உலக நாடுகளில் மீண்டும் கொவிட் 19 தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 881,124 பேர் உலகளாவிய ரீதியில் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதுவே உலகில் ஒரே நாளில் அதிகளவானோர் தொற்றுக்குள்ளான நாள் என ஊடகங்கள் கூறுகின்றன. அத்துடன் நேற்று முன்தினம் மாத்திரம் 14,122 பேர் உலகெங்கும் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக இந்தியாவில் மாத்திரம் ஒரேநாளில் (நேற்று முன்தினம்) 315,802 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் 2,102 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே இந்தியாவில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிக தொற்று என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக புது டில்லியில் அளவுக்கதிகமான தொற்றாளர்கள் மற்றும் மரணங்களால் அங்குள்ள வைத்தியசாலைகள் நோயாளிகளாலும் சடலங்களாலும் நிரம்பி வழிகின்றன. நோயாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு பாரிய நெருக்கடி தோன்றியுள்ளது. மக்களுக்கு முன்னணியில் நின்று சிகிச்சையளித்து வரும் வைத்தியர்கள் கூட உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சடலங்களை வீதிகளில் அடுக்கி வைக்கின்ற, கிடைத்த இடத்தில் வைத்து எரிக்கின்ற சம்பவங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை இலங்கையிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே எமது பிரார்த்தனையாகும். எனினும் சிங்கள, தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பணியகத்தின் தகவல்கள் கூறுகின்றன. மக்கள் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்றைய தினம் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னராக குருநாகல் மாவட்டத்திலுள்ள தித்தவல்கால கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டது. கம்பஹா மாவட்டத்திலுள்ள திவுலபிட்டியவிலும் நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அப் பகுதியும் முடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மைக்காலமாக எழுந்தமானமான பி.சி.ஆர். பரிசோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் புத்தாண்டின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தினமும் 15 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. புத்தாண்டுக்கு முன்னர் தினமும் 100 பேர் வரையிலேயே தொற்றுக்குள்ளாகிய நிலையில் தற்போது தினமும் 500 பேர் வரை தொற்றுக்குள்ளாகின்றனர். இது 5 மடங்கு அதிகரிப்பாகும். எதிர்வரும் நாட்களில் தினமும் தொற்றுக்குள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பரவும் வைரஸின் பாதிப்பினால் தொற்றாளர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களில் கணிசமான இளம் வயதினரைக் காண முடிவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் தற்போது ரமழான் மாத அமல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் பல பள்ளிவாசல்களில் உரிய சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனும் முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக வக்பு சபை தெரிவித்துள்ளது. அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற சுகாதார அதிகாரிகளின் சந்திப்பு ஒன்றிலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரமழான் மாதத்தில் கடைப்பிடிக்கவென ஏலவே சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும். ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளுக்காகவும் இப்தாருக்காகவும் ஒரே நேரத்தில் கூடுதலானோர் ஒன்று சேர்வதால் ஒரு மீட்டர் இடைவெளி, முகக் கவசம் அணிதல், முஸல்லாக்களை பயன்படுத்துதல் போன்ற விதிமுறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வக்பு சபை வலியுறுத்தியுள்ளது.
பள்ளிவாசல் ஒன்றின் ஊடாக புதியதொரு கொத்தணி உருவாகியது என்ற பழி எம்மீது வந்துவிடக் கூடாது. கடந்த காலங்களில் முஸ்லிம்கள்தான் இலங்கையில் கொரோனாவைப் பரப்பினார்கள் என இனவாத ஊடகங்கள் மேற்கொண்ட பிரசாரங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நாம் மறந்துவிட முடியாது. எனவேதான் நாம் இது விடயத்தில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இன்றேல் வக்பு சபை கூறியுள்ளதைப் போன்று மீண்டும் பள்ளிவாசல்களை மூட வேண்டிய துரதிஷ்டநிலை தோற்றம் பெறலாம்.
மொத்தத்தில் இலங்கையும் இந்தியா போன்ற ஆபத்துக்கு முகங்கொடுக்க வேண்டி வருமோ என்ற அச்சம் பலர் மத்தியில் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறான நிலைமை ஏற்படாதிருப்பதற்குத் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதற்கு ஒத்துழைக்க வேண்டியது மக்களது பொறுப்பாகும்.- Vidivelli