ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கடந்த நவம்பர் 9 ஆம் திகதி கலைத்த 2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நாளை சனிக்கிழமை வரை நீடிக்கப்ப்ட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது நேற்று 3ஆவது நாளாகவும் விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே, நேற்றைய விசாரணைகளின் நிறைவில் இதனை பிரதம நீதியரசர் நலின் பெரேரா அறிவித்தார். ஏற்கனவே உயர் நீதிமன்றினால் குறித்த மனுக்களை விசாரணைச் எய்ய நிர்ணயிக்கப்பட்ட மூன்று நாட்களும் நேற்றுடன் நிறைவடைந்த போதும், விசாரணைகள் நிறைவடையாததால் இன்று நான்காம் நாளாகவும் விசாரணைகளை தொடர் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிரதம நீதியர்சர் நலின் பெரேராவின் கீழ் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்னாண்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் மூலம் இம்மனுக்கள் விசாரிக்கப்ப்ட்டு வருகின்றன. .
எஸ்.சி.எப்.ஆர். 351/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 352/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 353/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 354/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 355/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 356/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 358/ 201, எஸ்.சி.எப்.ஆர். 359/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 360/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 361/ 2018 ஆகிய 10 அடிப்படை உரிமை மீறல்கள் மனு தொடர்பில் கடந்த 4 ஆம் திகதி விசாரணைகளில் மனுதாரர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கணக ஈஸ்வரன், திலக் மாரப்பன, டிரான் கொரயா, ஜயம்பதி விக்ரமரத்ன, எம்.ஏ.சுமந்திரன், ஜே.சி.வெலி அமுன, ஜெப்ரி அழகரட்னம், சுரேன் பெர்னாண்டோ, இக்ராம் மொஹம்மட் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரும் 5 ஆம் திகதி சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரியவும் வாதங்களை நிறைவு செய்த நிலையில் நேற்று இவ்வடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் இடையீட்டு மனுதாரர்கள் ஐவர் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்ப்ட்டன.
இடையீட்டு மனுதாரர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தனவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சார்பில் ஜனாதிபதி சட்டத்தரனி மனோகர டி சில்வாவும், பேராசிரியர் ஜகத் வெல்லவத்தகே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றியும், கலாநிதி சன்ன ஜயசுமன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவும், சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கனிஷ்க விதாரணவும் வாதங்களை முன்வைத்தனர்.
இதன்போது வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் வாதங்கள் ஒரு பயங்கரவாத நடவடிக்கை என தெரிவித்தார். தேர்தல் நடத்த வேண்டாமென அவர்கள் கோருவது, எமது நாடு தேசம் என்ற அடிப்படையில் தோல்விடயடைந்துள்ளதாக சர்வதேசத்துக்கு காட்டி சர்வதேச ஆயுதப் படைகளை நாட்டுக்குள் வரவழைத்து நாட்டை அழிக்கும் திட்டம் என சுட்டிக்காட்டியதுடன் நாட்டின் எதிர்காலம் மனுக்களை விசாரிக்கும் 7 நீதியர்சர்கள் கைகளிலேயே இருப்பதாகக் கூறினார்.
எனினும், இதன்போது வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சட்டவாக்க நெருக்கடி நிலையை தீர்க்க மிகச்சிறந்த வழி முறையாக, பொது மக்களுக்கு அவர்களின் இறையாண்மையின் பிரகாரம் செயற்பட இடமளிப்பதே என தெரிவித்தார்.
நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் இந்த மனுக்கள் மீதான மூன்றாம் நாள் வாதம் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது நேற்று முன்தினம் இடையீட்டு மனுதாரரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சார்பில் ஆஜராகி வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன நேற்றும் வாதங்களை முன்வைத்தார்.
-Vidivelli