தமிழில்: எம்.எச்.எம் நியாஸ்
பைபிளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது, “சத்தியம் உங்களை விடுதலை செய்யும்”
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இந்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சில சுற்றுலாப் பயணிகளின் உணவு விடுதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்துவிட்டன. அத்தினத்தை முன்னிட்டு, நீதியையும் உண்மையையும் வேண்டி தமது எதிர்ப்பைக் காட்டும் முகமாக சில நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. பைபிளின்படி நீதி நிலைநாட்டப்படும் முன் உண்மையை வெளிக்கொண்டு வருவது கட்டாயமாகும். அசத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்படும் நீதி ஒரு அநீதியாகும்.
ஏற்கனவே நடைபெற்றுள்ள விசாரணைகளின் படியும் விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு மூலமாகவும், பாராளுமன்றத்தில் பேசப்பட்ட சில கருத்துக்கள் மூலமாகவும், மேற்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஐ.எஸ். ஐ.எஸ்ஸினால் மேற்கொள்ளப்பட்டது என்ற முடிவுக்கு வரமுடியாதுள்ளது. மேற்படி தாக்குதலுக்கு மறைமுகமான சிலரது பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்நாட்டில் மட்டுமன்றி வெளி நாடுகளிலுள்ள புத்திஜீவிகளில் அநேகர் எடுத்துக் கூறியுள்ளனர். அவர்களது கூற்றுக்களுக்கான நியாயங்களை கீழ்வருமாறு பட்டியற்படுத்த முடியும்.
இந்தியாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் பெண் பற்றிய உண்மையான நிலைப்பாடென்ன? பொலிஸ் அதிகாரி ஒருவரே அப்பெண்ணை இந்தியாவுக்கு கூட்டிச்சென்றுள்ளார் என்பதன் உண்மை நிலையென்ன? D.N.A பரிசோதனை ஒன்றை நடத்தியதன் மூலம் அப்பெண் இறக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பும் அது விடயத்தில் மீண்டும் ஒரு தடவை D.N.A பரிசோதனையொன்று நடத்தப்பட வேண்டுமென்று அரசு கூறவேண்டியதன் காரணமென்ன?
மேற்படி தாக்குதலுடன் உளவுத்துறையில் கடமையாற்றிய சில அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது என்ற கூற்றின் உண்மை நிலையென்ன? அது பற்றி விசாரணைகள் நடைபெற்றுள்ளனவா?
அரசாங்கத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளில் சிலர் ஆணைக்குழுவுக்கு முன்பாக சாட்சியளிக்கும்போது, மேற்படி தாக்குதலுக்குப் பின்புலத்தில் ஒரு சிலர் உள்ளனர் அல்லது சதியொன்றுள்ளது என்று கூறியபோதிலும் அது பற்றி விசாரணைகள் நடத்தப்பட்டனவா?
மேற்படி பல விடயங்கள் பற்றிய விபரங்களை கண்டறிவதற்கோ அல்லது அவை பற்றிய விசாரணைகளை நடத்தும்படி கூறுவதற்கோ கத்தோலிக்க சபை முன்வருவதாகத் தெரியவில்லை.
கிறிஸ்தவப் பார்வையின்படி நீதி நிலைநாட்டப்படல் வேண்டும் என்று கூறினாலும் அது பற்றி கிறிஸ்தவ சபையினால் மறைக்கப்பட்டிருக்கும் சில உண்மைகளை முன் கொண்டு வருவதே எமது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதலையும் அதற்கு முன்பும், பின்பும் முஸ்லிம் மக்களை நோக்கி நடத்தப்பட்ட வெறுப்பை ஏற்படுத்தும் தாக்குதல்களையும் இங்கு பிரித்துப்பார்க்க முடியாதுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதல் பற்றிய உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவது கட்டாயமாகும். ஆனால் அதேவேளை அது முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய உண்மை மற்றும் நீதியுடன் தொடர்புள்ளது என்பதையும் நாம் மறக்க முடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் முஸ்லிம்களுக்கு
எதிரான தாக்குதல்கள் ஆகியன வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் இனவாதிகளால், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்தான் என்பதும் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தான் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகிவிட்டன.
உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதலுடன் அதற்கு முன்பும் பின்பும் மட்டுமல்லாது அதற்கண்மையிலே முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது பலர் கொல்லப்பட்டனர். அதில் இரு சாரார் கொல்லப்பட்டும், அதன் மூலம் பாதிப்புக்குட்பட்டவர்களுமாவார்கள். அவர்கள் (கத்தோலிக்க மற்றும் சியோன் சபையைச் சேர்ந்த) கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுமாவர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுள் அன்றைய தினத்தில் தேவாலயங்களுக்கு வந்த சில ஹிந்துக்களும், பௌத்தர்களும் உள்ளனர். எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய உண்மை மற்றும் நீதியைக் கோரி நிற்கும் உண்மையான, நேர்மையான கிறிஸ்தவ போராட்டமாக அது இருப்பின் இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மேற்படி (கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களாகிய) இருசாராரும் ஒன்றாக இணைந்து செயல்படுவது கட்டாயமாகும். அவ்வாறு எமது எதிர்ப்பைக் காட்டும் விடயத்தில் மௌலவி ஒருவரை மட்டும் இணைத்துக் கொள்வது அர்த்தமற்றதாகும்.
அது சஹரான்களுக்கு எதிராக பெரும்பான்மை முஸ்லிம்களுடன் இணைந்து நடத்தப்படும் போராட்டமாகும். ஆனால் அவ்வாறான ஒரு முயற்சிக்காக நாம் இரு சாராரும் இன்றுவரை இணைந்து செயல்படாதிருந்தது ஒரு துரதிஷ்டமான விடயமாகும். அவ்வாறு நாம் இணைந்து செயல்பட முன்வராவிடில், உண்மையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உருவாக்கியவர்களுக்கும் பெரிய மூளைசாலிகளுக்கும் தேவையான அநீதியே தழைத்தோங்க இடமளிக்கப்பட்டுவிடும்.
புத்தர் சிலையை உடைத்தல் போன்ற சில பிரச்சினைகள் ஏற்படினும் அது பற்றி நடத்தப்படும் விசாரணைகள் பூதாகரமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதேவேளை நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கம, திகன, மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட பல தாக்குதல்கள் பற்றிய விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், பல வருடங்களாக இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை சம்பிரதாய முஸ்லிம்கள் சஹ்ரான் குழுவின் நெறிதவறிய நடவடிக்கைகள் பற்றி பொலிஸாருக்கும், உரிய அதிகாரிகளுக்கும் பகிரங்கமாகவே முறைப்பாடுகளை செய்துள்ளனர். அது மட்டுமன்றி சஹ்ரானுடைய குழுவுக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஆனால் அவை பற்றிய விசாரணை செய்வதற்கு அரசு முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. விசாரணைகளை மேற்கொள்வோர் அம்முறைப்பாடுகளை மறந்து விட்டது போலவே முறைப்பாடு செய்தவர்களும் அது விடயத்தை மறந்து விட்டார்கள். பெரும் மூளைசாலியை தேடும் படலம் வெறும் போலியான நடவடிக்கைகளாக மாற்றப்பட்டு, மொத்தமான குற்றச்சாட்டுகளையும் குறித்த ஒருவரது தலையிலோ அல்லது ஒரு சாராரது தலையிலோ போடப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த விசாரணையின்போது உண்மையை மூடி மறைக்கும் படலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது விடயத்தில் நீதியும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட வேண்டுமெனில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சரியான குற்றாவாளியைக் கண்டுபிடித்தாக வேண்டும். அவ்வாறு இந்த விசாரணை முறையாக சரியாக நடைபெறுமானால் குறித்த தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்களையும் அவர்களின் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதையும் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.
மேற்படி தாக்குதலுக்கான பெரும் மூளைசாலி யார் என்பதை பலத்த முயற்சிகளின் பின்பாவது கண்டுபிடித்துக் கொள்ள முடியும். ஆனால் அது விடயத்தில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விசாரணையை மட்டும் தனியாக வேறுபடுத்தி விசாரணைகளை மேற்கொள்வதில் பயனில்லை.
மாறாக அந்த தாக்குதலுக்கு முன்பும் பின்பும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் பற்றியும் யுத்த காலத்தில் நடைபெற்ற காணாமால் போனோர், ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை போன்ற விடயங்களின்போது அவற்றின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதையும் அவற்றின் பெரும் மூளைசாலி யார் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதலுக்கு பின்னணியில் இருந்தவர்களைப் பகிரங்கப்படுத்துங்கள்” என்ற சுலோகமே நியாயங்களைக் கோரும் செயல்பாட்டின் சுலோகமாக இருக்க வேண்டும்.
இன்று வரை, இந்நாட்டிலுள்ள உத்தியோகபூர்வ கத்தோலிக்க சபைக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கை மற்றும் பல்வேறு அமைப்புக்களின் மூலம் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்படி மேற்படி தாக்குதல் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆகியன வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் இனவாதிகளால், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்தான் என்பது தெளிவாக விளங்கிவிட்டது. இது போன்ற தாக்குதல்கள், இதற்கு முன்பு நடைபெற்ற அநேகமான தாக்குதல்களைப் போன்று, நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகிவிட்டன. அவை அவ்வாறு நடைபெறவில்லையாயின் அதற்கான காரணத்தை கிறிஸ்தவ மொழியில் கூறுவதானால் அவற்றை கிறிஸ்தவக் கண்களைக் கொண்டு பார்க்கக்கூடாது. மாறாக அவற்றை நவீன ‘ஹெரொத்’வருடைய நவீன ‘பரிசி’யர்களது பார்வையால் இப் பிரச்சினை நோக்கப்படல் வேண்டும்.
எமது இந்த சிறு குறிப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்பும் பின்பும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற சில தாக்குதல்கள் பற்றி குறிப்பிட்டுள்ளோம். உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்காகவும், குறிப்பாக நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கு எதிராக சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளாலும் அவர்களது உள்நாட்டு பிரதிநிதிகளும் உள்நாட்டு, இனவாதத் தலைவர்களும் ஒன்றாக இணைந்து செயல்படுத்தப்படும் ஒரு செயலாகவே இதைக் கண்டு கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கான எதிர்ப்பும் முஸ்லிம் மக்களுக்கான எதிர்ப்பும் அச்செயற்பாட்டின் விளைவாகும். அது போன்ற நாசகார சிந்தனையைத் தலையில் வைத்துக் கொண்டவர்களுக்கு ஒரு போதும், ஒரு நாளும் உண்மையான நியாயத்தின் பக்கம் திரும்ப முடியாது.
அதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் அவற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களும் அதனை விளங்கிக் கொள்ளாதிருப்பதேயாகும். அதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்களது தேவைகளை நிறைவேற்றும் வண்ணம், போலியான உண்மையையும் போலியான நீதியையும் கோரி போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
“அவ்வாறே உங்களுக்காக (ஏனையோர்) ஏதேனும் செய்வதை நீங்கள் விரும்புகின்றீர்களா? அதையே நீங்கள் ஏனையோருக்கும் செய்யுங்கள்” எனும் கிறிஸ்தவ கூற்றுக்கு ஏற்ப வரலாறு நெடுகிலும் அவர்களது கண்களுக்கு எதிரிலேயே, பலருக்கு அநீதி இழைக்கப்பட்ட போது அவர்கள் மௌனிகளாகவே இருந்துள்ளனர்.
கிறிஸ்தவ மக்கள் என்ற வகையில் தமக்காக மட்டுமே நீதியை வென்று கொள்வதற்கு முடியுமா என்பதை பைபிலுக்கேற்ப எண்ணிப் பார்ப்பதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது எதிர்காலத்திலாவது ‘நீதி’ ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடை போன்று இயங்கும் நாடொன்றைக் கட்டியெழுப்பும் கிறிஸ்தவ அழைப்புக்கு நேர்மையாக பதில் கூற முடியும்.- Vidivelli