ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவளித்தமைக்கு பாக். உயர்ஸ்தானிகரை நேரில் சந்தித்து முக்கிய அமைச்சர்கள் நன்றி தெரிவிப்பு
(றிப்தி அலி)
ஜெனீவா மாநாட்டின்போது இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு பாகிஸ்தானின் தேசிய தினத்தையொட்டி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின்போது, இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் பாக். உயர்ஸ்தானிகரிடம் நன்றி தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் தேசிய தினத்தினையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வில் அனைத்து அமைச்சர்களையும் கலந்துகொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியதாக தெரியவருகின்றது.
பாகிஸ்தானின் 81ஆவது தேசிய தினம் கடந்த செவ்வாய்க்கிழமை (23) அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி பல்வேறு நிகழ்வுகளை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன் ஓர் அங்கமாக கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் வரவேற்பு நிகழ்வொன்று கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது. இந்த நிகழ்வு ஆரம்பிப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
வழமையாக திங்கட்கிழமை பி.ப 5.00 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகின்ற நிலையில் இந்த வார அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றமையினால் இது தொடர்பில் கலந்துரையாடும் முகமாவே அமைச்சரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையிலுள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெறும் பாகிஸ்தானின் தேசிய தின வரவேற்பு நிகழ்வில் அனைத்து அமைச்சர்களும் பங்குபற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சர்களை அறிவுறுத்தினர். அத்துடன், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் செயற்பட்டதற்காக நன்றி தெரிவிக்குமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய, சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன, அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, சரத் வீரசேகர, அலிசப்ரி, நிமல்சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன மற்றும் தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, தாரக பாலசூரிய உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், இஷாக் ரஹ்மான், முஷர்ரப் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், பாதுகாப்பு செயலாளர் மற்றும் வெளியுறவு செயலாளர் ஆகியோர் நிகழ்வு ஆரம்பம் முதல் இறுதி வரை பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli