ஏ.ஜே.எம். நிழாம்
தம்மைவிடப் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களிடமிருந்து அதிகாரப் பரவலைக்கோரும் தமிழ் தரப்பினர் தம்மைவிடவும் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு அதிகாரப்பரவலை உத்தரவாதப்படுத்தாதிருப்பது என்ன நியாயம் என்பதால் தான் தந்தை செல்வா 1957ஆம் ஆண்டு திருமலை மாநாட்டில் ஒரு தீர்வை முன்வைத்திருந்தார். சுமந்திரன் தந்தை செல்வாவைப்போல் ஒரு வழக்கறிஞரே என்பதால் அவர் இதைப்புரிந்து கொள்வார் என நினைக்கின்றேன். வடக்கு கிழக்கில் தமிழ் தரப்பினர் முஸ்லிம்களுக்கான அதிகாரப்பரவலை நிர்ணயிக்காவிட்டால்அவர்கள் அடைய விரும்பும் தீர்வு முழுமை பெற்றுவிடாது.
ஒரு இனப்பிரச்சினைக்கென முன்வைக்கப்பட்டு அமுலாகும் தீர்வு இன்னொரு பிரச்சினைக்கு வித்திட்டுவிடும் என்பதற்காகவே நான் அதைக்கூறுகிறேன்.
அதாவது முஸ்லிம்களை புறக்கணித்துவிட்டு தமிழர்க்கு மட்டுமே வழங்கப்படும் தீர்வாகவும் முஸ்லிம்களை ஒதுக்கிவிட்டு தமிழரே தமக்குள் அடைந்துகொள்ளும் தீர்வாகவும் அது ஆகிவிடும். உத்தேச புதிய யாப்பு 1972 ஆம், 1978 ஆம் ஆண்டுகளின் யாப்புகள்போல் அமையாது. தமிழரையும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். இந்த யாப்புகளில் தமிழரும் முஸ்லிம்களும் புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள். உத்தேச புதிய யாப்பு சிங்களவரும் தமிழரும் இணைந்து முஸ்லிம்களை புறக்கணித்தது என்னும் பழிக்கு உள்ளாகி வரலாறாகிவிடக்கூடாது. தமிழர் பேரளவில் இணைந்து கொள்வார்களாயின் பேரினவாதத்தோடு சிங்களவர் முஸ்லிம்களைத் தொல்லைகளுக்கு உட்படுத்தி அச்சுறுத்திக்கொண்டிருப்பார்களாயின் முஸ்லிம்களுக்கும் ஆனதாக உத்தேச புதிய யாப்பு அமையாது. முஸ்லிம்களைப் புறக்கணித்த இந்திய இலங்கை ஒப்பந்தம்போல் ஆகிவிடும். அரச சார்போ, பேரினசார்போ, கட்சிசார்போ இல்லாமல்தான் உத்தேச பல்லினப் புதிய யாப்பு அமையவேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் கூட உத்தேச புதிய யாப்பில் பாரபட்சம் ஏற்பட்டு விடும். தமிழ் முஸ்லிம் பகையும்கூட இதில் பேரினவாதிகளுக்கு ஏற்பட்டுவிடும்.இது பேரழிவுக்கு வாய்ப்பாகிவிடும்.
1984 ஆம் ஆண்டுக்குப் பின் முஸ்லிம்கள் தனித்துவ மனநிலைக்கு வந்ததில் வியப்பில்லை. நிறைவேற்று அதிகாரத்தை பெற்றிருந்த ஜே.ஆரும் ஆயுதம் தரித்திருந்த தமிழ் போராளிகளும் திம்புவில் முஸ்லிம்களைத் தவிர்த்துவிட்டுப் பேசியதும் தமிழ் ஆயுதப்போராளிகள் ஆயுத முனையில் முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கியதுமே அதற்கு காரணங்களாகும். முஸ்லிம் தலைவர்கள் 1985 ஆம் ஆண்டு பெங்களூரில் தமிழ் ஆயுதக்குழுக்களோடு பேசியும் கூட அவர்கள் மசியவில்லை.
அவர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமது ஆட்சிக்கென வழங்க வேண்டும் என்றார்கள். பல்லினம் வாழும் கிழக்கை வடக்குடன் இணைத்து தமிழ் ஆயுதக்குழுக்களிடம் வழங்கிவிட்டால் என்னாகும்? கிழக்கிலுள்ள சிங்களவரும் தமிழரும் தமிழ் ஆயுதக்குழுவிடம் ஜனநாயக உரிமையை இழந்துவிடுவார்கள். வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்தும் 1000 வருடங்களாக ஒன்றிணைந்திருந்த முஸ்லிம்கள் தமிழ் ஆயுதப்போராளிகளால் விரட்டப்பட்டதையும் கிழக்கில் முஸ்லிம்கள் பரவலாகக் கொல்லப்பட்டதையும் இதற்கு உவமையாகக்காட்டலாம்.
1889 ஆம் ஆண்டுக்கு முன் இலங்கை சட்ட நிர்ணய சபையில் மேல்மாகாணம் சார்பில் முஸ்லிம்களுக்குமாகச் சேர்த்து சேர் பொன் இராமநாதனே பிரதிநிதித்துவம் வகித்தார். இந்நிலையில் தான் 1889 ஆம் ஆண்டு அறிஞர் சித்திலெப்பை, அறிஞர் ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ், வாப்பிச்சி மரைக்கார் ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க ஆங்கில ஆட்சியாளர் முஸ்லிம்களுக்கெனத் தனியாக எம்.சி. அப்துர் ரஹ்மானை நியமித்தார்கள். இது பிரித்தாளும் தந்திரமல்ல. இன ரீதியான தேசிய அங்கீகாரமாகும். இதுபற்றி ஆத்திரமுற்ற சேர் பொன் இராமநாதன் இலங்கை முஸ்லிம்களும் தமிழர்களே. எனவே முஸ்லிம்களுக்குத் தனிப்பிரதிநிதித்துவம் தேவையில்லை என எழுதி இங்கிலாந்தின் ரோயல் சொசைட்டிக்கு அனுப்பி வைத்திருந்தார். உடனே அதை மறுத்து அறிஞர் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் ராமநாதனுக்கு ஒரு மறுப்பு என்னும் நூலை எழுதி முஸ்லிம்கள் தமிழர்களல்லர் தனித்துவ சமூகத்தினர் என்பதைத் தக்க ஆதாரங்களோடு நிரூபித்தார். இரண்டும் ஆங்கில மொழியிலேயே அமைந்திருந்தன. முடிவில் அறிஞர் ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் முன்வைத்த ஆதாரங்களே ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அக்காலகட்டத்தில் சேர் பொன் இராமநாதனும் அவரது சகோதரர் சேர் பொன் அருணாசலமும் சிங்கள மக்களின் தலைவர்களாகவே மதிக்கப்பட்டிருந்தார்கள். சேர் பொன் அருணாசலம் இலங்கைக்கு சுதந்திரம் கோரிய தேசிய காங்கிரஸின் தலைவராகவே செயற்பட்டார்.
அதன்பிறகே 1915 ஆம் ஆண்டில் இலங்கை முஸ்லிம்கள் சிங்களப் பெரும்பான்மையினரால் பலத்த அழிவுக்கு உள்ளானார்கள். ஆங்கில ஆட்சியாளர் இராணுவ சட்டத்தின்கீழ் அடக்கியிருக்காவிட்டால் இலங்கை முஸ்லிம்கள் மிகப்பெரும் அழிவுக்கு உள்ளாகியிருப்பார்கள். அதற்கென பஞ்சாப் முஸ்லிம் இராணுவப்பிரிவு வரவழைக்கப்படாதிருந்தால் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருந்திருக்காது. இந்நிலையில்தான் சேர் பொன் இராமநாதன் இங்கிலாந்துக்குப் போய் பஞ்சாப் முஸ்லிம் இராணுவப் பிரிவைத் திருப்பி அழைக்கச் செய்திருந்தார். இதற்குரிய நன்றியாக சிங்களப் பெரும்பான்மைச் சமூகத்தலைவர்கள் அவரைக் கொழும்பு துறைமுகத்திலிருந்து தேரில் அமரவைத்து இழுத்து வந்திருந்தார்கள். இதனால் முஸ்லிம்கள் மேலும் ஆத்திரமுற்றார்கள். இதுவே தமிழ் முஸ்லிம் பகையாக இற்றை வரை நீடித்திருக்கிறது. எனினும் தந்தை செல்வா முஸ்லிம்களையும் தனி இனமாக ஏற்றிருந்தார்.
இலங்கை முஸ்லிம்கள் தமிழரில் ஒரு பிரிவினரல்லர் என அறிஞர் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் நிறுவியது சரிதான். அதற்காக இலங்கை முஸ்லிம்கள் சிங்களவரில் ஒரு பிரிவினரே என நிறுவியது தவறாகும். அவரது இத்தகைய கூற்றைச் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களை தம்பக்கம் சேர்த்துக் கொள்ளவே ஆதரித்தார்கள். இதுவும்கூட முஸ்லிம்கள் சேர் பொன் இராமநாதனை வெல்லக் காரணமாகியது. இது பேரினத்தால் சீரணிக்கப்படும் அபத்தக் கருத்தாகும். அரபுத் தந்தையர்க்கும் சிங்கள தாய்மாருக்கும் பிறந்த சந்ததியே இலங்கை முஸ்லிம்கள் என்கிறார்கள்.அரபிகள் தமிழ்ப் பெண்களை மணமுடிக்கவில்லையா? அரபுப் பெண்களை அழைத்து வரவில்லையா? சிங்களப் பெண்களோடு மட்டும் அவர்களை ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும்? சிங்கள இனத்தோடு தேசியத்தை தொடர்புபடுத்தவேயாகும்.
அன்று பேரினவாத தமிழ் தலைவர்கள் முஸ்லிம்களை சீரணிக்க முயன்றது போலவே தற்போது பேரினவாத சிங்களத் தலைவர்கள் முஸ்லிம்களை சீரணிக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. சிங்களம் மட்டும் என்னும் பிரேரணையை முதன் முதலில் சட்ட நிர்ணய சபையில் முன்மொழிந்து சேர் மாக்கான் மாக்காரே உரையாற்றியிருந்தார். டி.பி.ஜாயாவே சிங்களத் தலைவரிடம் நிர்வாக முகாமைத்துவத்தை வழங்குமாறு சிபாரிசு செய்திருந்தார். சேர் ராசிக் பரீத் தனிச் சிங்கள சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்திருந்தார். 29 ஆ என்னும் சிறுபான்மைக் காப்பீடு சட்டம் 1972ஆம் ஆண்டு நீக்கப்பட்டு பெரும்பான்மைச் சமூகத்தின் மத மற்றும் சாசன முன்னுரிமைகள் யாப்பில் இணைக்கப்பட்டபோது முஸ்லிம் தலைவர்கள் ஆட்சேபிக்கவில்லை. முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் சிறுபான்மையினரின் தனியார் பாடசாலைகளை அரசுடைமையாக்கினார். சர்வ கலாசாலைக் கல்வியில் தரப்படுத்தலைக் கொண்டுவந்து சிறுபான்மைகளுக்கான உயர்கல்வி வாய்ப்பைக் குறைத்தார். ஆக சேர் பொன் இராமநாதனுக்கு எதிரான முஸ்லிம் தலைவர்களின் இத்தகைய செயற்பாடுகள் யாவும் சிங்களப் பேரினவாதத்துக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமைந்தன. தமிழர் முஸ்லிம் பிளவு இன்றளவும் தொடரவே செய்கின்றது. இது சிறுபான்மைகளுக்கு மேலும் அழிவையே தரும்.
இப்போது மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டியது போல் சிங்களப் பேரினவாதிகளும் கூட முஸ்லிம்களுக்குக் கொடுமைகள் இழைக்கவே செய்கிறார்கள். மொழியால் ஒன்றாக இருந்த போதும் கலிமா சொல்லியிருந்த காரணத்துக்காகவே 1000 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த முஸ்லிம்களை தமிழ் ஆயுததாரிகள் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலிருந்தும் 1990இல் விரட்டியடித்தார்கள். இப்போது கலிமாவை முன்வைத்தே சிங்களப் பேரினவாதிகள் முஸ்லிம்களைக் கடுமையாக வறுத்துகிறார்கள். தமிழ் ஆயுதப் போராளிகள் 2009ஆம் ஆண்டு முடக்கப்பட்ட புதிதில் ஐநாவில் வாக்கெடுப்பிலும் வென்ற பின் இதற்கான எத்தனிப்பு வலுவாகியது.
2011ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற விமான குண்டுத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா சில அமைப்புகளைப் பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்ததில் புலிகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்ததால் ஐநாவில் இலங்கை வெல்ல முடிந்தது. அமெரிக்கா சார்பான முஸ்லிம் நாடுகள் இலங்கைக்குச் சார்பாக வாக்களித்திருக்காவிட்டால் அந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. எனினும் 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டின் பாதி வரை இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிங்களப் பேரினவாதிகளின் கடுமையான கொடுமைகளுக்கு இலக்கானார்கள். சில பிக்கு அமைப்புகள் திடீரென உருவாகி இதில் முன்னிலை வகித்தன. இவற்றுக்குப் பின்னால் சில மறை கரங்கள் இல்லாமல் இவை நிகழ வாய்ப்பு இல்லை. இவை குறித்து இதுவரை எந்த விசாரணைகளும் இல்லை. தண்டனைகளும் இல்லை. தமிழ் தரப்பினருக்குரியவற்றை வழங்குவதை விட்டும் நாட்டு மக்களை உள ரீதியில் திசை திருப்பவும் தமிழ் தரப்பைப் போல் முஸ்லிம்கள் தலை தூக்காதிருக்கவுமே முஸ்லிம்களுடனான பிரச்சினை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. கிறிஸ்தவர் மீதான தாக்குதல் முஸ்லிம் கிறிஸ்தவர் பகையை உருவாக்கி தமிழ் தரப்பினருக்கான முக்கிய இலக்கை மழுங்கடிப்பதற்காகவும் இருக்கலாம். தமிழருக்குப் பாடம் புகட்டும் செயற்பாடாகவும் இருக்கலாம். முஸ்லிம்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் செயலாகவும் இருக்கலாம்.
அனகாரிக தர்மபாலவினால் கடந்த நூற்றாண்டில் விதைக்கப்பட்ட பேரினவாதம் எஸ்.டப்ளியு. ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் அரசியல் மயப்படுத்தப்பட்டு தற்போது மதத்துறவிகளும் இதில் முன்னணி வகிப்பதால் தமிழ் முஸ்லிம் சிறுபான்மைகள் அதலபாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சேர் பொன் இராமநாதனும் இப்போது இல்லை. சேர் பொன் அருணாசலமும் இல்லை. சேர் மாக்கான் மாக்காரும் இல்லை. டி.பி.ஜாயாவும் இல்லை. சேர் ராசிக் பரீதும் இல்லை. பதியுதீன் மஹ்மூதும் இல்லை. அவர்கள் தேசிய நல்லிணக்கத்துக்காகத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைகளை சிங்களப் பெரும்பான்மைச் சமூகத்தோடு சேர்த்துவிட்டிருந்தார்கள்.
தற்போது அவர்களின் அன்றைய நோக்கம் பாழாகியே விட்டிருக்கிறது. பிற்காலத்தில் இவ்வாறு நிகழ்வதைத் தவிர்ப்பதற்காகவே ஆங்கில ஆட்சியாளர் 1948 ஆம் ஆண்டு முழுச் சுதந்திரமுமற்ற டொமினியன் சுயாதீனத்தை வழங்கி சிறுபான்மைக் காப்பீடாக 29 ஆ என்னும் ஷரத்தையும் தமது சோல்பரி யாப்பில் சேர் ஐவர் ஜனிங்ஸ் மூலம் வழங்கியிருந்தார்கள். அந்த யாப்பை 1972ஆம் ஆண்டு சிங்களத் தலைவர்கள் மட்டும் கொழும்பு ரோயல் கல்லூரி நவரங்கஹல மண்டபத்தில் கூடி இரத்து செய்ததால் தமிழ் முஸ்லிம் சிறுபான்மைகளை முழுமையாகவே முடக்கிவிட்டார்கள்.
உத்தேச புதிய யாப்பு இந்த நிலைப்பாட்டை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரை இருப்பதாகத் தெரியவில்லை. பௌத்த சிங்களவரான ஜே.ஆர். 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தன்னை ஆக்கிக்கொண்ட போதும் கூட முஸ்லிம்கள் ஆட்சேபிக்கவில்லை. அந்த அளவுக்கு பௌத்த சிங்களத் தலைமை மீது இவர்களுக்கு அபிமானம் இருந்ததே காரணமாகும். 1957ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் திருமலை மகாநாட்டில் கிழக்கில் முஸ்லிம் அலகு எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது அல்லவா? அது அப்போது பண்டா செல்வா ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்த போதும் பேரினவாதிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாகக் கிழித்தெறியப்பட்டது. எனினும் சிங்களத் தலைவரும் தமிழ்த் தலைவரும் செய்திருந்த அந்த ஒப்பந்தமானது இலங்கை முஸ்லிம்களின் தேசிய உரிமையை நிரூபிப்பதாகவே அமைந்திருக்கிறது. அந்த வகையில் அதற்கு மாற்றமாக ஆயுத ரீதியில் முஸ்லிம்களின் சுயநிர்ணயத்தையும் இறைமையையும் மறுத்த தமிழ் ஆயுதக் குழுக்களுடன் இன விவகாரம் குறித்து திம்பு மாநாட்டில் 1984ஆம் ஆண்டு பேசியதன் காரணமாக இலங்கை முஸ்லிம்களின் சுயநிர்ணயமும் இறைமையும் கேள்விக்குள்ளாகின.
ஆக, சிங்களத் தரப்பினர் அதிகார ரீதியிலும் தமிழ் தரப்பினர் ஆயுத ரீதியிலும் முஸ்லிம்களின் தேசிய அடையாளத்தையும் அடிப்படை உரிமைகளையும் முடக்கியதே முஸ்லிம்களின் தனித்துவ தேசிய உரிமை கோரலுக்குக் காரணமாகியது. தமிழ் தரப்பின் ஆயுத முனைப்பு ஓய்ந்த பிறகும் கூட முஸ்லிம்களுக்கு அவர்கள் முன்வைக்கும் தீர்வில் தெளிவு இல்லை. முஸ்லிம்களுக்குமாகத்தான் நாம் போராடுகின்றோம் என அப்போதைக்கப்போது அவர்கள் சொன்னாலும் கூட 1957ஆம் ஆண்டு திருமலை மாநாட்டில் தந்தை செல்வா முன்வைத்தது போன்ற ஒரு தீர்வை இதுவரை முன் வைக்கவேயில்லை.
இதுவரை காலமும் முஸ்லிம்கள் தமிழருக்கு எதிராக சிங்களவரோடு இருந்தார்கள் என்பதையே இதற்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. எக்காரணம் கூறியும் முஸ்லிம்களின் தனித்துவத்தை மறுக்கவியலாது. -Vidivelli