நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில் தினமும் சராசரியாக 2000 பேர் வரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் முடக்கப்படாத போதிலும் இதுவரை நூற்றுக்கும் அதிகமான கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்டவர்களின் மரண வீதமும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாத்திரம் ஒரே நாளில் 13 பேர் மரணித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான கட்டில்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இராணுவத்தினர் நாட்டின் பல பகுதிகளிலும் வைத்தியசாலை அல்லாத இடங்களில் தற்போது சிகிச்சை நிலையங்களை உருவாக்கி வருகின்றனர். அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் நோயாளர்களால் நிரம்பி வழிகின்ற நிலையில் சுகாதாரத் துறையினர் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
இதுவரை நாட்டை முற்றாக முடக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை. மாறாக அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளில் கிராம சேவையாளர் பிரிவுகள் வாரியாகவே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் கடந்த புத்தாண்டு காலப்பகுதியில் எந்தவிதமான இறுக்கமான சுகாதார வழிகாட்டல்களுமின்றி மக்களை சுதந்திரமான நடமாட அனுமதித்துவிட்டு தற்போது மக்கள் மீது குற்றம்சாட்டுவது அர்த்தமற்றதாகும். இந்தியாவில் அடுத்த அலை வேகமாக பரவிய நிலையில் இலங்கை அரசாங்கம் விழிப்படைந்து செயற்பட்டிருக்க வேண்டும். வைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்களை செவிமடுத்து செயற்பட்டிருக்க வேண்டும்.
இலங்கையில் இராணுவத்தினரே கொவிட் தொடர்பான விடயங்களை கையாளுகின்றனர். தீர்மானங்களும் அவர்களாலேயே எடுக்கப்படுகின்றன. இதுவே இலங்கையில் இன்னமும் கொவிட் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதிருப்பதற்குக் காரணமாகும். மாறாக இந்த விடயங்களை கையாளவும் தீர்மானங்களை எடுக்கவும் சுகாதாரத்துறையினரை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும். அதன் மூலமே இலங்கையில் ஏனைய நோய்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது போன்று கொவிட் தொற்றினையும் கட்டுப்படுத்த முடியுமாகவிருக்கும்.
இது இவ்வாறிருக்க, இம்முறையும் முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தை திருப்திகரமாக அனுஷ்டிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரைவாசி நாட்கள் மாத்திரமே பள்ளிவாசல்களில் கூட்டாக அமல்களில் ஈடுபட முடிந்தது. தற்போது 25 பேர் மாத்திரம் ஒரே நேரத்தில் தனித்தனியாக தொழுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தராவீஹ் உள்ளிட்ட ரமழான் விசேட அமல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் வியாபாரம் களை கட்டியுள்ளது. குறிப்பாக ஆடை விற்பனை நிலையங்களில் மக்கள் நிரம்பி வழிகின்றனர். பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் சமூக இடைவெளி பேணப்படுவதில்லை என்றும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சில பள்ளிவாசல்களிலும் 25 பேர் என்ற வரையறைகளை பேணுவதில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நாம் தற்போது ரமழான் மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இந் நிலையில் தேவையற்ற வகையில் வெளியில் நடமாடுவதை விடுத்து வீடுகளிலிருந்தவாறு அமல்களில் ஈடுபடுவதே சிறந்ததாகும்.
தற்போது இலங்கையில் காணப்படும் கொவிட் 19 வைரஸ்களில் B.1.1.7 உட்பட பல்வேறு வகையான புதிய விகாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால், தொற்று வழக்கத்தை விட வேகமாக பரவவும் மட்டுமன்றி கடுமையான நோய் அறிகுறிகளையும் ஏற்படுத்தவும் கூடும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
எனவே ஆடை கொள்வனவுக்காகவோ அல்லது பெருநாள் கொண்டாட்டங்களுக்காகவோ நாம் அதிகம் ஒன்றுகூடுவோமாயின் அது கொவிட் பரவலுக்கு மேலும் வழிவகுக்கக் கூடும். பெருநாள் தினங்களில் தேவையற்ற பயணங்களையும் ஒன்றுகூடல்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது முஸ்லிம் பிரதேசங்களில் புதிய கொத்தணி ஒன்று உருவாக வழிவகுக்குமாயின் அதன் பிற்பாடு முஸ்லிம் சமூகம் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். அதற்கு ‘ரமழான் கொத்தணி’ எனப் பெயர் வைத்து முஸ்லிம்கள் மீது பழி சுமத்துவதற்கு ஒருசாரார் ஆவலோடு காத்திருக்கிறார்கள். எனவேதான் இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli