கலாநிதி அமீரலி
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
2009க்குப் பின்னர் படிப்படியாக வளர்ந்துவந்த பௌத்த சிங்கள இனவாதம் இப்போது இந்த நாட்டின் பல்லின அமைப்பை அடியோடு ஒழித்து ஓரின, ஒரே மத, ஒரே மொழி அமைப்பாக மாற்றி அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றது. அந்த முயற்சிகளின் ஒரு வெளிப்பாடே அரசாங்கம் அண்மையில் அறிவித்த புர்கா தடையும், மத்ரஸா தடையும், புனர்வாழ்வு நிலையங்களின் திறப்பும். இந்த மூன்றுக்கும் அரசு கூறும் ஒரே காரணம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக என்பதாகும். இது உண்மையா?
முஸ்லிம் பெண்களின் புர்கா, நிகாப் ஆகிய இரு ஆடைகளிலும் சில பிரச்சினைகள் உண்டு என்பதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே அவுஸ்திரேலியாவில் வெளியாகும் பத்திரிகை ஒன்றில் நான் சுட்டிக்காட்டினேன். அந்தக் கட்டுரையை இலங்கையிலும் சிலர் தமிழில் மேற்கோள் காட்டியபோது பல கண்டனங்கள் எழுந்தன. இப்போது எழுந்துள்ள புதிய சூழலைக் கருத்திற்கொண்டு அப்பிரச்சினைகளை மீண்டும் வாசகர்களுக்காக விளக்க வேண்டியுள்ளது.
முதலாவதாக, புர்காவும் நிகாபும் கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள்ளேதான் இலங்கையில் அறிமுகமாயின. 1979ஆம் வருட ஈரானிய இஸ்லாமிய (இஸ்லாமியமாக்கப்பட்ட) புரட்சி தோற்றுவித்த “கறுப்பு அலை” முஸ்லிம் உலகெங்கும் பரவத் தொடங்கியபோது அது இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இரண்டாவதாக, இந்த ஆடைகள் இலங்கையின் பல்லினக் கலாசார, புவியியல் சூழலுக்கு அப்பாற்பட்டவை. அவை பிறிதொரு கலாசார, புவியியல் சூழலுக்குள் தோன்றியவை. எனவே சேலையையும் முக்காட்டையுமே கண்டு பரிச்சயப்பட்ட முஸ்லிம் அல்லாத இனங்களின் கண்களுக்கு இவை ஒருவித விநோத உணர்வை ஏற்படுத்தியது உண்மை. அதனைத் தொடர்ந்து கறுப்பு நிற அபாயாவும் முஸ்லிம் பெண்களை கௌவத் தொடங்கியதுடன் மற்றைய இனங்களிகளின் பார்வை ஒருவித வெறுப்புணர்வுடன் மாறத் தொடங்கிற்று. இந்த உடையைத்தவிர முஸ்லிம் சமூகத்துக்குள் 1980க்குப் பின்னர் ஏற்பட்ட ஏனைய மத, கலாசார அடிப்படையிலான மாற்றங்களும் இணைந்து, இந்த முஸ்லிம்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்ற ஒரு கேள்வியை மற்றைய சமூகங்களிடையே தோற்றுவித்தது. புர்காவும் நிகாபும் அபாயாவும் மற்ற இனங்களிடையே பேசு பொருளாக மாறின.
இருந்தும் இவ்வுடைகளை அணிந்த முஸ்லிம் பெண்களின் நிலைப்பாடு இன்னொரு பிரச்சியையையும் தோற்றுவித்தது. இந்தப் பெண்களைப் பொறுத்தவரை எந்த ஆடையை அணிவதென்பது அவர்களின் சுயவிருப்பம். மற்றவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவர்கள் அணியவேண்டிய அவசியமில்லை. அது அவர்களின் மனித உரிமைகளுள் ஒன்று. இந்த வாதத்தை யாரும் மறுக்க முடியாது. நீதிமன்றங்களும் அதனைச் சரிகாணும். ஆனால் அதில் ஒரு பிரச்சினை உண்டு. அது சமூகவியலுடன் தொடர்புடையது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சமூகத்திலேதான் பிறக்கிறார்கள். மனிதன் ஒரு சமூகப் பிராணி. ஆகவே சமூகத்துடன் உறவாடாமல் அவனது வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்திசெய்வது கஷ்டம். அவ்வாறு உறவாடி வாழ்வதை இஸ்லாம் தடைசெய்கின்றதா? அல்லது சமூகத்தைவிட்டும் ஒதுங்கி வாழ்வதை அது ஆதரிக்கின்றதா? இல்லையே. ஆதலால் பல்லின மக்கள் வாழும் ஒரு சமூகத்தில் ஒருவரின் உடை சமூகங்களுக்கிடையே உள்ள உறவையும் ஐக்கியத்தையும் பாதிக்குமானால் ஒன்றில் அந்த உடையை மாற்ற வேண்டும் அல்லது சமூகத்தைவிட்டும் ஒதுங்கி வாழவேண்டும். இதைனை முஸ்லிம் சமூகமே தீர்மானிக்க வேண்டும். எனவே இப்பிரச்சினையைப்பற்றி ஒரு கலந்துரையாடலையாவது முஸ்லிம் தலைவர்கள் முன்னெடுத்திருந்தால் இந்தப் பிரச்சினைக்கு என்றோ ஒரு சுமுகமான முடிவைக் கண்டிருக்கலாம். தலைவர்கள் விட்ட தவறால் அது இன்று அரசாங்கத்தின் தடைக்கு ஆளாகியுள்ளது. ஆனால் அந்தத் தடைக்கு அரசாங்கம் கூறும் காரணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அமைச்சர் கூறுவதுபோன்று புர்காவும் நிகாபும் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது உண்மையானால் 1957இல் அன்றைய அரசாங்கம் பௌத்த துறவிகளின் காவி உடையைத் தடை செய்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு பௌத்த துறவிதான் தனது உடைக்குள் துப்பாக்கியை மறைத்து வைத்து பிரதமர் பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொன்றார். அதுமட்டுமல்ல, இன்றைய கொலைக்கருவிகள் பல உருவத்திலும் பல அளவிலும் உற்பத்தியாகின்றன. அவற்றை மறைப்பதற்கு புர்காவோ நிகாபோ தேவை இல்லை. எனவே இந்தத் தடை முஸ்லிம்களை வீணே பழிவாங்கும் நோக்கத்துடன் சிங்கள பௌத்த இனவாதிகளால் சோடிக்கப்பட்ட ஒரு தடையேயன்றி வேறில்லை.
அது போன்றதே 1000 குர்ஆன் பாடசாலைகளுக்கு எதிரான தடையும். இது எந்த அளவுக்கு ஆட்சியாளர்களிடையே மதரசா பற்றிய அறியாமை நிலவுகிறது என்பதைக் காட்டுகிறது. மத்ரஸா என்ற பெயருக்குள் எல்லா வகையான மார்க்கக் கல்விக்கூடங்களையும் அடக்கியதால் ஏற்பட்ட குளறுபடியே இத்தடைக்கு வித்திட்டுள்ளது. தடைசெய்ய எத்தனிக்கும் குர்ஆன் பாடசாலைகளுக்கும் உயர்தர மத்ரஸாக்களுக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு உண்டு. குர்ஆன் பாடசாலைகளில் அரபு மொழியிலுள்ள குர்ஆனை வாசிக்கக்கூடிய அளவு வல்லமையையும் இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகள் ஐந்தினையும் சீராகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் மட்டுமே சிறார்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. இதுதான் அடிப்படைவாதம் அல்லது தீவிரவாதம் என்று ஆட்சியாளர்கள் கருதுவார்களேயானால் அவர்கள் சுத்த ஞான சூனியர்களாகத்தான் இருக்க முடியும். முஸ்லிம்கள் தமது சிறார்களுக்கு ஊட்டும் இந்த ஆரம்ப மதக்கல்வியை எக்காரணம் கொண்டும் தவிர்க்கப் போவதில்லை. இந்தப் பாடசாலைகள் தடைசெய்யப்பட்டால் நிச்சயமாக ஒவ்வொரு வீடுமே ஒரு குர்ஆன் பாடசாலையாக மாறி, பெற்றோர்களே ஆசிரியர்களாகவும் மாறுவர். எத்தனையோ ஆலிம்கள் மறுமையை மனதில்வைத்து இலவசமாகவும் வீடு வீடாகச் சென்று கற்றுக் கொடுப்பர். அதையும் இந்த அரசு வீடு புகுந்து தடைசெய்யுமா?
இவற்றைத் தவிர உயர்தர மத்ரஸாக்களின் பாடத்திட்டங்களிலும் போதனா முறைகளிலும் மாற்றங்கள் தேவை என்பதை மறுக்கவில்லை. அதைப்பற்றி ஏற்கனவே பல முஸ்லிம் புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர். அந்த மாற்றங்களைப் புகுத்த வெளிநாடுகளிலிருந்து வல்லுனர்கள் வரவேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் இலங்கையிலேயே தகுதிவாய்ந்த முஸ்லிம் கல்விமான்களும் மார்க்க அறிஞர்களும் இருக்கிறார்கள். அரசு விரும்பினால் அதற்கான உந்துதல்களை அளித்து விரைவுபடுத்தலாம். அதைவிடுத்து, இந்தக் கல்வி நிலையங்கள் மதத் தீவிரவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் வளர்க்கின்றன என்று ஆதாரமில்லாத குற்றங்களைச் சுமத்தி அவற்றையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தனிப்பது வெறும் முட்டாள்தனமேயன்றி வேறில்லை.
இந்தக் குற்றங்களைச் சுமத்தும் ஆட்சியாளர்கள் எவரேனும் ஒரு முறையாவது ஒரு மத்ரஸாவுக்குச் சென்று அங்கே என்ன நடக்கின்றதென்பதைப் பார்த்ததுண்டா? அங்கே கல்வி புகட்டும் ஆசிரியர்களுடனோ கல்வி கற்கும் மாணவர்களுடனோ கலந்துரையாடியதுண்டா? அல்லது, அதன் பாடவிதானத்தையேனும் படித்ததுண்டா? அதுதான் போகட்டும், எந்த ஒரு அமைச்சருக்கேனும் மத்ரஸாக்களின் தோற்றம், அவை உலக ரீதியில் அறிவு விருத்திக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்கு, அவை உருவாக்கிவிட்ட அறிஞர்களினதும் இறைஞானிகளதும் விபரங்கள் ஆகியனபற்றிய அறிவுண்டா? அவற்றை மூடவேண்டும் என்று தெருவிலே நின்று கூச்சலிடும் பௌத்த துறவிகளுக்கேனும் இந்த விபரங்கள் தெரியுமா? இவை எதுவுமே இல்லாமல் மத்ரஸாக்களை கண்மூடித்தனமாகக் கண்டிப்பது பௌத்த இனவாதத்துக்கு முஸ்லிம்கள் மேலுள்ள வெறுப்பையே காட்டுகின்றது. மத்ரஸாக்களே துரத்திவிட்ட ஒரு துட்டனின் கொலைகாரச் செய்கையை ஆதாரமாகக் கொண்டு நூறாண்டுகளுக்கும் மேலாக இலங்கை முஸ்லிம்களின் ஆன்மிக வளர்ச்சிக்கு ஓர் அரணாகத் திகழும் கல்விக்கூடங்களில் அரசாங்கம் கை வைப்பது இந்த ஆட்சியின் இஸ்லாமிய வெறுப்பையே தெளிவுபடுத்துகிறது.
எல்லாவற்றையும்விடப் பயங்கரமான ஒரு முடிவுதான் அரசாங்கம் திறக்கவிருக்கும் புனர்வாழ்வு நிலையங்கள். அடிப்படைவாதி, தீவிரவாதி அல்லது பயங்கரவாதி என்று எந்த முஸ்லிமையாவது ஆட்சியாளர்கள் சந்தேகப்பட்டு இனங்கண்டுவிட்டால் அவரை அந்த நிலையங்களுக்குள் அடைத்துச் சில வருடங்களுக்கு அவரை மூளைச்சலவை செய்வதே இதன் நோக்கம். இந்த முயற்சி 2019 இல் பொதுபல சேனாவின் செயலாளரின் தலைமையில் கண்டியில் நடைபெற்ற ஒரு பகிரங்கக் கூட்டத்தினைத் தொடர்ந்து அன்றைய ஜனாதிபதியிடம் அவர்கள் சமர்ப்பித்த திட்டத்தின் வெளிப்பாடே. முஸ்லிம் அடிப்படைவாதிகளையும் வஹாபிகளையும் பௌத்த பீடத்திடம் விடுங்கள், அது இவர்களைத் திருத்தும் என்று கூறப்பட்டது. அவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவது சீன அரசு உய்கர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து மூளைச்கலவை செய்யும் முயற்சிகள். அந்த மூளைச்சலவையிலிருந்து வெளியேறும் முஸ்லிம்கள் அவர்கள் முஸ்லிம்களாகப் பிறந்தோம் என்ற ஞாபகத்தையே இழந்துவிடுகிறார்களாம் என்று பல செய்தி நிருபர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதைத்தான் இங்கேயும் இனவாதிகள் செய்யத் துடிக்கின்றனர். இது முஸ்லிம் இன ஒழிப்புக்குச் சமனாகாதா?
இந்தத் திட்டங்களுக்கு முஸ்லிம்கள் உள்ளிருந்தும் உலகளாவிய ரீதியிலும் எதிர்ப்புக்களைத் தெரிவிக்க வேண்டும். இந்த முயற்சிகளை இலங்கையின் பௌத்த மக்கள் எல்லாருமே ஆதரிக்கவில்லை. அவர்களுக்குள்ளும் மனிதாபிமானமும் ஜனநாயக உணர்வும் கொண்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆட்சியாளர்களின் அட்டகாசங்களைக் கண்டு நொந்துபோய் குமுறுகின்றனர். அவர்களுடனும் கிறிஸ்தவ இந்து மக்களுடனும் இணைந்து தைரியமற்ற தமது தலைவர்களை ஒதுக்கிவிட்டு முஸ்லிம்கள் போராட வேண்டும். அந்தப் போராட்டத்தின் ஒலி சர்வதேச அரங்குகளையும் எட்டட்டும். ஜனாஸா போராட்டத்தின் வெற்றி இதற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கட்டும்.- Vidivelli