32 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு 75 பேர் தடுப்புக் காவலில்; 211 பேர் விளக்கமறியலில்
பிரதான சூத்திரதாரி நெளபர் மெளலவி : அமைச்சர் சரத்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய 32 சந்தேக நபர்கள் மீது பயங்கரவாதம் மற்றும் அதனுடன் இணைந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அத்தோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நெளபர் மெளலவி என்பவராவார். இந்த சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நெளபர் மெளலவி ஒரு குறிப்பிட்ட காலம் கட்டாரை தளமாகக் கொண்டிருந்துள்ளார். அவர் சஹ்ரானுக்கு தீவிரவாத்தை போதித்துள்ளதுடன் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு தீவிரவாத கருத்துக்களை போதிப்பதற்கு உதவியும் செய்துள்ளார். அடுத்த சந்தேக நபர் ஹஜ்ஜுல் அக்பர் என்பவராவார். இவரும் அடிப்படைவாத போதனைகளுக்கு உதவியாக இருந்துள்ளார்.
அரசாங்கம் வெளிநாடுகளிலுள்ள 54 சந்தேக நபர்களை அங்கிருந்தும் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. இவர்கள் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களாவர். இவர்களில் இதுவரை 50 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். தாக்குதலுடன் தொடர்புடைய 75 சந்தேக நபர்கள் பொலிஸாரின் உத்தரவின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதேவேளை 211 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, ‘தற்கொலைக் குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பனவற்றின் அறிக்கைகள் மற்றும் தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கொடிய செயலைப் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறினார்.
குற்றச் செயலைப் புரிந்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில், குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. கிடைக்கப்பெற்றுள்ள சாட்சியங்களின் அடிப்படையிலே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவேண்டும்.
வழக்குகள் பலமானதாகவும், சட்டத்தில் குறைபாடுகள் இன்றியும் இருக்கவேண்டும். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றுக்குரிய கணக்காய்வு அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். கணக்காய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு அரசுகள், வங்கிகள் மற்றும் சட்டத்துறையுடன் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறு பணப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதென்பதை கண்டறிய வேண்டியுள்ளது. இதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
சில சந்தேக நபர்கள் இந்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற சட்டத்தரணிகளின் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே வழக்குகள் மிகவும் உறுதியானதாக சட்டத்தில் குறைபாடுகள் அற்றதாக இருக்கவேண்டுமென்பதில் சட்டமா அதிபர் திணைக்களம் உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்தார்.
அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள் இன்னும் எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணைக் குழுவின் சிபாரிசுகளை ஆராய்வதற்கு 6 பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊடக மாநாட்டில் அமைச்சர் சமல் ராஜபக் ஷ தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிபாரிசுகளை ஆராய்வதற்காக 6 பேரடங்கிய அமைச்சரவை உப குழுவொன்றினை நியமித்திருந்தார். இக்குழு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை என்பவற்றினை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அமைச்சரவைக் குழுவின் தலைவராக சமல் ராஜபக் ஷ நியமிக்கப்பட்டிருந்ததுடன் ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பர்ணாந்து, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை கடந்த மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது. இக்குழுவின் செயலாளராக ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் (சட்டம்) ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிகுப்த ரோகனாதீர நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் என அமைச்சர் சமல் ராஜபகஷ ஊடக மாநாட்டில் தெரிவித்தார். கடந்தகால அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தி தீவிரவாதத்தினையும் கலவரத்தினையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.
சமல் ராஜபக் ஷ பொலிஸ் திணைக்களத்தின் மீதும் குற்றம் சுமத்தினார். பொலிஸார் தற்கொலைத் தாக்குதல் இடம்பெறும் வரை இருக்காது அதற்கு முன்பே தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். அரசாங்கம் தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடு இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் விஜேதாச ராஜபக்ச எம்.பி. பாராளுமன்றத்தில் 2016 இல் தீவிரவாத குழுக்கள் தொடர்பாக உரையாற்றினார். தீவிரவாத குழுக்கள் தொடர்பில் எச்சரித்தார். ஏன் அப்போது நல்லாட்சி அரசாங்கம் அவரை விமர்சித்தது.
நாங்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பொலிஸார் தங்களது கடமையில் அக்கறையின்றி இருக்கிறார்கள். அமைச்சரவை உபகுழு பொலிஸ்மா அதிபருக்கு, பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடிக்கும் ஆரம்ப அறிகுறிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவை உபகுழு தெரிவித்துள்ளது என்றும் அமைச்சர் சமல் ராஜபக் ஷ தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், குறிப்பிட்ட சிபாரிசுகள் பொலிஸ் திணைக்களம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு மூலம் அமுல்படுத்தப்பட வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்காக பாராளுமன்றத்திற்கு சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் நிகழாதிருப்பதற்கு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென அமைச்சர்களான சரத் வீரசேகர மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவித்தனர்.
மத்ரஸா பாடசாலை விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர்கள் இருவரும் பதிலளிக்கையில், மத்ரஸா பாடசாலைகளுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படவுள்ளன. அது தொடர்பான சிபாரிசுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றனர்.
ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், எந்த ஒரு தனி நபர் மீதும் சட்டமாஅதிபர் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக அரசாங்கம் தலையீடு செய்யாது. எதிர்க்கவும் மாட்டாது. ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் விடயத்திலும் அரசு எந்த தலையீடுகளையும் செய்யாது என்றார்.
அமைச்சர் சமல் ராஜபக் ஷ கருத்துத் தெரிவிக்கையில், பொதுபல சேனா அமைப்பையும் தெளஹீத் ஜமாஅத் குழுக்களையும் தடை செய்ய வேண்டும் என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள சிபாரிசுகளுக்கு அமைச்சரவைக்குழு எதிர்ப்பு வெளியிடவில்லை என்றார்.-Vidivelli