லத்தீப் பாரூக்
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் குறிப்பிடப்படும் விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதுடன் தவறாக வழிநடாத்தும் வகையிலும் அமைந்துள்ளன. இவ்வறிக்கை, உலகளாவிய முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரத்தை கொண்டு செல்லும் போர் வெறியர்களான அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பா – இஸ்ரேல், இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான பிஜேபியினரின் கண்ணோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அவர்களது முஸ்லிம்கள் மீதான அழிச்சாட்டியங்களை நியாயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை ஒருவர் புரிந்துகொள்வதாயின் இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்டு முதன் முதலாக முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் 2009 மே மாதத்தில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வரிந்து கட்டிக்கொண்டு முன்னிற்கும் எதிரிகளான இஸ்ரேலுக்கும், இந்தியாவின் பிஜேபிக்கும் நாட்டைத் திறந்துகொடுத்த இந்த அரசு. அதன் பின்னரே சிங்கள மக்களது மனங்களில் முஸ்லிம்கள் பற்றிய எதிர்ப்பை விதைக்கும் நாசகார நச்சுப் பிரச்சாரங்கள் வெளிவர ஆரம்பித்தது.
இஸ்லாமோபோபியா – இஸ்லாமிய விரோத – வியாபாரத்தின் முக்கிய தூண்களான இஸ்ரேல், பிஜேபி போன்ற சக்திகள் இனவாதத்தின் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையினை குலைத்து சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் மோசமான தீய நிகழ்ச்சி நிரலுடன் இங்கு வந்திருக்கிறார்களே ஒழிய இலங்கை மீது அவர்களுக்கு இருக்கும் அன்பினால் அல்ல.
இஸ்ரேலும் பிஜேபியும் இங்கு வந்ததுமே சிங்கள அரசியல்வாதிகள், வியாபாரிகள், தொழில்வாண்மையாளர்கள், பிக்குகள் என பல இனவாத சக்திகளைப் பயன்படுத்தி முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரங்கள் ஆரம்பிக்கப்படும் என நான் எனது பல கட்டுரைகளிலும் ஆரூடம் கூறியிருந்தேன்.
முஸ்லிம் விரோத மேற்கத்தய ஊடகங்களைப் பற்றிய எதுவித கவனமும் இன்றி அவற்றைக் கண்மூடித்தனமாக பின்பற்றும் உள்நாட்டு ஊடகங்களையே பெரும்பாலான சிங்கள மக்கள் பார்வையிடுகின்றனர். இதுவே சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பிவிட்டது.
இன்று, இந்த நாசகாரப் பிரசாரங்கள் வெற்றிகண்டுவிட்டன. இஸ்லாமும் முஸ்லிம்களும் ஓர் அச்சுறுத்தல் என சிங்கள மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். சமூகங்கள் பிளவு பட்டுவிட்டன. நாடும், மக்களும் கொந்தளித்துக் கொண்டும் அல்லல்பட்டுக்கொண்டும் இருக்க அரசியல்வாதிகள் இன்னும் தேசப்பற்று என்று முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இன்று உலகம் பூராகவும் நடந்தேறிக் கொண்டிருக்கும் இஸ்லாமோபோபியா – இஸ்லாமிய வெறுப்பு – மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான மேற்கத்தய சதித்திட்டங்களை புரிந்து கொள்வதாயின் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு காலனித்துவ சக்திகள் மத்திய கிழக்கில் செய்த சதிவேலைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் இந்த சக்திகளின் வருகையுடன் முஸ்லிம்களுக்கு எதிரான விரோதப் போக்குகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக பலர் சந்தேகிக்கின்றனர். இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்த சிங்கள மக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தது.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஒட்டு மொத்த மத்திய கிழக்கு மற்றும் வடஆபிரிக்க நாடுகள் துருக்கிய உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்தன. 1914 ஜூலை 28 தொடங்கி 1918 நவம்பர் 11 வரை நீடித்த முதலாம் உலகப் போரின் போது உஸ்மானிய சம்ராஜ்ஜியம் தோற்கடிக்கப்பட்டதுடன் மத்திய கிழக்கு மற்றும் வடஆபிரிக்க நாடுகள் பிரித்தானிய -– பிரான்சு ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டன.
இந்த இரு காலனித்துவ சக்திகளும் யூத சியோனிச சக்திகளுடன் இணைந்து இரகசிய (Sykes-Picot Agreement on 19 May 1916) ஒப்பந்தம் ஒன்றைச் செய்து ஒருமித்த மத்திய கிழக்கு நாடுகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக பங்குபிரித்துக்கொண்டனர்.
பலஸ்தீன், ஜோர்தான், எகிப்து, ஈராக், சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட மத்திய கிழக்கின் பெரும்பான்மை நாடுகள் பிரித்தானிய ஆளுகையின் கீழும், வட ஆபிரிக்காவின் பெரும்பான்மையான பகுதிகள் மற்றும் லெபனான் போன்றன பிரான்சின் ஆளுகையின் கீழும் கொண்டுவரப்பட்டன. லிபியா, டியூனிசியா, மொரோக்கோ, அல்ஜீரியா போன்ற நாடுகளுடன் சேர்த்து முழு ஆபிரிக்காவிலும் இருப்பது போல முஸ்லிம், முஸ்லிமல்லாத நாடுகளும் இதனுள் அடங்கியிருந்தன.
பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து மதச்சார்பற்ற ஊழல் நிறைந்த தமக்கு அடிபணிந்து நடக்கும் கைப்பொம்மைகளை அவர்கள் புதிதாக உருவாக்கிய பிராந்தியங்களின் ஆட்சியாளர்களாக நியமித்தனர். இஸ்லாம் மீண்டுமொரு அரசியல் சக்தியாக உருவெடுக்காது பார்த்துக்கொள்வதே அவர்களது பிரதான பணியாக இருந்தது. இந்நிலை நூற்றாண்டுகள் கடந்து இன்றும் தொடர்கிறது.
அதே நேரத்தில், பலஸ்தீன மண்ணில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை வெளியேற்றிவிட்டு யூதர்களுக்கான தனிநாடு ஒன்றை நிறுவ பிரித்தானியா, பிரான்சு மற்றும் சியோனிச யூத சக்திகள் விரும்பின. இதற்காக எந்தவித தார்மீக, சட்ட விதிமுறைகளை மீறவும் அவர்கள் தயாராக இருந்தனர்.
இந்த சதித்திட்டத்தின் ஓர் அங்கமாக 1917 இல் பலஸ்தீன் பிரித்தானிய ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு யூத குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கெதிராக பலஸ்தீன் கிளர்ந்தெழுந்த போது சியோனிச யூதர்கள் மனாசெம் பெகின், இட்சாக் ஸாமிர், ஏரியல் ஷெரோன் போன்றோர் தலைமைதாங்கி வழிநடாத்திய ஹகானா, ஸ்டேர்ன், இரகன், வாய் லூமி போன்ற பயங்கரவாத ஆயுதக்குழுக்களை அமைத்து பலஸ்தீனியர்களை கொன்றுகுவித்தனர்.
அவர்கள் மத்திய கிழக்கின் பயங்கரவாதத்தின் ”காட் பாதர்”களாகப் பார்க்கப்பட்டனர். பலஸ்தீனியர்களை அருகில் இருக்கும் நாடுகளுக்கு அபயம் தேடி ஓடவைத்தனர். 1947 இல் இஸ்ரேல் என்ற நாட்டை மத்திய கிழக்கின் சரி மத்தியில் துவக்குகின்றனர். இதனால் மத்திய கிழக்கை எப்போதும் ஒரு கொந்தளிப்பு நிலையில் வைத்திருக்கவும் பிரித்தானிய – பிரான்சு காலனித்துவ சக்திகளுக்கு மத்திய கிழக்கின் சொத்துக்களை கொள்ளையடிக்கவும் முடியுமாயிருந்தது.
இஸ்ரேலை உருவாக்குவதற்கு பிரித்தானிய – அரபு ஆட்சியாளர்களின் ஆதரவை திரட்ட ஆரம்பித்த போது மத்திய அரேபியாவின் ஒரு சிறிய பழங்குடிகளின் ஆட்சியாளராக இருந்த அப்துல் அஸீஸ் இதற்கு தீவிரமாக ஒத்துழைக்கும் ஒருவராக மாறினார். புனித பிரதேசங்களான மக்கா, மதீனா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஹிஜாஸ் பிராந்தியத்தின் உஸ்மானிய பேரரசின் ஆளுநராக இருந்த ஷரீப் ஹுஸைன் இதனை தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்தார். பிரித்தானியாவும் சியோனிச சக்திகளும் சேர்ந்து அப்துல் அஸீஸுக்கு பணம், ஆயுதங்களை வழங்கி அவரை எதிர்க்கச் செய்து ஷரீப் ஹுஸைனை பதவி கவிழ்த்தன.
இந்த சம்பவத்துடன் முஸ்லிம்கள் அணிதிரளும் புள்ளியாக இருந்த கிலாபத் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் யூத சக்திகளின் பலமும் இப்பிராந்தியத்தில் நிறுவப்பட்டது. அப்போதிருந்து அப்துல் அஸீஸின் வஹாபிச போக்கும் – இஸ்லாத்தின் திரிபுபடுத்தப்பட்ட வடிவம் – தடையின்றி நகர ஆரம்பித்தது.
இச்சதித்திட்டத்தின் தொடர்ச்சியாக பிரிட்டன், பிரான்ஸ் இவர்களுடன் சேர்ந்து இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீய, அச்சுறுத்தும் ஒன்றாக காட்ட ஆரம்பித்தன. இந்த வகையில், ஹஸனுல் பன்னா, முஹம்மத் குத்ப், ஆமினா குத்ப், யூஸுப் கர்ளாவி, மௌலானா மெளதூதி, ஷெய்க் யாஸீன் போன்ற முஸ்லிம் புலமையாளர்களை அடிப்படைவாதிகளாகவும், வன்முறைகளை தூண்டுபவர்களாகவும் காட்ட ஆரம்பித்தனர்.
இஸ்லாம் ஒரு சக்தியாக எழுச்சியடைவதை தடுக்கும் அத்தனை முயற்சிகளையும் அவர்கள் எடுத்தனர்.
உதாரணமாக, ஆயதுல்லாஹ் கொமைனீ மேற்கு சார்பு கொள்கை கொண்ட “ஷாஹ்“ வினை பதவி கவிழ்த்து ஈரான் இஸ்லாமியக் குடியரசினைப் பிரகடனப்படுத்தியபோது அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல், சஊதி அரேபியா இவர்களுடன் வளைகுடாவினைச் சேர்ந்த ஷெய்க்மார்களை இணைத்துக்கொண்டு சதாம் ஹுஸைனை முன்னிலைப்படுத்தி வளைகுடாப் போரையும் முடுக்கிவிட்டனர். இந்தப் போரினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கிய, ஈரானிய வீரர்கள் உயிரிழந்ததுடன் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான சேதங்களும் ஏற்பட்டன. இப் போரினால் அமெரிக்க- – ஐரோப்பிய ஆயுத உற்பத்தியாளர்கள் செழித்து வளர்ந்தனர்.
இந்த யுத்தத்தை அடுத்து, பக்தாதுக்கான அமெரிக்க தூதுவர் ஏப்ரில் காஸ்பியின் தந்திரமான தூண்டுதலால் சதாம் ஹுஸைன் குவைத்தை ஆக்கிரமித்தார். இதனால் குவைத்துடனான முறுகல் துவங்கியது. குவைத்தை விடுவிக்கும் போர்வையில் அமெரிக்க தலைமையிலான ஐரோப்பிய படைகள் ஈராக்கை ஆக்கிரமித்ததுடன் கணிசமான நாசவேலைகளை அங்கே நிகழ்த்தி பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்களையும் கொன்று குவித்தனர்.
1991 டிசம்பர் மாதம் அல்ஜீரியாவில் முதன் முதலாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் எப் ஐ எஸ் – அரசியலுடன் இஸ்லாமிய நெறிமுறைகள் பிணைந்ததாக அமைக்கப்பட்ட கட்சி – அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியது. இருப்பினும், பிரான்ஸ், அறபு கொடுங்கோலர்களின் உதவியுடன் மிகவும் பிரபல்யமான இவ்வமைப்பு சிதைக்கப்பட்டதுடன் 180,000 வரையான முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். அங்கு ஒரு மதச்சார்பற்ற இராணுவ ஆட்சியும் நிறுவப்பட்டது.
ஈரான் தனது அணுத்திட்டங்களை மேம்படுத்த முனையும் போது அமெரிக்கா தலைமையிலான யுத்த வெறியர்கள் அதன் மீது தடைகளை விதிக்க ஆரம்பித்தனர். ஆனால் 300 ற்கும் அதிகமான அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக குறிப்பிடப்படும் இஸ்ரேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இதனிடையே அமெரிக்க எப் பி ஐ யும் இஸ்ரேலின் மொசாதும் சேர்ந்து செய்த உள் வேலையாக வர்ணிக்கப்படும் நியூயோக்கில் இடம்பெற்ற 9/11 தாக்குதல் அரங்கேறுகிறது. முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பூகோள பிரசாரத்தை ஆரம்பிப்பதற்கான துவக்கமாக அது பயன்படுத்தப்பட்டது.
இத்தாக்குதலைச் செய்தது அல்கைதா அமைப்பு என 24 மணி நேரத்திற்குள்ளேயே அமெரிக்கா குற்றம் சாட்டியதுடன் ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழைகளை பொழிந்து ஏலவே நசுங்கிப்போயிருந்த ஒரு நாட்டை தரிசு நிலமாக மாற்றியது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, எதுவித காரணமும் இன்றி ஒரு நாடு அழிக்கப்பட்டபோது சுதந்திரத்தின் காவலர்கள், மனித உரிமை நாயகர்கள் என தம்மை அழைத்துக் கொண்டவர்களுக்கு இது பற்றி எந்த அக்கறையும் இருக்கவில்லை.
இப்படியாக அமெரிக்க தலைமையிலான மேற்குலகு சோவியத் யூனியனுக்குப் பதிலாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பிரதியீடு செய்ததுடன் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான உலகளாவிய முஸ்லிம்கள் மீதான வியாபாரமான இஸ்லாமோபோபியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரங்களை கட்டவிழ்த்தும் விட்டது.
இதைத் தொடர்ந்து பாரிய அழிவு தரும் ஆயுதங்களை சதாம் ஹுஸைன் உற்பத்தி செய்வதாக வேண்டுமென்று குற்றம்சாட்டி ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு இடம்பெறுகிறது. சமாதானத்தையும் அமைதியையும் அனுபவித்து வந்த மக்களின் வாழ்வியலை குலைத்து அபிவிருத்தியடைந்திருந்த ஒரு நாட்டில் பெரும் நாசங்களை விளைவித்தது இவ்வாக்கிரமிப்பு. இலட்சக்கணக்கான ஈராக்கியர்கள் முகாம்களுக்குள் அகதிகளாக தள்ளப்பட்டனர். இன்னும் அவர்களது வாழ்வு அங்கேயே கழிகிறது.
கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் 65 பில்லியன் பெறுமதியான தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
அறபு வசந்தத்தின் போது முஹம்மத் முர்ஸி தலைமையிலான இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் ஆட்சியமைக்க எகிப்தியர்கள் வாக்களித்தனர். 60 ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற நீதியானதும் நியாயமானதுமான ஒரு தேர்தலாக அது அமைந்தது. சவூதி, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒத்துழைப்புடன் இவ்வாட்சி கவிழ்க்கப்பட்டு அப்துல் பத்தாஹ் அல் சீசியின் கொடுங்கோல் ஆட்சி கொண்டுவரப்பட்டது. சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் குவைத்தும் இணைந்து 11 பில்லியன் டொலர்களை செலவு செய்து போலியான உணவு, எரிபொருள் தட்டுப்பாட்டை இவ்வெழுச்சியில் உண்டுபண்ணியதுடன் இதனை காரணம் காட்டி மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி முஹம்மத் முர்சியை பதவி கவிழ்க்கவும் செய்தன.
இதனிடையே அமெரிக்கா – ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து சிரியாவையும், லிபியாவையும் – இரண்டும் நன்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள்- கொலைக்களங்களாக மாற்றியது மட்டுமல்லாது அவற்றின் எண்ணெய் வளத்தினையும் பணம் மற்றும் தங்கத்தினை கொள்ளையிட்டன.
டொனால்ட் ட்ரம்ப் ஜெரூஸலத்தினை இஸ்ரேலிடம் தாரைவார்த்துக் கொடுத்ததன் பின்னணியில் மறைகரமாக தொழிற்பட்டது சவூதி அரேபியாவாகும். அமெரிக்க -– ஐரோப்பிய, இஸ்ரேலிய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சவூதி அரேபியாவும் அபூதாபியும் இணைந்து யெமன் நாட்டின் மீது குண்டுகளை வீசி 100,000 யெமனியர்களை கொன்று குவித்தன. அறபு உலகிலேயே வறிய நாடாக இருந்த யெமன் நாட்டை உலகிலேயே மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகள் மிக்க இடமாக மாற்றினார்கள்.
அதே நேரம், அமெரிக்க – ஐரோப்பிய, இஸ்ரேலிய யுத்த வெறியர்கள் இஸ்லாமோபோபியாவை வளர்ப்பதற்கு நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட பல பில்லியன் டொலர்கள் செலவு செய்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீய சக்திகளாக காண்பித்து அவர்கள் மேற்கொண்ட இந்த யுத்தங்களை நியாயப்படுத்தும் பிரசாரங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.
இந்த பிரசாரத்தில் சுவிசேஷ கிறிஸ்தவர்கள், சியோனிச யூதர்கள் மற்றும் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். போன்றன அமெரிக்க-இஸ்ரேலிய, சவூதி மற்றும் இந்தியாவுடன் ஒன்றாக இணைந்து உலகளவில் முஸ்லிம்களை துன்புறுத்தத் தொடங்கினர்.
பிராந்தியத்தின் பலத்தைத் தக்கவைத்துக் கொள்ள நடந்துவரும் போராட்டத்தின் மூலோபாய முக்கியத்துவம் கருதி 2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு சூழலில் இந்த பிரசாரங்கள் இலங்கைக்குள் நுழைய ஆரம்பித்தன.
இலங்கையில் இந்த சக்திகளின் வருகையுடன் முஸ்லிம்களுக்கு எதிரான விரோதப் போக்குகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக பலர் சந்தேகிக்கின்றனர். இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்த சிங்கள மக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தது.
உள்ளூர் ஊடகங்கள் இந்த உண்மைகளை எப்போதாவது சுட்டிக்காட்டியுள்ளனவா? பகரமாக, அவை இஸ்லாமிய விரோத சக்திகளின் கருவிகளாக மாறின. இஸ்லாத்தை தீய சக்திகளாக காட்டவும் முஸ்லிம்களை வன்முறையுடன் இணைக்கவும் கிடைத்த எந்த வாய்ப்பையும் அவை தவறவிடவில்லை.
இவற்றின் விளைவுகளையே இன்று நாம் நாட்டில் கண்டுகொண்டிருக்கின்றோம்.
இந்தப் பின்னணியில்தான் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஒருவர் நோக்க வேண்டும்.- Vidivelli