எம்.பி.எம்.பைறூஸ்
இலங்கையில் கொவிட் 19 நிலைமைகள் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாவிடினும், நாளாந்தம் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர் சுதத் சமரவீர குறிப்பிடுகிறார். சில வாரங்களுக்கு முன்னர் நாளாந்தம் 800 பேரளவில் தொற்றுக்குள்ளான போதிலும் தற்போது 200 பேர் வரையிலேயே தினமும் தொற்றுக்குள்ளாவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இலங்கையில் தடுப்பூசி வழங்கல்
இலங்கையில் இவ்வாறு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற அதேவேளை, கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை இலங்கை கடந்த ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பித்தது. இந்தியாவின் சேரம் நிறுவனத்தின் ஊடாக தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசிகளைக் கொண்டே இலங்கையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 30 ஆம் திகதி வரை இலங்கையில் 903,467 பேர் அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்காலிகமாக இடைநிறுத்தம்
அரசாங்கம் தற்போது அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை கடந்த புதன் கிழமை இரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக கொவிட் 19 கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவிக்கிறார். ஏலவே தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்க வேண்டியுள்ளதால் எஞ்சியுள்ள தடுப்பூசிகளை அதற்காகப் பயன்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு இடைநிறுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
கொவிட் தடுப்பூசிகள்
உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமான கொவிட் 19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் சில மருந்துகள் மாத்திரமே இதுவரை உலக சுகாதார நிறுவனத்தினதும் சர்வதேச நாடுகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
அதற்கமைய அமெரிக்க, ஜேர்மன் பல்தேசிய நிறுவனத் தயாரிப்பான பைசர் (செயற்திறன் 94%), பிரித்தானியாவின் தயாரிப்பான ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிக்கா (செயற்திறன் 62-90%) , அமெரிக்க தயாரிப்பான மொடேர்னா (செயற்திறன் 95%), ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் (செயற்திறன் 92%), சீன தயாரிப்பான சினோபாம் (50-70%), இந்தியாவின் கொவிஷீல்ட் (90%) ஆகியவையே தற்போதைக்கு அனுமதி பெற்ற தடுப்பு மருந்துகளாகும்.
இலங்கையில் வழங்கப்படும் தடுப்பூசிகள்
இலங்கையில் இன்று வரை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசியே வழங்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிகள் கடந்த வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் அவை இலங்கையிலுள்ள சீனப் பிரஜைகளுக்கே முதற்கட்டமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப் பின்னணியில் மேற்படி தடுப்பூசிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்களும் அச்சமும் நிலவுவதை அவதானிக்க முடிகிறது. அவற்றுக்கான தெளிவை வழங்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். அந்த வகையில் இத் தடுப்பூசிகளின் பின்னால் உள்ள விஞ்ஞான ரீதியாக உண்மைகள் சிலவற்றை சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு பின்வருமாறு விளக்குகிறது.
தடுப்பு மருந்து என்றால் என்ன?
தடுப்பு மருந்து வழங்கல் எனப்படுவது நோய்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு கொடுக்கப்படும் எளிமையான, பாதுகாப்பான மற்றும் செயல்திறன்மிக்க ஒரு சிகிச்சை முறையாகும். உடலின் இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தியை வலுவூட்டுவதன் மூலம் இது மேற்கொள்ளப்படுகின்றது.
தடுப்பு மருந்துகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன?
ஒவ்வொரு தடுப்பு மருந்தும், அவை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. பரீட்சார்த்த மட்டத்தில் உள்ள ஒரு தடுப்பு மருந்தை முதலில் மிருகங்கள் சிலவற்றிற்கும், அதன் பின் முன்சிகிச்சை நிலையத்தில் மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்டு அதன் பின் பொது மக்களுக்கு கட்டம் I, II மற்றும் III என சிகிச்சை நிலைய பரீட்சார்த்த கட்டங்களில் அது கொடுக்கப்பட்டதன் பின்பே பொதுவான பயன்பாட்டிற்கு வெளியிடப்படுகின்றது. மேற்படி கட்டங்களில், அது எந்த நோய்க்கு எதிராக உருவாக்கப்பட்டதோ, அது தொடர்பான செயல்திறன் மற்றும் அதன் பாதுகாப்பு போன்றன மதிப்பீடு செய்யப்படுகின்றன.
கொவிட்-19 தடுப்பூசியில் என்ன உள்ளது?
பெரும்பாலான தடுப்பு மருந்துகளில் பிறபொருள் (antigen) , துணையூக்கிகள் (adjuvant), நற்காப்பு பதார்த்தங்கள் (preservatives) மற்றும் நிலைப்படுத்திகள் (stabilizer) அடங்குகின்றன. கொவிட்-19 தடுப்பூசியை பொறுத்தமட்டில் இதில் செயலிழக்கம் செய்யப்பட்ட வைரஸ் வடிவத்தில் உள்ளதுடன், கொவிட்-19 நம்மை என்றேனும் தாக்கும் பட்சத்தில் அதை இனங்கண்டு தாக்க நம் உடலை பழக்கப்படுத்துகின்றது.
தடுப்பூசி எவ்வாறு செயற்படுகின்றது?
வைரஸின் உயிரற்ற ஒரு பாகம் (வைரஸின் மேற்பரப்பில் உள்ள ஒரு புரத வகை) தடுப்பு மருந்தில் உள்ளதுடன், நமது உடலின் இயற்கை நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பயன்படுத்தி, நோய்க்கு எதிரான தடுப்பு ஆற்றலை கட்டியெழுப்ப மருந்திற்கு துணை புரிகின்றது.
அத்துடன், B மற்றும் T எனப்படும் ஞாபகக் கலங்கள் மூலம் பலமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஞாபக சக்தி உருவாக்கப்படுகின்றது.
தடுப்பூசி பெற்றவருக்கு கொவிட்-19 வைரஸ் பின்னர் தொற்றினால், அதை ஞாபகம் வைத்துள்ள மேற்படி கலங்கள் வைரஸைத் தாக்கி நபரை நோயில் இருந்தும் பாதுகாக்கின்றது.
தடுப்பு மருந்து பாதுகாப்பானதா?
இக் கேள்வியே உலகம் முழுவதும் எழுப்பப்படுகிறது. உண்மையில் ஏனைய அனைத்து தடுப்பு மருந்து வகைகளைப் போன்றே, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, கொவிட்-19 தடுப்பு மருந்தும் பல்வேறுபட்ட கடுமையான பரீட்சார்த்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்பே இத்தடுப்பு மருந்து மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று ஒரு பாரிய உலக நெருக்கடியாக உருவெடுத்த நிலையில் அதற்கு எதிரான தடுப்பு மருந்தொன்றை இயன்றளவு அவசரமாக கண்டுபிடிக்கும் பாரிய ஆராய்ச்சியில் உலகம் முழுவதிலும் உள்ள பல மருத்துவத்துறை விஞ்ஞானிகள் இணைந்து பாடுபட்டனர்.
அதன்போது தடுப்பு மருந்தின் பாதுகாப்புத் தன்மைக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. பல்வேறுபட்ட தடுப்பு மருந்துகள் துரிதமாக மதிப்பீடு செய்யப்பட்டன. குறுக்கு வழிகளிலன்றி முறையான சிகிச்சை நிலைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில் ஒரு பொதுவான இலக்கிற்காக, திறமைமிக்கவர்களின் ஈடுபாடு, பாரிய அர்ப்பணிப்பு மற்றும் நிதிச் செலவுடன் மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் கடும் உழைப்பின் சாதனையே இந்த தடுப்பூசிகள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
பக்க விளைவுகள்
ஏனைய எல்லா தடுப்பு மருந்துகளில் உள்ளதைப் போன்றே கொவிட்-19 தடுப்பு மருந்திலும் தடுப்பூசி போடப்படும் இடத்தில் நோவு, மிதமான காய்ச்சல், தசை நோவு, தலைவலி, உடல் நடுக்கம் போன்ற சில பக்கவிளைவுகள் இருக்கலாம். இதை விட பாரதூரமான பக்கவிளைவுகளும் ஏற்பட இடமுண்டு என்ற போதிலும் அதன் சாத்தியம் மிகக் குறைவே.
சம்மதப் படிவம்
இதன் காரணமாகவே தடுப்பு மருந்து வழங்கப்படுவதற்கு முன்னராக உரிய நபரிடம் எழுத்து மூல ஒப்புதல் பெறப்படுகிறது. குறித்த சம்மதப் படிவத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
‘‘……………….. ஆகிய நான் கொட்-19 தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி ஏற்றுதல் தொடர்பில் கேள்விகள் கேட்கவும் அவை தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் அவைகள் குறித்து எனக்கு இருந்த சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்தவும் இந்த தடுப்பூசி நிலையத்தில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இந்த கொவிட் தடுப்பூசியின் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் அரிதான பக்க விளைவுகளை நன்கு புரிந்து கொண்டதன் பின்னர் இந்த தடுப்பூசியினைச் செலுத்திக் கொள்வதென முடிவெடுத்து அதற்கான சம்மதத்தினை இத்தால் வழங்குகிறேன்’’
தடுப்பூசி அட்டை
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கான ஆதாரமாகவும் இரண்டாவது தடுப்பூசியை தடையின்றிப் பெற்றுக் கொள்வதற்கும் வசதியாக தடுப்பூசி அட்டை ஒன்று வழங்கப்படுகிறது.
குறித்த அட்டையில் அவரது பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், வயது, பாலினம், முகவரி, தொடர்பு இலக்கம், மாவட்டம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகிய விபரங்கள் குறிப்பிடப்படுகின்றன. அத்துடன் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான திகதியும் அதில் குறிப்பிடப்படுகிறது.
இரத்தம் உறைகிறதா?
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தயாரிப்பான அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போட்டுக் கொண்ட நோயாளிகள் பலருக்கு இரத்தம் உறைவதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நோர்வே, டென்மார்க், பல்கேரியா உள்ளிட்ட நாடுகள் அந்த தடுப்பூசி போடும் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன.
எனினும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு இரத்த உறைவு அறிகுறிகள் ஏற்படுவதற்கான ஆபத்து கிடையாது என ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஐரோப்பிய மருத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் முன்னர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி தங்களின் அமைப்பு எடுத்த முடிவில் உறுதியுடன் இருப்பதாக அந்த அமைப்பின் தலைமை அதிகாரி எமெர் குக் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி நடத்தி வரும் நிலையில், தடுப்பூசி திட்டத்தை நிறுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஐரோப்பாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 17 இலட்சம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 37 பேர் மட்டுமே இரத்த உறைவு பாதிப்பை எதிர்கொண்டது தெரிய வந்துள்ளதாக அஸ்ட்ராசெனிகா நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல, ஐரோப்பிய மருந்துகள் முகவரகமும் தடுப்பூசி போட்டுக் கொண்ட எல்லோருக்கும் இதுபோன்ற இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கை அஸ்ட்ராசெனிகாவை தொடருமா?
இரத்த உறைவு தொடர்பான அச்சம் காரணமாக இலங்கை அரசாங்கம் அஸ்ட்ராசெனிகாவை வழங்கும் தனது தீர்மானத்தை மாற்றிக் கொள்ளுமா என்ற கேள்வியும் தற்போது பலராலும் எழுப்பப்படுகிறது. எனினும் அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ரமேஷ் பத்திரண குறிப்பிடுகிறார். ‘‘ஐரோப்பிய நாடுகளில் இரத்த உறைவை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி தொகுதியும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியும் வேறுபட்டவையாகும். அதனால் நாம் அச்சமடையத் தேவையில்லை’’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தடுப்பூசி பெற்றவர்கள் இலங்கையில் மரணித்தனரா?
இலங்கையில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பெற்றுக் கொண்ட மூவர் மரணித்துள்ளதாக அண்மையில் வெளியான செய்திகளை கொவிட் 19 தடுப்பு அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ மறுத்துள்ளார். பெளத்த பிக்கு உள்ளிட்ட மூவர் தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னர் மரணித்துள்ள போதிலும் அவர்களது மரணத்திற்கு நாட்பட்ட நோய்களே காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட இரு வாரங்களில் வைத்தியசாலையில் மரணித்த விவகாரமும் பேசுபொருளாக மாறியிருந்தது. ‘‘ அவரது உடல் அங்கங்களில் இரத்தம் உறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. எனினும் தடுப்பூசியின் காரணமாகவே இரத்தம் உறைந்தது என்றோ மரணம் சம்பவித்தது என்றோ எம்மால் கூற முடியாது. இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன’’ என கராப்பிட்டிய வைத்தியசாலையில் உதவி சட்ட வைத்திய அதி காரி டாக்டர் சமதி தந்தெனிய ஆராய்ச்சி தெரிவிக்கிறார்.
முன்னேற்றம் தேவை
இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளதாக குறிப்பிடும் தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் நிஹால் அபேசிங்க, நாளாந்தம் எத்தனை பேருக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது என்ற புள்ளிவிபரங்களை மாத்திரம் வெளியிடாது தடுப்பூசி பற்றிய போதுமான தெளிவுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். வேறு சில நாடுகளில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தை இதற்காக முன்னுதாரணமாகக் கொள்ளப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அந்த வகையில் இலங்கையின் சுகாதார அமைச்சு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பது குறித்தும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். இதன் மூலம் மக்கள் மத்தியில் நிலவும் தடுப்பூசி குறித்த சந்தேகங்கள், அவநம்பிக்கைகளை நீக்க முடியுமாகவிருக்கும்.- Vidivelli