(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாட்டின் ஏனைய சமூகத்தினரிடையே, பரவலாகப் பேசப்படும் இஸ்லாமிய அமைப்புக்களில் ஒன்றே இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி. அதன் முன்னைய நாள் தலைவரான உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் என பரவலாக அறியப்படும் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே கடந்த 2019 ஆகஸ்ட் 25 ஆம் திகதி சி.சி.டி எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அவரை கைது செய்து 32 நாட்களின் பின்னர் விடுவித்திருந்தனர். 4/21 அன்று கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை, அடிப்படைவாத குழுக்களுக்கு இலங்கைக்குள் மீள பயங்கரவாதத்தை உருவாக்க, அதனைக் கட்டியெழுப்ப உதவியமை மற்றும் இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்க நடவடிக்கை எடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களே அன்று சுமத்தப்பட்டிருந்தன.
எனினும் இம்முறை கைது செய்யப்பட்டுள்ளமைக்கு பொலிஸ் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறிய காரணம், இலங்கையில் வஹாப்வாதம், சலபி கொள்கை மற்றும் ஜிஹாத் சிந்தனையை விதைத்தார் என்பதாகும். இதற்காக இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியினால் வெளியிடப்பட்ட அல் ஹசனாத் எனும் சஞ்சிகை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முதல் தடவை கைது செய்யப்பட்டு சி.சி.டி.யினர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை விசாரித்த போது, அவ்விசாரணைகளில் திருப்தி இல்லாமல், அவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அங்கும் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னரேயே, ரி.ஐ.டி.யினரின் கோரிக்கைக்கு அமையவே அவர் தடுப்புக் காவலில் இருந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி விடுவிக்கப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையில், அதே ரி.ஐ.டி.யினரால் தற்போது அவர் 2 ஆவது தடவையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது சம்பவம்:
கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தெமட்டகொடையில் இருந்தபோது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் இரு அதிகாரிகள் அவரை சென்று சந்தித்துள்ளனர். அதன் பின்னர் அவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ள அவர்கள், அன்றைய தினம் ஜும் ஆ தொழுகைக்கு செல்லவும் அவரை அனுமதித்துள்ளனர். இவ்வாறான நிலையிலேயே அன்றைய தினம் இரவு 7.00 மணியளவில் அவரைக் கைது செய்வதாக அவரது வீட்டாருக்கு தொலைபேசி ஊடாக ரி.ஐ.டி.யினர் அறிவித்துள்ளனர். எனினும் வீட்டாருக்கு கைதுக்கான காரணம் கூறப்படவில்லை. எனினும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன, ஹஜ்ஜுல் அக்பர் வஹாப்வாதம், சலபி கொள்கை மற்றும் ஜிஹாத் சிந்தனையை தூண்டியமைக்காக கைது செய்யப்பட்டதாக அறிவித்திருந்தார்.
இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி அதிருப்தி:
இந்த கைது தொடர்பில் விஷேட அறிக்கையொன்றினை விடுத்த இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது கவலையும் அதிருப்தியும் அளிப்பதாக தெரிவித்திருந்தது. அத்துடன் அவர் முதல் முறையாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போதே, விசாரிக்கப்பட்ட விடயங்களை மையப்படுத்தியே 2 ஆவது கைதும் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
சட்ட ஆலோசனை:
இந்நிலையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் விவகாரம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருவதாக இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி அமைப்பின் முக்கியஸ்தர் சட்டத்தரணி பாரிஸ் சாலி கூறினார். அவரது கைதும், அதற்காக கூறப்படும் காரணங்களும் அதிர்ச்சியளிக்கும் நிலையில், இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி அமைப்பு எந்த நிலையிலும் நாட்டின் சட்டத்தை மீறும் விதமாக செயற்பட தூண்டிய அமைப்பல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2 ஆவது கைதின் பின்னணி:
உண்மையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் 2 ஆவது தடவையாக கைது செய்யப்படுவதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் ஒரு காரணமாகும்.
1994 ஆம் ஆண்டு முதல் 2018 வரை இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் தலைவராக உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் செயற்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் ஜமா அத்தே இஸ்லாமி சிந்தனை, இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் பிரத்தியேகமானதும் விரிவானதுமான விடயங்களை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், பரிந்துரைகள் எனும் பகுதியில், குற்றவியல் வழக்கு விசாரணை எனும் தலைப்பின் கீழ் 3 ஆம் பரிந்துரையாக இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்க சதி செய்தமை தொடர்பில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் சட்ட மா அதிபர் ஆராய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு அறிக்கையின் 485 ஆம் பக்கத்தில் குறித்த பரிந்துரை உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் 2 ஆவது தடவையாக கைதாவதை ஊக்குவித்தது எனலாம்.
இதனைவிட ஆணைக்குழுவின் அறிக்கையில் இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் குறித்த மீள விசாரணை ஒன்றினை ஊக்குவித்த காரணியாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் சஞ்சிகையான அல் ஹசனாத் தொடர்பிலும் ஆணைக்குழு அறிக்கையில் பல்வேறு பதிவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக அச்சஞ்சிகை ஊடாக அடிப்படைவாதம், ஜிஹாத், இஸ்லாமிய இராச்சியம் போன்ற விடயங்கள் தூண்டப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.
1990 அல் ஹசனாத் இதழொன்றில், ஜிஹாத் இன்றி இஸ்லாமிய அரசு உருவாக முடியாது என்ற கருத்தும், 1999 அல் ஹசனாத் இதழில் சிலை வணக்கத்தை விமர்சித்து சிலைகளை தகர்க்க வேண்டும் என்ற எண்ணக்கருவும் அடங்கிய ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறுகின்றது. இதனைவிட, 2001 பெப்ரவரி மாத அல் ஹசனாத் இதழில், இஸ்லாத்துக்காக உயிர் தியாகம் செய்வோருக்கு சுவர்க்கத்தில் 72 கன்னியர்கள் கிடைப்பர் எனும் விடயமும், மற்றொரு இதழொன்றில் அஷ்ஷெய்க் யூசுப் அல் கர்ளாவியின் கருத்தான, தற்கொடைத் தாக்குதல்கள் ஆகுமானதாகும் என்ற விடயமும் அல் ஹசனாத் சஞ்சிகை ஊடாக வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைவிட உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மாதம்பை இஸ்லாஹியா கல்லூரியில் சேவையாற்றியபோது அங்கு இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை அறிந்திருந்ததாகவும், செயலமர்வொன்றில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும்போது இஸ்லாமிய அரசை உருவாக்குவது எப்படி எனும் கேள்விக்கு பதிலளித்துள்ளதாகவும் கூறும் ஆணைக்குழு, இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் இலக்கு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்குவதே என்றும் கூறுகின்றது.
இந்நிலையிலேயே, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால், அல் ஹசனாத் சஞ்சிகை ஊடாக முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள், ஏனைய விடயங்களை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்டு விசாரித்து வருவதாக பொலிஸ் தகவல்கள் கூறின.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை தடுத்து வைத்து விசாரிக்க, 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவில், பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கையெழுத்திட்டுள்ள நிலையில், சி.ஐ.டி., ரி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், ரி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன டி அல்விஸின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.- Vidivelli