எம்.பி.எம். பைறூஸ்
• கொரோனா வைரஸ் தாக்கிவிட்டதா? ஒரு வெங்காயத்தை பச்சையாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு ஊட்டிவிடுங்கள். 5 நிமிடம் தண்ணீர் குடிக்கவிடக்கூடாது. 5 ரூபாய் செலவில் 5 நிமிடத்தில் குணமாகிவிடும். 15 நிமிடத்தில் பரிசோதித்து பாருங்கள் 1% உம் அந்த வைரஸ் இருக்காது
• பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் மூலம் கொரோனாவை விரட்டலாம்.
• புகையிலை கொரோனா வைரஸை குணப்படுத்தும்
• சீனாவில் வெள்ளைப்பூண்டு கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்கிறது
• வெந்நீரில் குளிப்பது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும்
• நுளம்புக்கடி மூலமாகவும் கொரோனா வைரஸ் கடத்தப்படலாம்
• அதியுயர் மற்றும் குளிரான வெப்பநிலைகள் வைரஸைக் கொல்லும் ஆற்றல் கொண்டவை
கொவிட் 19 வைரஸ் பரவ ஆரம்பித்து ஒன்றரை வருடங்களாகின்ற போதிலும் மேற்குறிப்பிட்டவாறான பல போலிச் செய்திகள் இன்னமும் பரவிக் கொண்டுதான் இருக்கின்றன.
உலகம் இன்று எதிர்நோக்குகின்ற மிகப் பாரிய அச்சுறுத்தல்களுள் ஒன்றாக ‘போலிச் செய்தி’ உருவெடுத்துள்ளது. “ எமது பொது எதிரி கொவிட் 19. ஆனால் அது பற்றி அதிகம் பகிரப்படும் போலியான தகவல்களும் எமது எதிரிதான் என்பதை மறந்துவிடக் கூடாது” என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்த கருத்தும் “ நாம் கொவிட் 19 வைரஸ் பரவலுடன் மாத்திரம் போராடவில்லை. போலியான தகவல் பரிமாற்றங்களுடனும் போராடிக் கொண்டிருக்கிறோம்” என உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தெட்ரொஸ் அதானொம் தெரிவித்த கருத்தும் இதன் பாரதூரத்தை உணர்த்துவதாகும்.
கொவிட் 19 முடக்க காலத்திலும் உலக நாடுகளைப் போன்றே இலங்கையிலும் போலிச் செய்திகளின் பரவல் அதிகரித்துள்ளமை குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும். We are social நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டின் ஜனவரி மாத புள்ளிவிபரங்களின்படி இலங்கையில் 7.90 மில்லியன் சமூக வலைத்தள பாவனையாளர்கள் இருக்கிறார்கள். இலங்கையின் சனத்தொகையை விடவும் 10 மில்லியன் அதிகமான சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான கையடக்கத் தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரிப்பானது இலங்கையில் போலிச் செய்திகள் வேகமாக பரவலடையவும் குறுகிய நேரத்தில் பெருந்திரளான மக்களைச் சென்றடையவும் காரணமாக அமைந்துள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை சுகாதார, மருத்துவ ஆலோசனைகள் எனும் போர்வையில் பரப்பப்படும் போலிச் செய்திகளை நம்பிப் பின்பற்றும் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் பேஸ்புக் மூலமாக பகிரப்பட்ட போலியான தகவலை நம்பி, Gaja Madara எனப்படும் இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குடிபானத்தை அருந்திய கம்பஹாவைச் சேர்ந்த 36 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையானது, இலங்கையில் போலிச் செய்திகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர்த்துவதாக உள்ளது.
ஐ.டி.எச் வைத்தியசாலையின் அறிவுறுத்தல்கள்
‘ஐ.டி.எச் வைத்தியசாலையின் அறிவுறுத்தல்கள்’ என்ற பெயரில் கொவிட் தொற்று தொடர்பான பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. ‘‘VitC-1000, Vit E மாத்திரைகளை சாப்பிடுங்கள், காலை 10 முதல் 11 மணி வரை சூரிய வெளிச்சத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நில்லுங்கள், தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்கள், 7 முதல் 8 மணி நேரம் ஓய்வெடுங்கள், தினமும் 1.5 லீற்றர் நீர் அருந்துங்கள்….’’ என நீண்ட பட்டியல் கொண்ட அறிவித்தல் ஒன்று கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக மூன்று மொழிகளிலும் பகிரப்பட்டு வருகிறது. எனினும் இவ்வாறான எந்தவித மருத்துவ வழிகாட்டல்களையும் தாம் வெளியிடவில்லை என ஐ.டி.எச். வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஹஸித திஸ்ஸேரா மறுத்துள்ளார்.
இதேவேளை மேற்படி தகவல்களை சுகாதார மேம்பாட்டுப் பணியகமும் மறுத்துள்ளது. இது குறித்து பணியகத்தின் உத்தியோகபூர்வ முகநூலில் அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
‘‘ இந்த ஆரோக்கிய குறிப்புகள் ஒருவரது சுகாதாரத்திற்கு நல்லவைதான். ஆனால் இவை ஒருபோதும் கொவிட் தொற்றிலிருந்து ஒருவரை பாதுகாக்கப் போவதில்லை. கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தேசிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சு, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் மற்றும் தொற்று நோய் தடுப்பு பிரிவு என்பவற்றினாலேயே வெளியிடப்படுகின்றன. அவற்றையே மக்கள் பின்பற்ற வேண்டும். மாறாக யாரோ பகிரும் போலியான தகவல்களை நம்பி தவறாக வழிநடாத்தப்படக் கூடாது’’ என குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்மிக்க பாணி
இதனிடையே இலங்கையில் தொழின்முறை மருத்துவரல்லாத நபர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘தம்மிக்க பாணி’ எனும் மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக தேசிய ஊடகங்கள் வாயிலாக பாரிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. சுகாதார அமைச்சர் முதல் சபாநாயகர் வரை இந்த பாணியை அருந்தி அவற்றை ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தியதால் இப் பாணிக்கான கிராக்கி அதிகரித்தது. பல்லாயிரக் கணக்கான மக்கள் குறித்த நபரின் வீட்டுக்குச் சென்று அப் பாணியைப் பெற்று அருந்தினர்.
‘‘ இப் பாணி பற்றி தகவல்கள் வேகமாகப் பரவியதால் மக்கள் நம்பினர். குறிப்பாக கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் கூட தம்மிக பண்டாரவின் வீட்டுக்குச் சென்று கூட்டத்தோடு கூட்டமாக நின்று பாணியைப் பெற்று அருந்தினர். இப் பாணியை அருந்தினால் சுகம் கிடைக்கும் என இம் மக்கள் நம்பியமை ஆபத்தானதாகும். இதனால் அவர்கள் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்காது அலட்சியமாக இருந்தனர். இது எமது பகுதியில் கொவிட் மேலும் பலருக்கு தொற்ற வழியேற்படுத்தியது’’ என வரக்காப்பொல பிரதேச சுகாதார பரிசோதகர் ஜயந்த குமார குறிப்பிடுகிறார்.
இப் பாணி தொடர்பில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் இதனால் கொரோனா வைரஸைக் குணப்படுத்த முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
‘‘அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 68 கொவிட் நோயாளர்களுக்கு இந்தப் பாணியை வழங்கி பரிசோதித்தோம். அவர்களில் எந்தவித முன்னேற்றங்களையும் எம்மால் மருத்துவ ரீதியாக கண்டறிய முடியவில்லை’’ என ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் சேனக பிலாபிடிய கூறுகிறார்.
‘‘இப் பாணியை பிரபல்யப்படுத்துவதில் முன்னின்ற சுகாதார அமைச்சரும் மேலும் சில சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கொவிட் தொற்றுக்குள்ளானமை நகைப்புக்குரியதாகும். அரசாங்கம் இன்றுவரை இப் பாணியைத் தடை செய்வதற்கோ அல்லது போலியான இப் பாணியைத் தயாரித்து விற்றமை குறித்து விசாரிப்பதற்கோ நடவடிக்கை எடுக்காமை கவலைக்குரியது’’ என சமூக ஊடக ஆய்வாளர் சஞ்சன ஹத்தொட்டுவ குறிப்பிடுகிறார். அத்துடன் இந்தப் போலிப் பாணியை மக்கள் மத்தியில் சந்தைப்படுத்துவதில் சமூக ஊடகங்களை விட சில தொலைக்காட்சிகளே முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின் Mythbusters
தவறான தகவல்கள் உயிரையே கொல்லக் கூடியவை. 2020 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களால் உலகெங்கும் 6000 பேர் வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் இவர்களில் 800 பேர் மரணமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் கொவிட் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற அதேநேரம் அது தொடர்பான போலிச் செய்திகளையும் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை உலக சுகாதார நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய Mythbusters எனும் போலிச் செய்திகளைத் துகிலுரிக்கும் இணையப் பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உலகளாவிய ரீதியில் அதிகம் பகிரப்படும் கொவிட் 19 தொடர்பான போலிச் செய்திகள் தொகுக்கப்பட்டு அவற்றுக்கான விளக்கங்களும் மறுப்புகளும் துறைசார் நிபுணர்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
உதாரணமாக இக் கட்டுரையில் ஆரம்பத்தில் பட்டியலிடப்பட்ட சில போலிச் செய்திகளுக்கான விளக்கங்களும் இதில் உள்ளன.
• வெங்காயத்தில் மருத்துவ நன்மைகள் உள்ள போதிலும் கொவிட் தொற்றினைக் குணப்படுத்தும் என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை என Mythbusters குறிப்பிடுகிறது.
• பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் மூலம் வைரஸைக் கட்டுப்படுத்தலாம் என்பது முற்றிலும் தவறானதும் அடிப்படையற்றதாகும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
• புகையிலை கொரோனா வைரஸை குணப்படுத்தும் எனும் கருத்தில் எந்தவித உண்மையுமில்லை என ஹெல்த் அனலைடிக் ஆசியா எனும் அமைப்பு உறுதி செய்துள்ளது.
•சீனாவில் வெள்ளைப்பூண்டு கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்கிறது எனும் தகவலை உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது. வெள்ளைப்பூண்டில் சில நுண்ணுயிர் எதிர்ப்பு இயல்புகள் காணப்படுகின்ற போதிலும் அது கொவிட் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்காது என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.
•வெந்நீரில் குளிப்பது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் எனப் பகிரப்படும் தகவல்கள் போலியானவை என உலக சுகாதார நிறுவனத்தின் இணையத்தளம் கூறுகிறது. ‘‘வெந்நீர்க் குளியில் உங்களை கொவிட் தொற்றிலிருந்து தடுக்காது. நீங்கள் எந்த வெப்பநிலை கொண்ட நீரில் குளித்தாலும் உங்களில் வெப்பநிலை 36.5–37 செல்சியஸ் இலேயே காணப்படும் என அது கூறுகிறது.
• நுளம்புக்கடி மூலமாகவும் கொரோனா வைரஸ் கடத்தப்படலாம் எனும் கருத்தையும் உலக சுகாதார நிறுவனத்தின் இணையத்தளம் மறுக்கிறது. இன்றுவரை இப் புதிய கொரோனா வைரஸ் நுளம்பின் மூலம் கடத்தப்படுவதற்கான சான்றுகள் இல்லை. இவ் வைரஸ் சுவாசத் தொகுதியுடன் தொடர்புபட்டதாகும்.’’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
• அதியுயர் மற்றும் குளிரான வெப்பநிலைகள் வைரஸைக் கொல்லும் ஆற்றல் கொண்டவை என்ற கருத்தை பலரும் நம்புகின்றனர். எனினும் இதுவும் தவறான நம்பிக்கையாகும். கொவிட் 19 வைரஸ் வெப்பம் மற்றும் ஈரப்பதன் காலநிலை கொண்ட பிரதேசங்கள் உள்ளடங்கலாக அனைத்துப் பிரதேசங்களுக்கும் கடத்தப்படும் தன்மை கொண்டது உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
இவற்றுக்கு அப்பால் கொவிட் தொடர்பான போலிச் செய்திகளை எதிர்கொள்வது தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு ஒன்றையும் அண்மையில் உலக சுகாதார நிறுவனம் நடாத்தியது. மேலும் ஐக்கிய இராச்சியம் மற்றும் பி.பி.சி. வலையமைப்புடன் இணைந்து உலகெங்கும் கொவிட் தொடர்பான தவறான தகவல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பாரிய வேலைத்திட்டங்களையும் இந் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
சமூக ஊடகங்களின் வேலைத்திட்டங்கள்
இவ்வாறான தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்ற நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்தவும் அது தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டவும் பேஸ் புக் நிறுவனமும் இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன. இதற்கமைய ‘‘ கொவிட் 19 சம்பந்தமான தவறான தகவல்களுக்கு எதிராக போராட 6 குறிப்புகள்’’ எனும் தலைப்பிலான விழிப்பூட்டல் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
1. வெறுமனே ஒரு தலைப்பை மட்டுமல்லாது, முழுக் கதையையும் அறிந்து கொள்ளுங்கள்
2. ஒரு நம்பகரமான ஆதாரமே உங்கள் பாதுகாப்பான தெரிவாகும் .
3. வதந்திகளை அல்லாது, உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
4. நம்பகரமான ஆதாரங்களிலிருந்து முழுமையான பின்னணியையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்
5. ஒரு தவறான கதை ஒரு நண்பரினால் அல்லது குடும்ப அங்கத்தவரினால் பகிரப்பட்டிருந்தால் அவர்களுடன் தொடர்பு கொண்டு உண்மையைத் தெளிவுபடுத்துங்கள்.
6. உங்கள் உணர்வுகளை ஆராய்ந்து பாருங்கள் ஆழமாகச் சிந்தியுங்கள் எனும் 6 வழிகாட்டல்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்போது இலங்கையில் கொவிட் 19 மூன்றாவது அலை பரவ ஆரம்பித்துள்ள நிலையில் பல போலிச் செய்திகள் வலம்வர ஆரம்பித்துள்ளன. சமூக ஊடகங்கள் வாயிலாக தமக்கு கிடைக்கப் பெறும் தவறான தகவல்களைப் பரப்புவோரில் பாமர மக்கள் மாத்திரமன்றி நன்கு படித்தவர்களும் உள்ளடங்குகின்றனர். அந்தவகையில் படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் இதன் பாரதூரம் தொடர்பிலும் தகவல்களை உறுதிப்படுத்திய பின்னரே பகிர வேண்டும் என்பது பற்றியும் அறிவூட்ட வேண்டியுள்ளது.
அந்த வகையில் இலங்கையில் கொவிட் 19 தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் மாத்திரமே வெளியிடுகிறது. இதன் சமூக வலைத்தள பக்கங்களில் மூன்று மொழிகளிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பின்தொடர்வதன் மூலம் கொவிட் 19 தொடர்பான நம்பகமான தகவல்களையும் போலிச் செய்திகளையும் பிரித்தறியக் கூடியதாக இருக்கும் என்பது திண்ணம். – Vidivelli