரேஷ் சலே உள்ளிட்டோர் பிரதிவாதிகள்
• வர்த்தமானிக்கு இடைக்கால தடையும் கோரப்பட்டது
(எம்.எப்.எம்.பஸீர்)
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்புக்கள் சில, தடையை எதிர்த்து உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. அண்மையில் தடை செய்யப்பட்ட 11 அமைப்புக்களில் உள்ளடங்கும் சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு, முதலாவது அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளது.
சட்டத்தரணி லக்ஷிகா பக்மீவவ ஊடாக சிலோன் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் அப்துல் லதீப் மொஹம்மட் ரிசான் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனைவிட யூ.டி.ஜே. எனப்படும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், ஏ.சி.டி.ஜே. எனப்படும் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் ஆகியன சார்பிலும் உயர் நீதிமன்றில் தடையை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சிலோன் தௌஹீத் ஜமா அத் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் ஜெனரால் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரால் சவேந்திர சில்வா, தேசிய உளவுச் சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரால் சுரேஷ் சலே, பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆவது உறுப்புரைக்கு அமைய இவ்வடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பின் 3ஆவது அத்தியாயத்தின் கீழ் உள்ள 10,12(1),12(2),14(அ),(ஆ),(இ),(உ),(ஊ) ஆகிய உறுப்புரைகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள தமது அடிப்படை உரிமைகள், தமது அமைப்பு உள்ளிட்ட 11 அமைப்புக்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மீறப்பட்டுள்ளதாக சிலோன் தௌஹீத் ஜமாஅத் தலைவர் தனது அடிப்படை உரிமை மீறல் மனு ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது, சிந்தனை, மனசாட்சி, மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும், சமத்துவத்திற்கான உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், பேச்சு சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான ஒழுங்கமைப்பதற்கான சுதந்திரங்கள், மீறப்பட்டுளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
தமது சிலோன் தௌஹீத் ஜமாஅத், சஹ்ரான் ஹாஷீம் தொடர்பில் உளவுப் பிரிவுகளுக்கு தகவல் வழங்கி எச்சரித்த அமைப்பு எனவும், அடிப்படைவாத, தீவிரவாத செயற்பாடுகளுடனோ சிந்தனைகளுடனோ தமது அமைப்புக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என்றும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சிங்களமொழியில் அல் குர் ஆனை மொழி பெயர்த்து முதலில் தாங்களே வெளியிட்டதாகவும், முகத்தை முழுமையாக மறைக்கும் உடை தொடர்பில் கூட தமது நிலைப்பாடு மாறுபட்டது என்றும் அந்த மனுவில் சிலோன் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிலோன் தௌஹீத் ஜமா அத் அமைப்புக்கு நாடளாவிய ரீதியில் 52 கிளைக் காரியாலயங்கள் உள்ளதாகவும், அவ்வமைப்பின் கொள்கைகளை பின்பற்றும் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இருப்பதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் அவ்வமைப்புக்கு நாடளாவிய ரீதியில் 229 நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயெ இவ்வடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்குமாறும், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது. அதன்படி மனுவை விசாரணை செய்து தமது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்து நியாயமான நிவாரணத்தை பெற்றுத் தருமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சியின் நலனில் அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்வதாக கடந்த 13 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்வமைப்புக்களை தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர், அவ்வமைப்புக்களைச் சார்ந்தவர்கள், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அமைப்புக்களின் வங்கிக் கணக்குகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே, தடை பட்டியலில் தாம் எவ்வித காரணமும் இன்றி இணைக்கப்பட்டுள்ளதாக கூறியே தற்போது சில முஸ்லிம் அமைப்புக்கள் நீதிமன்றை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli