‘தந்தை தீவிரவாதியோ பயங்கரவாதியோ அல்ல’
அசாத் சாலியின் கருத்து தவறாக புரியப்பட்டுள்ளது என்கிறார் ஆமினா
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“எனது தந்தை ஒரு தீவிரவாதியோ, பயங்கரவாதியோ அல்ல. அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துகள் தவறான புரிதலுக்கு உள்ளாகியுள்ளன. ‘அபே நீதிய அபிட’ (எங்கள் சட்டம் எங்களுக்கு) எனத் தெரிவித்தது நாம் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் கீழேயே திருமணம் செய்து கொள்கிறோம். இது முஸ்லிம்களுக்கான சட்டம். நாட்டில் திருமண விடயத்தில் மாத்திரமே ஷரீஆ சட்டம் பின்பற்றப்படுகிறது. அவர் இங்கு முழு ஷரீஆ சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை’’ என பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் மேல்மாகாண ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலியின் புதல்வி ஆமினா சாலி ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், எனது தந்தை கடந்த 15ஆம் திகதி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார். ஷரீஆ சட்டம் பற்றி பேசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. பின்பு அவரது வாகனத்திலிருந்து துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதாக அக்குற்றச்சாட்டு மாற்றப்பட்டது. இந்தத் துப்பாக்கி சட்டரீதியாக அனுமதிப்பத்திரம் பெறப்பட்டதாகும். பாதுகாப்பு அமைச்சின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதுமாகும்.
பின்பு சி.ஐ.டியினர் எனது தந்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் எனக் குற்றம் சுமத்தியுள்ளனர். எனது தந்தை 2017இல் சஹ்ரானின் நடவடிக்கைகளை எதிர்த்து பேசியுள்ளார். அவரை மக்கள் மதிக்கின்றனர். ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் மாத்திரமே கருத்து தெரிவித்துள்ளார் என்றார்.
சாலியின் கைது கவலையளிக்கிறது- சூபி தரீக்காக்கள் தெரிவிப்பு
இலங்கையில் சம்பிரதாய முஸ்லிம்களின் சிவில் அமைப்புகளில் ஒன்றான சூபி தரீக்காக்களின் கூட்டுப் பேரவை, முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
சூபி தரீக்காக்களின் கூட்டுப் பேரவை இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. கூட்டுப் பேரவையின் தலைவர் நகீப் மௌலானா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அசாத்சாலி கடந்த 16ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளமை எங்களது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் வெளியிட்ட சில ஊடக அறிக்கைகள் தொடர்பிலே கைது செய்யப்பட்டுள்ளார்’ என கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli