பௌத்த சிங்கள சினேக மனோபாவம் இஸ்லாமோபோபியாவாகியது ஏன்?
கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
சென்ற வார தொடர்ச்சி…
பௌத்தர்களின் புண்பட்ட நெஞ்சம்
சிங்கள பௌத்தர்கள் இலங்கையில் மட்டுமே வாழ்கின்றனர். அவர்கள் பேசும் சிங்கள மொழியும் உலகில் வேறெங்கும் பேசப்படுவதில்லை. ஆகவே, இலங்கையை சிங்கள பௌத்த நாடாகவே ஆதிகாலத்திலிருந்து அவர்கள் கருதி வந்தனர். எனினும் மற்ற இனத்தவர்கள் தம்மிடையே வாழுவதை அவர்கள் நிராகரிக்கவில்லை. இந்துக்களின் யாழ்ப்பாண இராச்சியம்கூட பௌத்தத்துக்கு எதிராக உருவாகவுமில்லை, இயங்கவுமில்லை. இந்து சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் இடையேயுள்ள வரலாற்றுத் தொடர்பு இதற்கொரு காரணமாக இருக்கலாம். ஆனால் பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி சுமார் நாலரை நூற்றாண்டுகளாக போத்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என்று மாறிமாறி மேற்கு நாட்டவர் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டமையும் அவர்களின் கிறிஸ்தவ சமயத்துக்கு அரசாங்கம் முதலிடம் வழங்கி அதன் வளர்ச்சிக்கு உதவியளித்தமையும், பௌத்தர்களை மதமாற்றஞ் செய்தமையும், அதனால் பௌத்தமும் பௌத்தர்களும் ஆட்சியின் ஓரத்துக்குத் தள்ளப்பட்டமையும் பௌத்த சிங்கள மக்களின் மனதில் ஏற்பட்ட ஆறாப் புண்கள். இலங்கையின் கரையோரப் பகுதிகளெல்லாம் கிறிஸ்தவ அரசுக்கு உட்பட்டிருக்க, 1815 வரை கண்டி இராச்சியம் மட்டும் பௌத்தத்தின் ஒரேயொரு பாதுகாவலனாக விளங்கியது. ஆனால் அந்த வருடம் கண்டி இராச்சியமும் பிரித்தானியர் கைவசம் சிக்க, பௌத்தமும் பௌத்த சிங்களவர்களும் அரசியல் அநாதைகளாயினர். இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.
எனவேதான் இந்த அடிமை நிலையிலிருந்து விடுபடும் நோக்கத்துடன் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அநகாரிக தர்மபாலவின் தலைமையில் ஒரு பௌத்த விழிப்பியக்கம் ஆரம்பமாகிற்று. அந்த விழிப்பியக்கத்தின் ஒரு துரதிஷ்ட விளைவே 1915ஆம் ஆண்டுக் கலவரம். அந்தக் கலவரம் வெகுசீக்கிரத்தில் அடக்கப்பட்டு 1948இல் சுதந்திரம் கிடைக்கும்வரை பௌத்தர்கள் பொறுமையுடன் இருந்தனர்.
சுதந்திரத்திற்குப் பின் நிறுவப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை பௌத்தர்களுக்குக் கிடைத்த ஓர் அரசியல் வரப்பிரசாதம். அரசாங்கம் அவர்களின் கைகளுக்குமாற பௌத்தம் ஒரு புதிய உத்வேகத்தை அடைந்தது. அந்நியராட்சியில் இதுவரை இழந்தவற்றை வட்டியுடன் திருப்பிப்பெறும் நோக்கிலேயே அரசியல் பௌத்தம் ஆரம்பமாகியது. அந்நியரால் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் நேரமாகவே சுதந்திரத்தை அரசியல் பௌத்தம் கணித்தது. அதன் வரலாற்றை ஏற்கனவே கடந்த வாரம் வெளிவந்த கட்டுரை விளக்கியது.
பௌத்தமும் பௌத்தர்களுமே இலங்கையை ஆளவேண்டும் என்ற கொள்கையை எல்லா பௌத்த அரசியல் தலைவர்களும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஆதரித்தனர். அரசியல் பிக்குகள் அவர்களை இயக்கத் தொடங்கினர். இந்த நோக்கத்தின் வெளிப்பாடாகவே 1948 இல் நிறைவேற்றப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம், 1957இன் சிங்கள மொழி மட்டும் மசோதா, அதற்குப்பின் அமுலாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், பல்கலைக்கழகப் பிரவேசமுறை மாற்றங்கள் என்பனவெல்லாம் அடுக்கடுக்காக அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்டன.
ஆனால், இந்த வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டையாக பௌத்தர்களுக்குத் தென்பட்டது தமிழர்களின் மொழிப் போராட்டமும் சமஷ்டி அரசுக் கோரிக்கையும். தமிழர்களின் போராட்டத்தின் ஜனநாயக உரிமைகளையும் நியாயங்களையும் உதறித் தள்ளிவிட்டு, வெண்ணெய் திரளும்போது சட்டியே உடைவதுபோல் பௌத்த அரசியல்வாதிகள் தமிழர்களின் கோரிக்கைகளை நோக்கலாயினர். அந்நியர் ஆட்சிக்குமுன் இருந்த பௌத்தர்களின் தனிப்பட்ட இராச்சியங்கள் அந்நியரால் பறிபோனதுபோன்று தமிழர்களுக்கிருந்த தனிப்பட்ட ஒரு யாழ்ப்பாண இராச்சியமும் பறிபோனதும் அதனால் பௌத்தர்களுக்கேற்பட்ட அதே மனப்புண்கள் தமிழர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதையும் புதிய பௌத்த அரசியல் தலைவர்கள் உணர மறந்தனர். அதற்குப் பதிலாக, பௌத்தத்தின் மறுமலர்ச்சிக்கும் பௌத்தர்களின் ஆதிக்கத்துக்கும் தமிழினமே ஓர் இடைஞ்சல் என்ற எண்ணம் சாதாரண பௌத்த மக்கள் மனதில் விதைக்கப்படலாயிற்று. இந்தத் தவறுதான் ஈற்றில் கால்நூற்றாண்டுப் போரொன்றையே உருவாக்கியது. அந்தப் போர் சுமார் பத்து நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டிலிருந்து தோன்றிய பல்லவ சோழர் படையெடுப்புகளை மீண்டும் பௌத்தர்களின் ஞாபகத்துக்குக் கொண்டுவரலாயிற்று. ஏற்கனவே புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் பயம் கொள்ளலாயின.
2009 இல் முடிவுற்ற போர் பௌத்தர்களுக்குச் சாதகமாய் அமைந்தது. பௌத்த படைகள் தமிழீழப் புலிகளின் படையை முற்றாகத் தோற்கடித்து வெற்றியீட்டியமை பௌத்தர்களுக்கு நினைக்கொணாத ஒரு பெருமிதத்தையும் ஒரு புதிய திடசங்கற்பத்தையும் கொடுத்தது. இனிமேல் எவருமே பௌத்தத்தின் ஆட்சியையும் பௌத்தர்களின் அதிகாரத்தையும் இலங்கையில் அசைக்க முடியாது என்ற ஒரு பெருமிதமும், அந்த நிலைமையை இனிமேல் எச்சந்தர்ப்பத்திலும் இழக்கக்கூடாது என்ற ஒரு திடசங்கற்பமும் பெரும்பான்மை இனத்தவரிடையே குடிகொள்ளத் தொடங்கிற்று. அதற்காக அந்நியர் நுழைத்துவிட்டுச் சென்ற ஜனநாயக ஆட்சிமுறை ஓர் இடைஞ்சலாக இருந்தால் அதையும் தூக்கியெறிய அவர்கள் தயாராகினர். புண்பட்ட நெஞ்சங்கள் புது யுகம் காணத்துடித்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அதற்கிடையில் எதிர்பாராத ஒரு கோணத்திலிருந்து புதியதொரு அச்சம் பௌத்தர்களின் மனதை வாட்டத் தொடங்கியது. இஸ்லாமோபோபியாவின் ஆரம்பத்தை இங்கேதான் காண வேண்டும்.
தனித்துவத்தைத் தேடித்
தனிமையான முஸ்லிம்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பௌத்த சிங்கள மக்களுடன் இரண்டறக்கலந்து வாழ்ந்த முஸ்லிம்களின் மத்தியில் 1980களிலிருந்து சில மாற்றங்கள் தோன்றலாயின. இவற்றை உலகளாவிய மாற்றங்கள் என்றும் கூறலாம். இம்மாற்றங்களை வரலாற்றின் அடிப்படையில் விளங்குவது அவசியம்.
இலங்கையின் உள்நாட்டுப் போர் நடைபெற்ற அதே காலப்பகுதியில் முஸ்லிம் உலகிலும் ஒரு புதிய தாகம் தோன்றலாயிற்று. உலகின் அநீதிகளும் துன்பங்களும் தீரவேண்டுமானால் அதற்கு ஒரே வழி இஸ்லாமே. இஸ்லாத்தின் அடிப்படையிலேயே ஒரு புதிய உலக ஒழுங்கு உருவாக்கப்பட வேண்டும் என்ற தாகம் குறிப்பாக இளைய தலைமுறை முஸ்லிம்களிடையே வளரத் தொடங்கியது. இந்தத் தாகம் வளரக் காரணமாய் அமைந்த காரணிகளுள் இரண்டு முக்கியமானவை. ஒன்று, 1979இல் ஈரானில் ஏற்பட்ட புரட்சி. மற்றது அரபு நாடுகளில் எண்ணெய் வளம் குவித்த பணச்செல்வம். பொருளாதாரப் பலமும் இஸ்லாமிய தத்துவமும் இணைந்தால் உலகத்தையே சொர்க்கமாக்கலாம் என்ற ஓர் துடிப்பும் உணர்வும் இளைய தலைமுறையினரிடையே துளிர்விடலாயின.
ஈரானியப் புரட்சி ஒரு முஸ்லிம் நாட்டில் நடைபெற்ற புரட்சி என்பதால் அது ஓர் இஸ்லாமியப் புரட்சியாகாது. நசுக்கப்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு அராஜகத்துக்கு எதிராகக் கொதித்தெழுந்து தன்னிச்சையுடன் படைத்த அரசியற் காவியம் அது. அக்காவியத்தின் தலைவனாக ஆயத்துல்லா கொமைனி உருவானது ஒரு சதி. எனவே அதனை இஸ்லாமியப் புரட்சியென அழைப்பது பொருந்தாது. எனினும், அது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக அமர்ந்து ஈரானின் இஸ்லாமிய பாரம்பரியத்தையும், அதன் விசேட விழுமியங்களையும், மக்களின் நலனையும் புறக்கணித்து ஆட்சிசெய்த மன்னர் ஷாவினைத் துரத்தியடித்து அமெரிக்காவுக்குப் பாடம் கற்பித்த ஒரு மகத்தான சாதனை. அந்தப் புரட்சியின் தாக்கம் அமெரிக்க ஆதரவில் ஆட்சி நடாத்திய அத்தனை மத்திய கிழக்கு முஸ்லிம் மன்னர்களுக்கும் தலைவர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக அமைந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், ஈரானின் புதிய தலைவர் கொமைனி அந்தப் புரட்சியை ஏனைய மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் துணிந்ததும் அது அமெரிக்காவையே கதிகலங்கச் செய்தது.
ஏனெனில் அமெரிக்காவே கட்டியெழுப்பிய மத்தியகிழக்கு ராஜதந்திர ஒழுங்கு புரட்சியினாற் சிதறுமாயின் அதன் விளைவுகள் பாரதூரமாக அமைவது திண்ணம். எனவே ஈரானியப் புரட்சியின் பரவலையும் தாக்கத்தையும் எவ்வழியிலாவது தடுப்பதற்குப் பரிகாரம் தேடின அமெரிக்காவும் அதன் மேற்குலக நேசநாடுகளும். அந்தப் பரிகாரத்தை சவூதி அரேபியாபின் வஹாபித்துவம் வழங்கியது. – Vidivelli
(தொடரும்)