2778 மில்லியன் ரூபா பெறுமதியான 231 கிலோ ஹெரோயின் சிக்கியது

இலங்கையில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது அதிகூடிய தொகை என்கிறது பொலிஸ்

0 831

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்  மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2 ஆயிரத்து 778  மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 231 கிலோ 54 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த போதைப்பொருள் தொகையானது இலங்கையில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது அதிகூடிய தொகையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், பலப்பிட்டிக்கும் பேருவளைக்கும் இடையிலான 3 மைல் கடற்பரப்பிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 38 வயதுடைய பேருவளை பகுதியை சேர்ந்த தினாயதுர திலீப் சுசந்த மற்றும் 34 வயதுடைய பேருவளை பகுதியை சேர்ந்த மொஹமட் ரிஸ்வி மொஹமட் பர்சான் எனப்படுபவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த விசேட சுற்றிவளைப்பானது ஒக்டோபர் 22 ஆம் திகதி  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய  நாடு பூராகவும்  மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு  அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த விசேட விசாரணைகள் மற்றும் இத்தகைய ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிடத்தில் காணப்பட்ட முரண்பாடுகளுமே மேற்படி சுற்றிவளைப்பிற்கு ஏதுவான காரணங்களாக அமையப்பெற்றுள்ளன.

கைப்பற்றப்பட்ட  231 கிலோ கிராம் 54 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் 214  பார்சல்களாக பொதி செய்யப்பட்டு  11 சீனி பைகளினுள் இட்டு படகின் மூலம் பாதுகாப்பான முறையில்  கடத்த முற்பட்ட வேளையிலேயே மேற்படி சுற்றிவளைப்பு இடம் பெற்றுள்ளது.  ஹெரோயின் போதைப்பொருள் மற்றும்  கடத்தலுக்கு  பயன்படுத்தப்பட்ட  படகு என்பவற்றை    பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஹெரோயின் போதைப்பொருட்கள் பாகிஸ்தானுக்கு கடத்த முற்பட்டபோதே கைப்பற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு  கடற்படையினர் உட்பட ஐக்கிய நாடுகள் சபையின்  போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர், குற்றப்புலனாய்வுப்பிரிவினர் , வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரின்  பாரிய அளவிலான  ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன், சந்தேக நபர்களை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வகையில்,  இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையாக 2003  ஆம் ஆண்டு  கைப்பற்றப்பட்ட  261 கிலோ கிராம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பதிவாகியுள்ளது.

அதற்கு அடுத்த படியாக இலங்கையில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது அதிக தொகை பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளாக நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்ட 231 கிலோகிராம் 54 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடனான  கைது நடவடிக்கை அமையப்பெற்றுள்ளது.

மேலும், மூன்றாவதாக  கைப்பற்றப்பட்ட அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளாக 2014 .05.11 ஆம் திகதி புத்தளம் பிரதிப்பொலிஸ்மா அதிபரின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட 211 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கருதப்படுகிறது.

நான்காவதாக கைப்பற்றப்பட்ட  அதிக தொகை ஹெரோயின் போதைப்பொருளாக 2017 .04.11 போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 111 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கொள்ளப்படுகின்றது.

அந்த வகையில் ஐந்தாவதாக கைப்பற்றப்பட்ட  அதிக பெறுமதியான ஹெரோயின் தொகை இந்த வருடம் யூலை மாதம் 07  ஆம் திகதி கைப்பற்றப்பட்ட 103 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.