இலங்கையில் 11 இயக்கங்களுக்கு தடையின் எதிரொலி: இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஊடுருவலாம் என எச்சரிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கையில் அடிப்படைவாதத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 11 இஸ்லாமிய இயக்கங்கள் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள் இந்தியாவின் தமிழகத்துக்குள் ஊடுருவலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை யடுத்து தமிழ் நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் கரையோர மாவட்டங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் அல்கைதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புகள் உட்பட 11 அடிப்படைவாத இயக்கங்களுக்கு தடைவிதித்து வர்த்தமானிஅறிவித்தல் வெளியிட்டதையடுத்தே உடனடியாக தமிழக அரசு இதனை முன்னெடுத்துள்ளது.
மாநில காவல் துறைப்பணிப்பாளர் நாயகம் ஜே.கே.திருபதி தமிழகத்தின் விமான நிலையங்கள் மற்றும் கரையோர பகுதிகளின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் ஆணையாளர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டம் மூலம் தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்களின் உறுப்பினர்கள் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள். அவர்கள் பயிற்சிகள் பெற்றவர்கள் அவர்கள் தமிழ்நாட்டில் புகலிடம் பெறுவதற்கு வாய்ப்புண்டு. புவியியல் ரீதியில் அவர்கள் ஆதரவு பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையிலிருந்து சமய அடிப்படைவாதிகள் ஆகாயமார்க்கமாக அல்லது கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வந்தடைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் மாநிலகாவல் துறைபணிப்பாளர் நாயகம் ஜே.கே.திருபதி தெரிவித்தார்.
மீன்பிடி படகுகள் தீவிரவாதிகளை வங்காள விரிகுடா ஊடாக அழைத்துவரலாம். உள்ளூர் அனுதாபிகள் அவர்களது பயணத்துக்கும், உணவுகளுக்கும் உதவிகள் வழங்கலாம். தீவிரவாதிகள் தமிழக மாநிலத்தில் புகலிடம் பெற்றுக்கொண்டதன் பின்பு அவர்களின் இஷ்டப்படி இலங்கைக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகளை இந்திய மண்ணிலிருந்து மேற்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். அடிப்படைவாதிகள் தமிழகத்தை தளமாகக் கொண்டு இயங்குவதற்கு இடமளிக்கக்கூடாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உளவுப்பிரிவொன்றினை ஸ்தாபித்து தமிழ்நாட்டில் தளமொன்றினை அமைப்பதை தடைசெய்யும் வகையில் கடுமையான மேற்பார்வை செய்யும்படி அவர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
சில அடிப்படைவாத இயக்கங்கள் குறிப்பாக தேசிய தெளஹீத் ஜமாஅத் என்பன இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளன. அவை இந்திய தெளஹீத் ஜமா அத்துடன் தொடர்புகளைப்பேணி வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உயர்குழு (ஜனாதிபதி ஆணைக்குழு) பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த தற்கொலை தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 11 பேர் இந்தியர்கள்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய 11 அடிப்படைவாத இயக்கங்களை சட்டரீதியாக தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.- Vidivelli