கர்தினால் விரல் நீட்ட வேண்டியது முஸ்லிம்களை நோக்கியல்ல; நாட்டின் உளவுத்துறையின் மீதே!
முஸ்லிம்கள் குறித்த கர்தினாலின் கருத்துக்கு சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் அளித்துள்ள பதில்
தமிழில் : எம்.எப்.எம்.பஸீர்
நன்றி : medialk.com
‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலை நாட்டப்படுவது தாமதமாகும் போது, அதனை நாட்டின் பிரச்சினையாக கருதி, அதற்கு முன்னுரிமை கொடுத்து எமக்காக குரல் எழுப்ப நீங்கள் இன்னும் முன்வரவில்லை.’
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், கடந்த 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து 2 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடாத்தப்பட்ட விஷேட மத அனுஷ்டாங்களில் கலந்துகொண்டு பேசும் போது தெரிவித்த விடயமே இது.
இதில், ‘ நீங்கள்’ என்ற சொற் பதம் ஊடாக மெல்கம் கர்தினால் ரஞ்சித், முஸ்லிம் சமூகம் குறித்தே கருத்துரைத்துள்ளார். இன்னும் முஸ்லிம் சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிராக பாரிய அளவில் குரல் எழுப்பவில்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் கூற விளைந்தாலும், முஸ்லிம் சமூகம் சஹ்ரான் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக தாக்குதலுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் பிருந்தே குரலெழுப்பி வந்துள்ளனர் என்ற உண்மையை பதிவு செய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
மெளலவிமாரின் எதிர்ப்பு:
காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தின் 5 ஆம் தரம் வரை கல்வி கற்ற சஹ்ரான் ஹாசிம், இஸ்லாம் மார்க்கத்தை படிப்பதற்காக காத்தான்குடியில் உள்ள ஜாமியதுல் பலாஹ் மத்ரஸாவில் சேர்ந்திருந்தார். எனினும் இவரது சர்ச்சைக்குரிய செயற்பாடுகள் காரணமாக அவர் அங்கிருந்து விலக்கப்பட்டார்.
பின்னர் அவரது ஆரம்ப ஆசிரியர்களில் ஒருவரான நெளபர் மெளலவி திருமணமாகியிருந்த குருணாகல் பகுதிக்கு சென்று, அப்பகுதியில் உள்ள மத்ரஸா பாடசாலை ஒன்றில் கற்றிருந்தார். அதன் பின்னர் காத்தான்குடி பகுதியில் உள்ள இஸ்லாமிய நிலையம் ஒன்றில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக சஹ்ரான் சேர்ந்திருந்தார். அக்காலப்பகுதியில், சஹ்ரானின் அடிப்படைவாத கருத்துக்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்த அந்த இஸ்லாமிய கற்கைகள் நிலையத்தில் இருந்த ஏனைய மெளலவிமார், சஹ்ரானை அங்கிருந்து விலக்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
காத்தான்குடி மக்கள்:
அதன் பின்னர் சஹ்ரான், அவனது ஆசிரியர் நெளபர் மெளலவி மற்றும் சிலர் இணைந்து ‘ தாருல் அதர் ‘ எனும் அமைப்பை உருவாக்கி இருந்தனர். அந்த அமைப்பிலிருந்து சஹ்ரான் கடந்த 2012 ஆம் ஆண்டில் விலகியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சஹ்ரானின் தலைமையில் தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சஹ்ரானின் சகோதரர்களான மொஹம்மட் காசிம் மொஹம்மட் சைனி, மொஹம்மட் காசிம் மொஹம்மட் ரில்வான் மற்றும் 15 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் சிலர் அந்த அமைப்பில் ஆரம்பத்தில் உறுப்புரிமையைப் பெற்றுள்ளனர். அந்த அமைப்பூடாக சஹ்ரான் அடிப்படைவாத கருத்துக்களை விதைக்க ஆரம்பித்தன் பின்னர், காத்தான்குடி மக்கள் அதற்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். அதன் உச்ச கட்டமே 2017 இல் வெளிப்பட்டுள்ளது.
சஹ்ரானுக்காக
வளைக்கப்பட்ட சட்டம்:
கடந்த 2017 மார்ச் 10 ஆம் திகதி, காத்தான்குடி அலியார் சந்தியில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மேடை போட்டு நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு அப் பகுதியில் வாழும் சுன்னத் வல் ஜமாஅத் பிரிவின் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இந் நிலையில் சஹ்ரான் மற்றும் அவருக்கு நெருக்காமான சிலர், ‘ தேசிய தெளஹீத் ஜமா அத்’ என பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற ரீ சேட்டுக்களுடன் குறித்த இடத்துக்கு சென்று, வாள்கள், பொல்லுகளுடன் அவ்விடத்தில் இருந்தவர்கள் மீது தக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த சம்பவம் நடக்கும் போது தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 60 மட்டுமே என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் இருவர் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த சம்பவத்தின் பின்னர் இரு தரப்பிலும் சுமார் 10 பேர் வரை கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். எனினும் அது தொடர்பில் சஹ்ரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். அந்த சம்பவத்தின் பின்னர் சஹ்ரானுக்கு எதிரான முஸ்லிம்களின் எதிர்ப்பு பிரசித்தமடைய ஆரம்பித்தது.
திட்டமிடப்பட்ட நடவடிக்கை :
குறித்த சம்பவம் நடந்து இரண்டு மூன்று நாட்களில் சஹ்ரானுக்கு எதிராக காத்தான்குடியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் ஆர்ப்பாட்ட பதாதைகளில், சஹ்ரானின் அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் எழுதப்பட்டிருந்தன. அவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் சஹ்ரானின் அடிப்படைவாத நடவடிக்கைகளை விமர்சித்தனர். சஹ்ரானின் அமைப்பை தடை செய்யுமாறு கோரினர். அத்துடன் முஸ்லிம்கள் சஹ்ரானுக்கு எதிராக பேஸ் புக் சமூக வலைத் தளம் ஊடாகவும் பாரிய பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
குற்றத்தை குற்றமாக காண்போம்:
இவ்வாறு முஸ்லிம்கள் சஹ்ரானுக்கு எதிராக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னரேயே குரலெழுப்பியிருந்தனர். ஏதேனும் ஒரு மதக் குழு, தனது மதத்தினை சார்ந்த பிறிதொரு குழுவை அடிப்படைவாதிகள் எனக் கூறி எதிர்ப்பை வெளிப்படுத்துவதை குறைத்து மதிப்பிட முடியாது. அது சாதாரணமாக நிகழும் விடயமல்ல. எவ்வாறாயினும் இலங்கை முஸ்லிம்கள் சஹ்ரான் உள்ளிட்டவர்களுக்கு எதிராக குரலெழுப்பினர்.
செல்வந்தரான சஹ்ரான்:
சஹ்ரானுக்கு எதிராக முஸ்லிம்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். பொதுவாக சொல்வதென்றால், சஹ்ரானுக்கு எதிராக காத்தான்குடி மற்றும் கல்முனை முஸ்லிம்கள் செய்த முறைப்பாடு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடாகும். 2017 ஆம் ஆண்டு சம்பவத்தின் பின்னர் சஹ்ரான் காத்தான்குடியிலிருந்து தலைமறைவாக வாழ்ந்ததாக கூறப்பட்டாலும், அவ்வப்போது சஹ்ரான் காத்தான்குடிக்கு வந்து சென்றுள்ளதாக அப் பிரதேச மக்கள் கூறுகின்றனர். இக்காலப்பகுதியிலேயே சஹ்ரான் செல்வந்தனாக மாற ஆரம்பித்ததாகவும் அம்மக்கள் கூறுகின்றனர்.
உளவுப் பிரிவுகளின்
அமைதி நிலை:
சஹ்ரானின் புகைப்படத்தை காண்பித்து, காத்தான்குடி மக்கள் நடு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் போதும், சஹ்ரான் ஒரு அடிப்படைவாதி என்று கூறும் போதும், சஹ்ரானுக்கு எதிராக சமூக வலைத் தளங்களில் மக்களை தெளிவுபடுத்தும் போதும் இலங்கை உளவுப் பிரிவுகளின் அவதானம் அது தொடர்பில் செலுத்தப்படாமை மிக ஆச்சரியத்துக்குரிய விடயமாகும்.
தாக்குதல் தொடர்பில் முஸ்லிம்கள் கவலையடைய வேண்டும் என கூறும் கர்தினால், தாக்குதலுக்கு முன்னர் முஸ்லிம்கள் சஹ்ரான் தொடர்பில் வெளிச்சம் போட்டு காட்டும் போது உளவுப் பிரிவுகள் அது தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தாமை, பாதுகாப்புத் தரப்பினர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை குறித்து எதனையும் கூறாமல் அமைதி காப்பது அதனைவிட ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விடயமாகும்.
2 ஆம் கட்ட தாக்குதலை
தடுத்தது யார்?
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அடிப்படைவாத குழு, 2 ஆம் கட்ட தாக்குதல் ஒன்றுக்கும் தயாராக இருந்ததாக கூறப்படுகின்றது. அது, கல்முனை – சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடனேயே சாத்தியமற்றதாக போனது. கல்முனை – சாய்ந்தமருது பகுதி வீடொன்றில், முன் பின் தெரியாத முஸ்லிம் குழுவொன்று ஒன்றுகூடியிருப்பதை அதன் அருகே வசிக்கும் முஸ்லிம்கள் அறிந்துள்ளனர். இது தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், விசாரிக்கச் சென்ற போது, அவ்வீட்டிலிருந்த ஒருவர் அந் நபரை அச்சுறுத்தியுள்ளார். அதன் பின்னர், சஹ்ரானின் சகோதரர்கள் மறைந்திருந்த சாய்ந்தமருது வீடு தொடர்பிலான தகவல் கூட பொலிஸாருக்கு அப்பகுதி முஸ்லிம் ஒருவராலேயே வழங்கப்பட்டது.
குறித்த பகுதி முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாகவே, சஹ்ரானின் சகோதரர்கள் உள்ளிட்ட குழுவினர், சாய்ந்தமருது வீட்டில் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகினர். தமது தகவல்களை வெளிப்படுத்த வேண்டாம் என குறித்த வீட்டிலிருந்தவர்கள் பண நோட்டுக்களை கூட வீசியெறிந்ததாக பதிவாகியுள்ளது. இவை ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
எனினும் மெல்கம் கர்தினால் ரஞ்சித், இவை குறித்து அவதானம் செலுத்தாமல், ‘ முஸ்லிம்கள்’ மீதே விரல் நீட்டிக்கொண்டிருக்கின்றார்.
இலங்கையின் முஸ்லிம் அமைப்புக்கள் கூட, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர் அடிப்படைவாதத்துக்கு எதிராக குரலெழுப்பிய சந்தர்ப்பங்கள் ஏராளம் உள்ளன. தாக்குதலின் பின்னரும் குரலெழுப்பிய சந்தர்ப்பங்கள் பல உள்ளன. அது எதுவும் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தின் அவதானத்துக்கு உள்ளாகாமை பிரச்சினைக்குரியதே.
திசை மாறிச் செல்லும் கர்தினால்:
தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் கண்ணீர் வடிக்கின்றார்களா என்பது மெல்கம் கர்தினால் ரஞ்சித் அவதானிக்க வேண்டிய விடயமல்ல. தாக்குதலுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே முஸ்லிம்கள் சஹ்ரான் தொடர்பில் குறிப்பிட்ட போது, சஹ்ரான் கும்பல் அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு தயாராவதாக கூறிய போது, சஹ்ரானுக்கு நிதி கிடைக்கும் வழிகளை ஆராயுமாறு கூறும் போது, தாக்குதல் நடாத்தப்படும் வரை இலங்கையின் உளவுப் பிரிவுகள் அது தொடர்பில் அவதானம் செலுத்தாமை ஏன் என்பது தொடர்பில் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தின் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் பொலிஸ் உளவுப் பிரிவுகள் பல உள்ளன. இதனைவிட முப்படைகளின் உளவுப் பிரிவுகள் செயற்படுகின்றன. அப்படி இருக்கையில், இவ்வாறான தாக்குதல் ஒன்று தொடர்பில் சரியான தகவல்களை வெளிப்படுத்திக்கொள்ளாமை குறித்து மெல்கம் கர்தினால் ரஞ்சித் கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன்? பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் அரச அதிகாரிகளை போலவே, மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஏதோ ஒரு சிவில் அதிகாரத்துடன் செயற்படும் மதத் தலைவர்களுக்கும், வேறு ஒரு மத குழுவினர் மீது விரல் நீட்டிவிட்டு பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
எந்தவொரு இன, மதங்களிடையேயும் அடிப்படைவாதிகள் இருக்கலாம். மெல்கம் கர்தினால் ரஞ்சித் கூறியதைப் போலவே, அவர்களை வேறு அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்துவது மிக இலகுவானதாகவும் இருக்கலாம். அதனால் மத அடிப்படைவாதம் தொடர்பில் அதே மதத்தைச் சேர்ந்தவர்கள் மிக அவதானமாக இருப்பதே மிக முக்கியமான விடயமாகும்.- Vidivelli