(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஷரீஆ சட்டம் பற்றி ஊடகங்களில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சுமத்தி கொள்ளுப்பிட்டி சந்தையில் கைது செய்யப்பட்ட அசாத்சாலி தற்போது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புபட்டவர் என அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனது சகோதரர் தீவிரவாதியோ அடிப்படைவாதியோ அல்ல.அவரை புனித ரமழான் மாதத்தில் விடுதலை செய்யுங்கள் எனஅசாத்சாலியின் சகோதரர் ரியாஸ் சாலி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
கடிதத்தில் மேலும் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது “ அடிப்படைவாதத்துடன் தொடர்புபட்டவர்களை பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடையச் செய்வதற்கு அவர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டார். அடிப்படைவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராக குரல் கொடுத்தவர் அவர்.அவரின் விடுதலையை பல்வேறு சிவில்சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் அவர் மீதான விசாரணைகளை துரிதப்படுத்தி ரமழானில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
தான் நிரபராதி குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்கு அவருக்கு அவகாசம் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli