எஸ்.என்.எம்.சுஹைல்
“தீப்பரவல் நான் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடுகளுக்கு அப்பால்தான் ஆரம்பமானதாக கூறுகின்றனர். எல்லோரும் ஆழ்ந்த நித்திரையிலிருந்தோம், நெருப்பு நெருப்பு என்று கத்தும் சத்தம் கேட்டது. எனது தாயும் தம்பிகளும் வீட்டுக்கு வெளியே ஓடினர். நானும், என் பிஞ்சுக்குழந்தையை சுமந்துகொண்டு மூத்த மகளையும் இழுத்துக்கொண்டு வெளியில் ஓடி முடிப்பதற்குள், எங்கள் வீடும் தீயில் கருக ஆரம்பித்தது. மயிரிழையில் உயிர் பிழைத்ததாக உணர்ந்தேன். உடுத்த உடை தவிர்ந்து அத்தனையும் கண்முன்னே பற்றியெரிய உயிரை பிடித்துக்கொண்டு ஓடினோம்” என்றார் கணவனை இழந்த இளம் தாய் பஸ்மினா.
எம்.ஆர்.எப்.பஸ்மினாவுக்கு 28 வயது. தேயிலை பொதி செய்யும் தொழிற்சாலையொன்றுக்கு வேலைக்குச் சென்று தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றுவதாக அவர் தெரிவித்தார்.
“விமலாவதிக்கு காதும் கேட்காது, பேசவும் முடியாது. அன்று அதிகாலையில் எமது வீட்டுத் தொகுதி பற்றி எரிந்தபோது அவர் வீட்டுக்குள்தான் இருந்தார். நான் அன்றைய தினம் வீட்டில் இருக்கவில்லை, அதிர்ஷ்டவசமாக மகன் வீட்டில் இருந்ததால் விமலாவதியை காப்பாற்ற முடிந்தது” என்றார் 70 வயது மதிக்கத்தக்க கணவர் தர்மதாஸ.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கஜீமா தோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் 32 குடிசைகள் தீக்கிரையாகின. 5 குடிசைகள் பகுதியளவில் சேதமடைந்தன. இங்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கதைகளே இவை.
கஜிமா தோட்டத்தில் தகரம், பலகைகள் கொண்டு அமைக்கப்பட்ட இந்த நெருக்கமான குடிசைகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் வசித்து வந்ததாக மாதம்பிட்டி கிராம சேவகர் பிரிவின் கிராம அதிகாரி டி.ஆர்.டீ.பி.பெரேரா கூறினார்.
“குறித்த பகுதியில் 18 வயதுக்கு குறைந்த 35 பெண் பிள்ளைகள், 30 ஆண் பிள்ளைகள் உட்பட 65 சிறுவர்களும் 42 பெண்கள், 33 ஆண்களும் வசித்து வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சிலருக்கு வாக்காளர் பதிவுகள் இருந்தாலும் பலர் பதிவுகள் இல்லாதிருக்கின்றனர்” என்றும் கிராம சேவகர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தீப்பரவல் ஏற்பட்ட பின்னர் கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் (பிரதி) பிரதீப் யஷாரத்ன, கொழும்பு பிரதேச செயலாளர் நாலக்க ரத்நாயக்க உள்ளிட்டோர் ஸ்தலத்திற்கு சென்று நிலைமைகளை அவதானித்தனர்.
கஜிமா தோட்டத்தில் தீப்பரவலினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மோதர தோட்ட தொடர்மாடி குடியிருப்பின் சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
“தீப்பரவலின் பின்னர் 100 பேர்வரை தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கான மூன்றுவேளை உணவு மற்றும் உடுதுணிகள் அரசாங்கத்தினாலும் தொண்டு நிறுவனங்களாலும் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு நிரந்தர வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் கொழும்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் இடம்பெறுகின்றன” என்றும் கிராம சேவகர் குறிப்பிட்டார்.
குறித்த கஜிமா தோட்டத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் அன்றாடம் கூலித் தொழில் மூலம் தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்பவர்கள்.
இந்நிலையில் இந்த தீ விபத்துச் சம்பவம் தம்மை மேலும் வறுமைக்குள் தள்ளிவிடுமோ என்று அச்சப்படுகின்றார் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹம்மது பயாஸ். “ 5 வருடங்களாக இதே இடத்தில் வசிக்கிறேன். பதின்ம வயது ஆண் பிள்ளை பாடசாலை செல்கிறான், திருமண வயதில் பெண் பிள்ளையொருவள் வீட்டிலிருக்கிறாள். நான் வார இறுதி நாட்களில் விகாரமகாதேவி பூங்காவில் முறுக்கு விற்பனை செய்து குடும்பத்தை நடாத்தி வருகிறேன். முன்னர் மருதானை பகுதியில் கூலி வீட்டில் வாழ்ந்து வந்தேன். இப்போது இருக்க வீடின்றி நடுத்தெருவுக்கு வந்துள்ளேன்” என்றார்.
சத்தியா தேவி பொரளை பகுதியில் பதிவை கொண்டவர். 2 மாதங்களாக அங்கு வசித்தாலும் அவருக்கும் சொந்த வீடின்மையால் இப்பகுதியில் குடியேற நேர்ந்ததாக கூறினார்.நாஹிதா கார்த்திக்கின் தாயை பராமரிப்பதற்காக கஜிமாவத்தை பகுதியில் குடியிருக்கிறார், நாஹிதா அங்கு 5 வருடங்களாக வசிப்பவர். இவர்களது குடிசை, உடமைகளும் தீயில் நாசமாகிவிட்டன.
நாம் அங்கு சென்றபோது, சன சமூக நிலையத்தைச் சுற்றி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்குள்ள முச்சக்கர வண்டியொன்றில் அமர்ந்தபடி அலெக்ஸ் யொஹான் (தரம் 6 இல் கற்பவன்) மற்றும் சிதான் (தரம் 9 இல் கற்பவன்) மற்றும் சில சிறுவர்களும் கதைத்துக்கொண்டிருந்தனர்.
நீண்ட நாட்களாக பாடசாலை விடுமுறையில் இருப்பதால் கல்வி கற்கும் வாய்ப்பினை இழப்பதாக கூறினர். “கையடக்கத் தொலைபேசியில் படிப்பிக்கின்றனர். எமக்கு அவ்வசதி குறைவாக இருப்பதால் எம்மால் பாடங்களை தொடர முடியவில்லை, அடுத்த மாதம் பாடசாலை ஆரம்பித்துவிடும். ஆனால், எமது பாடசாலை சீருடைகள், புத்தகம், புத்தகப்பைகள் எல்லாம் எரிந்துவிட்டன” என்று அங்கிருந்த எல்லா சிறுவர்களும் ஒரே தொனியில் கூறினர்.
பாதிக்கப்பட்டவர்களில் கணிசமான குடும்பங்கள் மோதர தோட்ட தொடர்மாடி குடியிருப்பின் சனசமூக நிலையத்தில் தங்கியிருக்கின்றன. மேலும் சில குடும்பங்கள் தமது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டன.
தலைநகர் கொழும்பைப் பொறுத்தவரை இவ்வாறான சேரிப்புறங்கள், குடிசைகளுக்குப் பஞ்சமில்லை. தெற்காசியாவின் உயர்ந்த கோபுரமான தாமரைக் கோபுரம் உள்ள அதே கொழும்பில்தான் இன்னமும் இவ்வாறான குடிசைகளும் உள்ளன. கொழும்பில் 230 மீற்றர் உயரமான 407 அதிசொகுசு வீடுகளைக் கொண்ட அல்டயார் மாடிக் குடியிருப்பு திறந்து வைக்கப்பட்டு மூன்று நாட்களிலேயே கஜிமாவத்தையில் வசித்துவந்த இந்த ஏழைகளின் தகரக் குடிசைகள் எரிந்து சாம்பராகியுள்ளன. இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கும் சமத்துவமின்மைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்போதுதான் இவ்வாறான தீ விபத்துச் சம்பவங்களையும் ஒரே இரவில் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வரும் அவலங்களையும் தடுத்து நிறுத்த முடியும்.
கஜிமாவத்தையில் எரிந்து தரைமட்டமாகிப் போன பகுதியில் நின்று பார்த்தால் நேரே தெரிவதும் இவ்வாறான வீடற்ற மக்களுக்காக அரசாங்கத்தினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட மாடிக்குடியிருப்புகள்தான். அவ்வாறான ஒரு வீட்டுத் திட்டத்தில் தமக்கும் ஒரு கல் வீடு கிடைக்க வேண்டும் என்பதே இந்தக் குடும்பங்களின் வேணவா.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீண்டும் தற்காலிக குடிசைகளில் வாழவைப்பதைவிட அவர்களை பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான வீடுகளில் குடியேற்றுவது அரசாங்கத்தினதும் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். – Vidivelli