உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர்
ஸகாத் சமூக வாழ்வில், குறிப்பாக பொருளாதார வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் கவனமாக அவதானிக்கத் தக்கதாகும். அல்குர்ஆனில் அல்லாஹ் ஸகாத் எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என விளக்கியுள்ளமை இங்கு கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.
ஸகாத் என்பது பரம ஏழைகளுக்கும், ஏழைகளுக்கும், ஸகாத்தின் செயற்பாட்டுக்காக உழைப்போருக்கும், இஸ்லாத்தின்பால் அவர்களது உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், இறைபாதையிலான உழைப்புக்கும்,வழிப்போக்கர்களுக்குமே உரியவை. இது அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் யாவும் அறிபவன், மிக்க ஞானமுடையவன். (அல்குர்ஆன் : 9:60)
இந்த வசனம் தரும் கருத்துக்களை கீழ்வருமாறு விளக்கலாம் :
வறுமைப் பட்டோன் : இதனை இரு தரமாக அல்குர்ஆன் பிரிக்கிறது:
1) பகீர் : இவர் தனக்குத் தேவையான வருமானத்தில் மிகச் சிறிய பகுதியையே சம்பாதிக்கும் பரம ஏழையாவார். வருமானத்தில் 50% இற்கும் கீழ் உழைப்பவர் எனலாம்.
2) மிஸ்கீன் : தனக்குத் தேவையான வருமானத்தில் ஓரளவு உழைத்துக் கொண்டு கஷ்டத்தோடு வாழ்வைக் கொண்டு செல்பவர். 50% இற்கு மேல் வருமானத்தை உழைப்பவர், 100% வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாதவர் என இவரை வரையறுக்கலாம். வறுமையை ஒழிக்கும் வகையிலான இந்த வழிகாட்டலைக் கீழ்வருமாறு புரிந்து கொள்ளலாம்:
1. வறுமை ஒழிப்பில் பங்கு கொள்வதே ஸகாத்தின் முதன்மையான இலக்காகும். இது ஆழமாக விளக்கத் தேவையில்லாத அளவு தெளிவானதாகும். எனவே ஸகாத்தின் கூடுதல் பகுதி இதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
2. வறுமை ஒழிப்பை ஸகாத்தால் மாத்திரம் சாத்தியப்படுத்த முடியாது. கட்டாய செலவினங்கள் அதாவது ஓர் ஆணின் செலவினத்திற்கு உட்படுவோர், வஸிய்யத், குற்றங்களுக்குப் பரிகாரம் செய்தல், ஸகாத் அல்பித்ர், உழ்ஹிய்யா, அகீகா, வக்ப், பரிசு, நேர்ச்சை, கடன் இவற்றோடு அண்டை வீட்டார் உரிமையும் சம்பந்தப்படும். ஒரு முஸ்லிம் சமூகத்தில் இவை அனைத்தும் இணைந்து இயங்கும் போதுதான் வறுமை ஒழிப்பு சாத்தியமாகும். எனவே இது பற்றிய விழிப்புணர்வு ஊட்டப்படலும், ஆர்வமூட்டப்படலும், மிகவும் முக்கியமானதாகும். இப்பகுதியில் முஸ்லிம் அல்லாதவர்களும் பங்கு பெறுவார்கள் என்பது இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
3. இப்பங்கு விநியோகிக்கப்படும் போது மிஸ்கீன், பகீர் என்ற இரு சாராருமே கவனத்திற் கொள்ளப்படவேண்டும்.
i. அல்லாஹ்வே இவ்வாறு வறுமைப்பட்டோரைப் பிரித்துச் சொல்லி இருப்பதால் அதனைக் கடைப்பிடிப்பது எமது கடமையாகிறது.
ii. மிஸ்கீன் என்பவர் பொருளாதார ரீதியாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடலாம். இத்தகையவர்களை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்துவது இலகுவானது என்பதோடு அது சமூகம் பலம் பெறவும் காரணமாகும். இந்த வகையில் வறுமைக்கு ஒதுக்கப்படும் தொகை இந்த இரு சாராருக்குமே தனித்தனியாக ஒதுக்கப்பட வேண்டும். மிஸ்கீன் ஒரு தனிப்பிரிவாகக் குறிக்கப்பட்டுள்ளமையையும், ஸகாத் பெறத் தகுதியானோர் எட்டுக் கூட்டத்தினர் என்பது அப்பிரிவினர் தனிப் பிரிவாகக் கொள்ளப்பட்டுத்தான் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
4. கணிப்பீடு : குறிப்பிட்ட ஊரின் வறுமை பற்றியும், வறுமைப்பட்ட குடும்பங்கள் பற்றியும் ஒரு சரியான கணிப்பீடு செய்யப்படல் மிகவும் அவசியமாகும்.
அத்தகைய கணிப்பீட்டின் ஊடாக இரண்டு விடயங்களை அடையாளம் காண வேண்டும்.
I. வறுமையை ஒழிக்கும் முறைமை பற்றிய தெளிவு.
II. குறிப்பிட்ட வறுமை ஒழிப்பதற்கான காலப்பிரிவைத் திட்டமிடல். அதாவது இவ்வளவு பணத்தொகை வருடா வருடம் செலவிடப்பட்டால், இன்ன வகையான படிமுறைகளைக் கையாண்டால் வறுமையை ஒழித்து விடலாம் என்ற படிமுறைகளைத் திட்டமிடலாம்.
5. நுகர்வுத் தேவைக்காக இப்பங்கிலிருந்து கொடுப்பதை நன்கு குறைத்து முதலீடு, தொழில் முயற்சி என்பவற்றை முதன்மையாகக் கொள்ளல்.
அதாவது இத்தகைய பிரிவினர்களில் பொருத்தமானவர்களுக்குப் பொருத்தமான தொழிற் பயிற்சியைக் கொடுத்தல், குறிப்பிட்ட தொழிலை ஆரம்பித்து இவர்களை பங்குதாரர்களாக்கல்.
இவ்விடயங்கள் பற்றிய துறை சார்ந் தோரின் ஆலோசனையின் பின்னர் இதனைச் செய்வதே மிகப் பொருத்தமாக அமையும்.
6. மனோதத்துவ, ஆன்மீகப் பயிற்சிகளை வழங்கல்:
பொருளாதார ரீதியில் அடிமட்டத்தில் இருப்பவர்களான பகீர் என்போர் ஆன்மீகப் பலப்படுத்தப்படும் தேவையுடையோராவர். கை நீட்டாது வாழ்ந்து சுயமரியாதையைக் காத்துக் கொள்ளல், நாமும் வாழ்வில் உழைத்து முன்னேற முடியும் என்ற கருத்துக்களை மனதில் பதியச் செய்யும் ஆன்மீக மனோ தத்துவப் பயிற்சிகளையே இங்கு கூறுகிறோம்.
இன்னொரு வகையில் சொன்னால் இத்தகைய மனிதர்களிடம் ஒரு மன மாற்றத்தை உருவாக்கி அவர்களது வாழ்வில் ஒரு வித்தியாசமான போக்கை உருவாக்கிவிடல் எனக் கூறலாம்.
7. நுகர்வுக் கலாசாரம் வறுமையின் பின்னால் உள்ள முக்கிய காரணிகளில் ஒன்று. உணவு, உடை, வீடு, திருமணம் போன்ற நிகழ்வுகள் போன்றவற்றில் ஆடம்பரப் போக்கைப் பரவலாகக் காண முடியும். இதனால் நுகர்வை செயற்கையாக அதிகரித்துக் கொண்டு நுகர்வையே வாழ்க்கைப் போக்காகக் கொள்பவன் வறுமையையும் பல சந்தர்ப்பங்களில் செயற்கையாக உருவாக்கிக் கொள்கிறான்.
இந்நிலையில் ஜுஹ்த் – உலகப் பற்றற்ற வாழ்வு, கனாஆ – – திருப்தி காணல் என்ற இஸ்லாமிய விழுமியங்கள் பற்றிய விழிப்புணர்வூட்டலும், அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு ஆர்வமூட்டலும் மிகவும் அவசியமான சமூக வேலைத்திட்டமாக கொண்டு செல்லப்படல் இப்பகுதியில் அடிப்படையானதாகும்.
3) கடன்காரன்: இது குறித்த கீழ்வரும் உண்மைகளைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
i. இவர் ஏழையாக இருக்க வேண்டும். கடனைக் கட்ட வழிகள் இல்லாதிருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். அதாவது கடனைக் கட்ட விற்பதற்கான மேலதிகப் பொருட்கள், செல்வங்கள் எதுவும் இவரிடம் இருக்கக் கூடாது. அதேவேளை படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டும் சக்தியும் இவரிடம் இல்லாதிருக்க வேண்டும்.
ii. பாவ காரியங்களின் காரணமாக இவர் கடன்பட்டிருக்கக் கூடாது. ஆடம்பர செலவினங்களுக்காகக் கடன்படலும் இதில் அடங்கும். உதாரணமாகத் தனது சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் திருமண செலவுகளை மேற்கொண்டு கடன்படல். தனது தேவைக்கு அதிகமாக வீடு கட்டி அல்லது வீட்டை அழகு படுத்திக் கடன்படல் போன்றவை எல்லாம் இதில் அடங்கும்.
iii. பெரிய தொகையாக அமைந்துள்ள கடன்களை நிறைவு செய்ய முயலும் போது ஸகாத்தாக சேர்ந்த தொகை மிகவும் பாதிக்கப்படும் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். இந்நிலையில் கீழ்வரும் முறைகளைக் கையாளலாம்.
I. சிறிய கடன்களுக்கு உதவுதல்
II. கடன் கொடுத்தவரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு படிப் படியாகச் செலுத்துதல்
III. கடனில் ஒரு பகுதியை மாத்திரம் செலுத்துதல்
4) அல்- முஅல்லபத் குலூபுஹும்.
உள்ளங்கள் இணைக்கப்படும் தேவையுடையோர் என்பது இதன் நேரடிப் பொருள். பொதுவாக இஸ்லாத்தை புதிதாக ஏற்றோரை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்தலும், இஸ்லாமிய ரீதியாக அவர்களைப் பயிற்றுவித்தலும் இதன்மூலம் கருதப்படுகிறது என இப்பிரயோகத்திற்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது.
5) பீ ஸபீலில்லாஹ்.
இப்பங்கு சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளைப் பொறுத்தவரையில் அவர்களது இருப்பைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்பது ஸகாத் ஒழுங்குபடுத்தலுக்கான சர்வதேச நிறுவனத்தினதும் இன்னும் பல சட்டமன்றங்களினதும் பத்வாவாகும்.
இப்பகுதியில் அடிப்படையானது முஸ்லிம்களை ஆன்மிக ரீதியாகப் பலப்படுத்தி அவர்களுக்கு மத்தியில் காணப்படும் சீர்கேடுகளைக் களைந்து ஒழுக்க ரீதியாக மேம்படச் செய்தலாகும்.
6) அல் ஆமிலூன்.
ஸகாத்தின் செயற்பாட்டுக்காக உழைப்போர் என்பது இதன் பொருளாகும். ஸகாத் தனி நபர்கள் மூலமாக நிறைவேற்றப்படாது ஒரு நிறுவன ஒழுங்கில் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை இது கொடுக்கிறது.
ஏற்கனவே விளக்கப்பட்ட ஸகாத் மூலமான இலக்குகளை அடைந்துகொள்ள இத்தகைய நிறுவனம் மிக அவசியமானது என்பது தெளிவான உண்மையாகும்.
ரிகாப் -– அடிமைகள், இப்னு ஸபீல் – – பிரயாணி என்ற அடுத்த இரு பிரிவுகளதும் பிரயோகம் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. அவை விரிவான விளக்கங்களை வேண்டி நிற்பன. சுருக்கமாக அவற்றை உள்ளடக்குவது கடினம் என்பதால் அவற்றை இங்கு தவிர்க்கிறோம்.
ஸகாத் என்பது முஸ்லிம் சமூகத்தை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்தும் அதேவேளை ஆன்மிக, ஒழுக்க ரீதியாகவும் அவர்களைப் பலப்படுத்துகிறது என்பது மேலே விளக்கப்பட்டவை மூலம் தெளிவாகிறது.
இந்த வகையில் முஸ்லிம் சமூகம் நாட்டுக்கும் இதன்மூலம் பங்களிப்பை செய்கிறது. அரசின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பங்கெடுப்பது இதில் ஓரம்சமாகும்.
இரண்டாவது நாட்டின் சுமுக வாழ்வுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஒழுக்க ரீதியாக உயர்ந்த நற்பிரஜைகளை அது உருவாக்க முனைகிறது. -Vidivelli