உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்னும் சில தினங்களில் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அது தொடர்பான அரசாங்கத்தின் நகர்வுகளும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களின் நகர்வுகளும் உத்வேகம் பெறத் துவங்கியுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நாடளாவிய ரீதியில் மக்களை ஒன்று திரட்டிப் போராடவுள்ளதாகவும் சர்வதேச சமூகத்தின் உதவியைக் கோரப் போவதாகவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் எச்சரித்துள்ளார். அதேபோன்று இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது விரல் நீட்டியுள்ள அவர், அவருக்கு எதிராக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்கியுள்ளார். மறுபுறம் வாழ்க்கைச் செலவு உயர்வு, காடழிப்பு, சீனி மற்றும் எண்ணெய் மோசடிகள் என அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களும் அதிருப்திகளும் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. இந்த அராசங்கம் ஆட்சிக்கு வர முன்னின்று பாடுபட்ட பெளத்த மத தலைவர்கள் கூட இன்று பகிரங்கமாக, அமைச்சர்களின் முகத்திலேயே நேருக்கு நேர் விமர்சனங்களை முன்வைக்குமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
இந்த நெருக்கடிகளால் தட்டுத்தடுமாறும் அரசாங்கம் பெரும்பான்மை சிங்கள மக்களையும் கத்தோலிக்க சமூகத்தையும் திருப்திப்படுத்துவதற்காக தினமும் கைதுகளையும் தடைகளையும் அமுல்படுத்தி வருகிறது. இதன் தொடரிலேயே தினமும் ஓரிருவராவது கைது செய்யப்படுகின்றனர். நேற்று முன்தினம் 11 முஸ்லிம் அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கிய அறிவிப்பும் வெளிவந்துள்ளது. மேற்படி 11 அமைப்புகளில் தடை செய்யப்பட வேண்டிய சில தீவிரவாத அமைப்புகள் உள்ள போதிலும் பெரும்பாலானவை நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, முறையாக பதிவு செய்யப்பட்டு, ஜனநாயக வழிமுறையில் இயங்குபவையாகும். இந்த உண்மையை விளங்கியிருந்தும் கூட அரசாங்கம் அவசரப்பட்டு தடை செய்ய முற்படுவதானது முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் மென் மேலும் அடிப்படைவாதத்தையும் தீவிரவாதத்தையும் வளர்க்கவே வழிவகுக்கும் என்பதைச் சொல்லி வைக்க விரும்புகிறோம். இதனைத்தான் நீதியமைச்சர் அலி சப்ரியும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை காரணம் காட்டியே அரசாங்கம் இந்த கைதுகளையும் தடைகளையும் முன்னெடுக்கிறது. புனர்வாழ்வளித்தல் என்ற பெயரில் தன்னிச்சையான கைதுகளுக்கும் நீண்ட நாள் தடுத்து வைப்புகளுக்கும் வழிவகுக்கும் வர்த்தமானியையும் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையை முன்வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை முக்கியத்துவமிக்கதாகும். அறிக்கையின் உள்ளடக்கங்களை நுணுகி ஆராய்ந்து அது தொடர்பில் முஸ்லிம் சமூகம் பக்கமுள்ள நியாயங்களையும் சந்தேகங்களையும் அவர் முன்வைத்த விதம் அனைவரதும் பாராட்டைப் பெற்றுள்ளது. அவர் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் ஆற்றிய உரை இந்த இதழில் முழுமையாக தமிழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து ஓர் அரசியல் தலைவராகவும் புத்திஜீவியாகவும் இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஹக்கீம் வழங்கி வரும் முதிர்ச்சிமிக்க தலைமைத்துவம் பாராட்டப்பட வேண்டியதாகும். அதேபோன்றுதான் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களை பற்றியும் பரப்பப்பட்டுவரும் தவறான கருத்துக்களை மறுத்தும், அவற்றிற்கு விளக்கமளித்தும் அவர் எழுதி வெளியிட்ட ‘We Are A Part, Not Apart’ எனும் தலைப்பிலான நூலும் அவரது வரலாற்றுப் பங்களிப்பாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதங்களில் முஸ்லிம் எம்.பி.க்கள் ஈடுபாடு காட்டாமை கவலைக்குரியது என்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களாவது இதற்கு முன்னுரிமையளித்து பாராளுமன்றத்தில் சமூகத்தின் சார்பில் பேச வேண்டும் என இரு வாரங்களுக்கு முன்னர் வலியுறுத்தியிருந்தோம். அந்த வகையில் மு.கா. மற்றும் அ.இ.ம.கா. கட்சிகளின் தலைவர்களும் நீதியமைச்சரும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் வரவேற்கத்தக்கவையாகும். அதேபோன்று ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தலைமையிலான முஸ்லிம் பிரமுகர்களின் தொடர் அறிக்கைகளும் ஊடகங்கள் வாயிலான மிகுந்த தாக்கத்தைச் செலுத்தி வருகின்றன. சிவில் நிறுவனமாக முஸ்லிம் கவுன்சிலின் பணிகளும் கவனிப்புக்குரியவை.
இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாதவாறு சந்தித்துள்ள இந்த நெருக்கடியிலிருந்து சமூகத்தை மீட்பதற்காக அரசியல் மற்றும் சிவில் தலைவர்கள் இவ்வாறு வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
கைதுகளாலும் தடுத்து வைப்புகளாலும் தடைகளாலும் முஸ்லிம் சமூகம் மிகுந்த அச்சத்திற்குள்ளும் விரக்திக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இந் நிலைமை நீடிப்பது முஸ்லிம் சமூகத்தை மிகப் பாரிய உளவியல் நெருக்கடிக்குள் தள்ளவே வழிவகுக்கும். இதற்கு நாம் இடமளிக்க முடியாது.
முடிந்தளவு ஜனநாயக மற்றும் சட்ட ரீதியான போராட்டங்களை முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தலைமைகள் முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் சவாலுக்குட்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறைகள் தடுக்கப்பட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளே சமூகத்திற்கு தைரியத்தைத் தருவதாக அமையும். இது குறித்து சம்பந்தப்பட்ட அனைவரும் சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.- Vidivelli