கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
சென்ற வார தொடர்ச்சி…
மீட்சியுண்டா?
மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது என்பது ஒரு பிரஞ்சுப் பழமொழி. எனவே இந்த இஸ்லாமோபோபிய அலையும் ஒரு நாள் மாறும். ஆனால் அது மாறும்வரை இந்த நாடும் மக்களும் காத்திருப்பதா அல்லது அதை விரைவில் மாற்ற வழிவகுப்பதா என்பதே இன்று எல்லாரையும் எதிர்நோக்கும் ஒரே கேள்வி.
முதலில், இஸ்லாமோபோபியா இழைத்த தீங்குகளைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்கள் பட்ட துன்பங்களும் அவர்கள் அடைந்த இழப்புகளும் ஒரு புறமிருக்க, நாடே அடைந்த இழப்புகள் கணிசமானவை. இஸ்லாமோபோபியாவின் மிகப் பெரிய தாக்கத்தை இன்று இலங்கையின் பொருளாதாரம் அனுபவிக்கிறது. முஸ்லிம்கள் இந்த நாட்டின் மிகச்சிறந்த முயற்சியாளர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பண்டைக்காலத்திலிருந்தே இந்த நாட்டின் உள்நாட்டுச் சந்தையை விருத்தி செய்தவர்கள் முஸ்லிம் வியாபாரிகள். மழையென்றும் வெய்யிலென்றும் இரவென்றும் பகலென்றும் பாராது ஊரூராய் அலைந்து தமது சில்லறை வியாபாரத்தின்மூலம் நாட்டு நுகர்வோரை பண்டங்களால் இணைத்தவர்கள் முஸ்லிம்கள் என்பதை வரலாறு கூறும். அது ஒரு புறமிருக்க, இன்றையப் பொருளாதாரத்தை இஸ்லாமோபோபியா எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் உணரவேண்டும்.
கொவிட்-19 கொள்ளை நோயினால் உலகமே கடந்த வருடம் பொருளாதார வீழ்ச்சியை அனுபவித்தது. அந்த நோய் இன்னும் தீர்ந்தபாடில்லை. ஆனால் பொருளாதாரம் மீட்சிபெற வேண்டும். இல்லையேல் பஞ்சமும் பட்டினியும் பெரும்பாலான மக்களை வாட்டி அது ஓர் அரசியல் பிரளயத்தையே உண்டுபண்ணலாம். ஆனால் பொறுப்பற்ற ஒரு போரினால் பாதிக்கப்பட்ட நாடு கடன் பளுவினால் முடங்கிக் கிடக்கிறது. ஒருவரிடம் பட்ட கடனை அடைக்க இன்னொருவரிடம் கடன்பட வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வங்காளதேசத்துக்குப் பிரதமரும் ஓமானுக்கு இராஜாங்க அமைச்சருமாகப் பிச்சைப்பாத்திரமேந்திச் சென்றது எதற்காக? கடனாளியாக வாழ்ந்த எவரும் செல்வம் திரட்டியதில்லை. அதே உண்மைதான் ஒரு நாட்டுக்கும். இந்தச் சந்ததிபட்ட கடனை இறுக்கும் பொறுப்பை வருங்காலச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்வது தர்மமாகாது. எனவே தாம் பட்ட கடனைத் தாமே இறுக்க வேண்டும். உழைப்பின் மூலம் இலாபம் சம்பாதித்து அந்த இலாபத்தைக் கொண்டே கடனை இறுப்பது கடமை. அந்த உழைப்பை எவ்வாறு பெருக்குவது?
எந்த ஒரு நாடும் ஒற்றுமையின்றிப் பிளவுபட்டிருக்கும் நிலையில் அதன் பொருளாதாரம் துரித வளாச்சியைக் காண்பது கஷ்டம். அதிலும் இலங்கைபோன்ற பல்லினச் சமூக அமைப்புள்ள நாட்டில் இனங்களுக்கிடையே பிளவிருந்தால் வளர்ச்சி தடைப்படும். மக்களை விடவும் மகத்தான சொத்து வேறில்லை. அந்த மக்களைக் கொண்டுதான் வறுமையால் பீடிக்கப்பட்டுக் கிடந்த வங்காளதேசம் இன்று அதன் பொருளாதாரத்தை இலங்கைக்குக் கடன் கொடுக்கும் அளவுக்கு வளர்த்துள்ளது. ஆனால், ஏற்கனவே சிங்கள தமிழ்ப் பிளவால் பின்னடைந்த இலங்கை, இப்போது இஸ்லாமோபோபியா வளர்க்கும் பௌத்த முஸ்லிம் பிளவால் இன்னும் பின்னடைய வேண்டுமா?
இலங்கையின் இன்றைய தேவை பாரிய வெளிநாட்டு முதலீடும் உலகளாவிய சந்தையும். சீனாவிடமும் இந்தியாவிடமும் பணமும் உண்டு, சந்தையும் உண்டு. அவர்கள் கடனும் தருவார்கள் முதலீடும் செய்வார்கள். எனினும் அந்த இரு ராட்சத முதலைகளிடம் சிக்குவது நாட்டின் இறறைமைக்கே ஆபத்து என்பதை அரசாங்கம் உணர்ந்தும் அவர்களிடமே தஞ்சமடைவது மடமை. அதே சமயம், இன்றைய மத்திய கிழக்கு அரபு நாடுகள் மிகையான சேமிப்பை குவித்துவைத்துள்ளன. ஓமானிடம் கடன் கேட்டுப்போனது அதனை உறுதிப்படுத்தவில்லையா? அந்த நாடுகளின் முதலீடுகளும் சந்தையும் இலங்கைக்கு அவசியம். ஆனால் அவை இஸ்லாமிய நாடுகள். இங்கேதான் இஸ்லாமோபோபியா ஒரு பிரச்சினையாகின்றது.
இலங்கை முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் இஸ்லாம் வகிக்கும் நிலைமையை மத்திய கிழக்கு நாடுகளுக்குக் காட்டும் ஒரு சாளரம். அந்தச் சாளரத்தினூடாக அன்றைய இலங்கை அரசுகள் முஸ்லிம்களை மத்திய கிழக்குக்குக் காட்டி அதன் மூலம் பெற்ற நன்மைகள் ஏராளம். இஸ்லாமோபோபியாவை இந்த அரசு அரசியல் லாபம் கருதிக் கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் ஏற்படும் நட்டங்களைத் தவிர்க்க முடியாது. உதாரணமாக, அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைச் சபையின் வாக்கெடுப்பில் சில முஸ்லிம் நாடுகள் இலங்கைக்குச் சார்பாக வாக்களிக்காததற்கும் இலங்கை முஸ்லிம்களின் கொவிட்-19 ஜனாஸாக்களை அரசாங்கம் தகனம் செய்ய அனுமதித்ததற்கும் தொடர்புண்டு என்பதை மறுக்க முடியாது. அது மட்டுமல்ல, எவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கு நாடுகளின் அரசுகளுக்கு இலங்கைக்கு எதிராக அழுத்தம் கொடுக்கிறார்களோ அதேபோன்று பெருகிவரும் புலம்பெயர் முஸ்லிம்களும் அரபு நாடுகளுக்கும் உலக முஸ்லிம் நாடுகளுக்கும் இனிமேல் அழுத்தம் கொடுக்கலாம். ஆகவே அரசாங்கம் இஸ்லாமோபோபியாவை கட்டுப்படுத்துதல் அவசியம்.
அதே சமயம் முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய கடமை உண்டு. 1980 களுக்கு முன்னுள்ள நிலைக்கு சமூகத்தின் மனோபாவம் மாற வேண்டும். அது எவ்வாறு என்பதற்கான வழிவகைகளை சமூகத்தின் ஆண், பெண் புத்திஜீவிகளே முன்னின்று வகுக்க வேண்டும். அதற்கு முதற்படியாக சமயமே கலாசாரம் அல்ல என்பதையும் கலாசாரத்தின் ஓர் அங்கமே சமயம் என்பதையும் மதத் தலைவர்களுக்கும் அவர்களின் பக்தர்களுக்கும் விளங்கவைக்க வேண்டும். முஸ்லிம்களின் பேச்சுவழக்கு, நடை உடை பாவனை, கலை வடிவங்கள், பொழுது போக்குகள் யாவையும் கலாசாரத்தினுள் அடங்கும். அவை தேசிய கலாசாரத்துடன் இணைந்ததாக அமையும்போது இனங்களிடையே சௌஜன்ய உறவு வளரும், வளர்க்கப்பட வேண்டும். அதையொட்டிய சில நிகழ்வுகளை முஸ்லிம் இளைஞர்கள் ஒழுங்கு செய்து மற்றைய இனங்களின் வரவேற்பைப் பெறவேண்டும். அதேபோன்று மத நல்லிணக்க மகாநாடுகள் முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அது வருடாவருடம் நாட்டின் சகல பகுதிகளிலும் வருடந்தோறும் புத்திஜீவிகளால் நடத்தப்பட வேண்டும்.
அவற்றையெல்லாம் விடவும் முக்கியமான ஒரு தேவை புதிய அரசியல் தலைமைத்துவம். சமூகப்பற்றும், நாட்டுப்பற்றும், அறிவும், தூர சிந்தனையும், மனிதாபிமானமும் கொண்ட ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவது முஸ்லிம் புத்திஜீவிகளின் தலையாய கடமை. அவ்வாறான தகைமைகள் கொண்ட பல இளைஞர்கள் இன்று முஸ்லிம்களிடையே இருக்கிறார்கள். அவர்களைத் தேடிப்பிடித்து சந்தர்ப்பம் வழங்குவது சமூகத்தின் கடமை. அப்படிப்பட்டவர்களின் வழிகாட்டலின்றி இஸ்லாமோபோபியாவை விரட்ட முடியாது. (முற்றும்) – Vidivelli