புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம்: 16 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
ட்ரயல் அட்பார் நீதிமன்றை அமைக்க கோரிக்கை
(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்பகுதியில் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்து புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை தொடர்பில் 16 பேருக்கு எதிராக, கேகாலை மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் நெருங்கிய சகாவும் தேசிய தெளஹீத் ஜமாஅத்தின் சிரேஷ்ட தலைவருமான நெளபர் மெளலவி, புத்தர் சிலை உடைப்பை அடுத்து கைது செய்யப்பட்ட இப்ராஹீம் மெளலவி அவரது மகன்மார் இருவர் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராகவே இவ்வாறு குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன கூறினார்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும், பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தலை தடுப்பது தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் 21 குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரு சமூகங்களிடையே மோதலை உருவாக்க சதித் திட்டம் தீட்டியமை, 5 புத்தர் சிலைகளை தகர்த்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வுகளை தூண்டியமை, தோப்பூர், மாவனெல்லை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பகுதிகளில் அதற்கான வதிவிட கருத்தரங்குகள் மற்றும் ஆயுதப் பயிற்சியினைப் பெற்றமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும், ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்தரங்குகளுக்கு தேவையானவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கியமை தொடர்பில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
2019 ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதி சஹ்ரான் மற்றும் முறைப்பாட்டாளர் அறியாதவர்களுடன் இணைந்து பிரதிவாதிகள் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.
இக்குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்களையும், 92 சாட்சியாளர்களின் பட்டியலையும் சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகையில் இணைத்துள்ளார்.
மொஹம்மட் அல்பர் மொஹம்மட் அஸ்பாக், மொஹம்மட் பைசர் மொஹம்மட் முப்தி, மொஹம்மட் அக்பர் மொஹம்மட் முனீப், மொஹம்மட் சுபியான் மொஹம்மட் இர்ஷாத், மொஹம்மட் அஸ்ஹர் அதீக் அஹமட், நஜிமுதீன் மொஹம்மட் பெளசான், ரஷீத் மொஹம்மட் இப்ராஹீம் அல்லது இப்ராஹீம் மெளலவி அல்லது இப்ராஹீம் சேர், அபூ செய்த் எனும் மொஹம்மட் இப்ராஹீம் நெளபர் மெளலவி, அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ், மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி, அபூ பலாஹ் எனபப்டும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக், அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ், அபூ ஹினா அல்லது சிவப்பு தாடி என அறியப்படும் மொஹம்மட் ஹனீபா சைனுல் ஆப்தீன், ஹிஸ்புல்லாஹ் கான் ஹாமித், அபூ சியா எனப்படும் ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான், ஹாஜா மொஹிதீன், ஹனன் ஹம்சுதீன் எனும் ஹனன் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், குறித்த வழக்கை விசாரணை செய்ய சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்றம் ஒன்றினை அமைக்குமாறு சட்ட மா அதிபர் தப்புள டி லிவேரா, பிரதம நீதியரசரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.-Vidivelli