(எம்.எப்.எம்.பஸீர்)
புத்தளம் – வனாத்தவில்லு, லக்டோஸ் தோட்டத்தில், வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில், தேசிய தெளஹீத் ஜமாஅத் எனும் தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கியஸ்தரான நெளபர் மெளலவி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் புத்தளம் மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ளார்.
நேற்றைய தினம் 14 குற்றச் சாட்டுக்களின் கீழ் இவ்வழக்கினை சட்ட மா அதிபர் தாக்கல் செய்ததாகவும், அதனை விசாரணை செய்ய மூவர் கொண்ட சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் ஒன்றினை அமைக்குமாறு சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் எழுத்து மூலம் கோரியதாகவும், சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரை மாய்த்துக்கொண்ட மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அச்சு மொஹம்மது அஹமது ஹஸ்தூன் ஆகியோருடன் இணைந்து, வனாத்தவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்கும் மற்றும் தயாரிக்கும் இடமொன்றினை முன்னெடுத்து சென்றதாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த 6 பேருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அபூ தஹ்தா எனும் மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீன் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ், கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ், அபூ செய்த் எனும் நெளபர் மெளலவி அல்லது மொஹம்மட் இப்ராஹீம் நெளபர், அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி ஆகிய 6 பேருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாசகார அல்லது பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் எண்ணத்துடன் வனாத்தவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்க சதி செய்தமை, யூரியா நைற்றேட், நைற்றிக் அசிட், தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்களைச் சேகரித்தமை, வெடிபொருட்களை உற்பத்தி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) உ பிரிவின் கீழும், 3 (2) ஆம் பிரிவின் கீழும் பிரதிவாதிகளுக்கு எதிராக விஷேட குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் சேகரிப்பு, தயாரிப்பு, ஆயுத பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இதனைவிட, முதல் பிரதிவாதியான அபூ தஹ்தா எனப்படும் மொஹம்மட் முபீஸ் மீது, பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆயுத களஞ்சியத்துடன் கூடிய வனாத்துவில்லு லக்டோ தோட்டத்தின் ஒரு பகுதியை ஆயுத பயிற்சிகளை முன்னெடுக்க அபூ உமர் எனும் சாதிக் அப்துல்லாஹ்வுக்கு வழங்கியமை தொடர்பில் அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Vidivelli