- ஓட்டமாவடியில் சனிக்கிழமை மாத்திரம் 19 ஜனாஸாக்கள் அடக்கம்
- இதுவரை மொத்தமாக 156 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன
- அடக்கம் செய்வதற்கான காணியில் இடப்பற்றாக்குறை ஏற்படலாம் என அச்சம்
(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கென கொண்டு வரப்படும் ஜனாஸாக்களின் எண்ணிக்கையிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை மாத்திரம் 19 ஜனாஸாக்கள் ஓட்டமாவடி, மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 5 ஆம் திகதி முதல் இப் பகுதியில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான ஜனாஸாக்கள் கடந்த சனிக்கிழமையே அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் 156 உடல்கள் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியிலுள்ள காணியில் நேற்று முன்தினம் வரை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
இதில், 143 முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் 6 கிறிஸ்தவர்களின் சடலங்களும், 6 இந்துக்களின் சடலங்களும், 1 பௌத்தரின் சடலமும் உட்பட 156 நபர்களின் உடல்கள் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றுள் நைஜீரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவரின் உடல்களும் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை கடந்த சில நாட்களாக அடக்கம் செய்வதற்கென கொண்டு வரப்படும் உடல்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாஸா அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனிடையே குறித்த காணியில் மேலும் 100 க்கு உட்பட்ட ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான நிலப்பகுதியே மீதமுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கென சுகாதார அமைச்சினால் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடையாளம் காணப்பட்டு அனுமதியளிக்கப்பட்ட காணியில் மாத்திரமே இதுவரை ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. நாட்டின் எப் பகுதியில் கொவிட் மரணங்கள் நிகழ்ந்தாலும் அடக்கம் செய்ய விரும்பும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்களின் சடலங்கள் இப் பகுதிக்கே கொண்டுவந்து அடக்கம் செய்யப்படுகின்றன.
தற்போது நாட்டில் கொவிட் மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் தினசரி தொற்றுக்குள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களில் மேலும் பல ஜனாஸாக்கள் இப் பகுதிக்கு அடக்கத்திற்காக கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் குறித்த காணியில் மேலும் 80 முதல் 100 வரையான ஜனாஸாக்களையே அடக்கம் செய்ய இடமிருப்பதால் ஏனைய பிரதேசங்களில் பொருத்தமான காணியை அடையாளம் கண்டு அவற்றில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முஸ்லிம்களின் மரண வீதமும் அதிகரித்துள்ளதால் தேவைக்காகவன்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறும் உரிய சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறும் சமூகத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.- Vidivelli