11 முஸ்லிம் அமைப்புகள் மீது தடை: மேன்முறையீட்டுக்கு நடவடிக்கை
சம்பந்தப்பட்ட அமைப்புகள் சட்டத்தரணிகளுடன் ஆராய்வு
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகள் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.
ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (UTJ), சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ), ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ), அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (ACTJ), பரகஹதெனியவில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் ஜம்இய்யதுல் அன்சாரிஸ் சுன்னதுல் முஹம்மதியா (JASM), காத்தான்குடியில் இயங்கும் தாருல் அதர் அத்தஅவிய்யா அல்லது ஜாமிஉல் அதர், ஜமாஅதே இஸ்லாமியின் மாணவர் அமைப்பான ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பு (SLISM), சர்வதேச தீவிரவாத அமைப்புகளான ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல் கைதா, தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய சேவ் த பேர்ல்ஸ் மற்றும் அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய கொள்கைகளைப் பரப்பி வரும் சுப்பர் முஸ்லிம் ஆகிய அமைப்புக்களுக்கே தடை விதிக்க சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக நேற்று முன்தினம் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்திருந்தார்..
இந் நிலையில் சில தவ்ஹீத் அமைப்புகளும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பும் தத்தமது சட்டத்தரணிகளுடன் இத் தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)
இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத், அநியாய தடைக்கு எதிராக சட்ட ரீதியில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க இலங்கையில் 11 அமைப்புகளை தடைசெய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றில் 06 தவ்ஹீத் அமைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் ஏகத்துவ பிரச்சாரம் மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுத்து நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டு ஜனநாயக ரீதியில் செயல்படும் அமைப்பாகும்.
தீவிரவாத, பயங்கரவாத சிந்தனைகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பகிரங்கமாக செயல்படுவதுடன், தற்கொலை தாக்குதலின் முக்கிய குற்றவாளி ஸஹ்ரான் ஹாஷிம் குறித்த முக்கிய தகவல் உட்பட பல்வேறு விடயங்களில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கி நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து அக்கறையுடன் செயல்பட்ட ஓர் அமைப்பாகும்.
இவ்வாறான நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து அக்கறையுடனும் தீவிரவாதத்திற்கு எதிராக 100 வீதம் ஜனநாயக விழுமியங்களை கடைப்பிடித்து இயங்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் உட்பட தவ்ஹீத் அமைப்புகளை தடை செய்ய எத்தனிப்பது ஜனநாயக விழுமியங்களை மீறும் செயலாகும்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை பொறுத்த வரையில் ஜனநாயக வழியில் சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஏகத்துவ பிரச்சாரம் மற்றும் சமூக பணிகளை முன்னெடுக்கும் அமைப்பு என்கின்ற அடிப்படையில் சட்ட ரீதியில் ஜனநாயக வழிமுறைகளை கையாண்டு நீதியை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ)
அநியாயமாக தடை விதித்தால் சட்டத்திற்கு முன் நீதி மன்றத்தில் நியாயம் கேட்போம் என சிலோன் தௌஹீத் ஜமாஅத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மாபெரும் அழிவொன்று நடக்க இருக்கிறது என்று போதிய தகவல்களை உடனடியாக பாதுகாப்புத் துறைக்கு வழங்கிய CTJ உள்ளிட்ட தவ்ஹீத் அமைப்புகளை தடை செய்யவுள்ளதாக கூறுவது நீதியின் பெயரால் அநீதியை நிலைநாட்ட முனைவதாகும்.
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் என்பது ஜனநாயக ரீதியில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக இஸ்லாமிய பிரச்சாரம் மற்றும் சமூக பணிகளை முன்னெடுத்து வரக்கூடிய ஓர் அமைப்பாகும். நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், தீவிரவாதத்தை அடியோடு இல்லாமலாக்கவும் தொடர்ந்து பாடுபடும் ஓர் வெளிப்படைத் தன்மை கொண்ட ஜனநாயக அமைப்பாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் என்பது, 04/21 தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு முன்பதாகவே பாதுகாப்புத் துறையுடன் ஒத்துழைப்பு வழங்கி ஸஹ்ரான் ஹாஷிமின் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பில் தகவல்களை வழங்கி பாதுகாப்பு தரப்புக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய ஓர் இயக்கமாகும்.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ தீவிரவாதத்தில் தொடர்பு கொண்டுள்ள அமைப்புகளை தடை செய்வதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனாலும், தீவிரவாதத்திற்கு நேர் எதிராக செயல்பட்ட அமைப்புகளை தடை செய்வதென்பது ஜனநாயக விரோத செயல்பாடாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஜமாஅதே இஸ்லாமியின் மாணவர் அமைப்பான ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பும் குறித்த தடை பற்றி சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது.
தடை செய்ய புதிய சட்டம் வேண்டும் : சட்டத்தரணி
‘‘ நாட்டில் இயங்கும் அமைப்புகளை இவ்வாறு எடுத்த எடுப்பில் தடை செய்ய முடியாது. அதற்கென பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கென பாராளுமன்றத்தில் விசேட சட்டம் இயற்றப்பட்டது. அதேபோன்று முஸ்லிம் அமைப்புகள் மீதான தடையை செயற்படுத்த சட்டம் இயற்றப்பட வேண்டும். இதுவரை இத் தடை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை. ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரின் ஆலோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த தடை தொடர்பில் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்த முடியும். என்னைப் பொறுத்தவரை கத்தோலிக்க மக்களைத் திருப்திப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது’’ என சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.-Vidivelli