(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமும், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனிடமும் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுக்கள் தடுப்புக் காவலில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு, சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடாத்திய, மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான, குளோசஸ் எனும் செப்புத் தொழிற்சாலைக்கு, செப்புக் கழிவுகளை சட்டத்துக்கு முரணாக விநியோகித்ததாக கூறியே ரிஷாத்திடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக ரிஷாத் பதியுதீன், குறித்த தற்கொலைதாரியின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டது முதல், தற்கொலைதாரியின் மனைவியின் தந்தையுடனான நெருக்கம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் சி.ஐ.டி.யின் குறித்த சிறப்புக் குழு துருவி வருவதாக நான்காம் மாடி தகவல்கள் தெரிவித்தன.
இதனைவிட, ரிஷாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீனிடம், இன்சாப் அஹமட் எனும் தற்கொலைதாரிக்கு எடுக்கப்பட்ட 7 தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகின்றது.
கடந்த 24 ஆம் திகதி சனியன்று, அதிகாலை 1.30 மணியளவில் ரியாஜ் பதியுதீன் வெள்ளவத்தை, பெட்ரிக்கா வீதியில் உள்ள வீட்டில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் ரிஷாத் பதியுதீன் அதே தினம் அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது.. ரிஷாத் பதியுதீனின் மனைவி சிஹாப்தீன் ஆயிஷா, ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் ஆகியோர் சட்டத்தரணி ஆர்னல்ட் பிரியந்தன் ஊடாக இந்த முறைப்பாட்டை முன் வைத்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், ரிஷாத் பதியுதீனின் கைது மற்றும் தடுத்து வைப்பை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றை நாட, அவரின் சட்டத்தரணிகள் அவதானம் செலுத்தியுள்ளனர். இது தொடர்பில் சிரேஷ்ட சட்ட வல்லுநர்களுடன் விஷேட கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
குறிப்பாக தற்போது ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட பொலிஸ் தரப்பில் கூறப்படும் காரணம் தொடர்பில் ஏற்கனவே 4 வாக்கு மூலங்களை ரிஷாத் பதியுதீன் வழங்கியுள்ளமையும், அது தொடர்பிலான ஆவணங்களையும் அவர் சி.ஐ.டி.க்கு கையளித்துள்ள பின்னணியில் அவரின் கைதை சவாலுக்கு உட்படுத்த சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
தற்போதைய பொலிஸ் மா அதிபரே ரிஷாத் குற்றமற்றவர் என வழங்கிய சான்றிதழ், ரியாஜ் பதியுதீன் இதே குற்ரச்சாட்டில் கைது செய்யப்பட்டு 6 மாத தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டமை ஆகியவற்றையும் சட்டத்தரணிகள் பூரணமாக ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli