யார் பொறுப்பு?

0 1,331
  • எம்.எம்.ஏ.ஸமட்

மனித நடத்தையின் நன்மை, தீமைகளை நிர்ணயிப்பது விழுமியமாகும். மனிதனுக்குள்ள  சுதந்திரம் காரணமாக அவனுடைய செயற்பாடுகள் விழுமியத்தன்மை பெறுகின்றன. விழுமியங்கள் மனித வாழ்வை நெறிப்படுத்தி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஆனால், வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் விழுமிய செயற்பாடுகள் சமகாலத்தில் மக்களிடையே குறிப்பாக, நாகரிக போதைக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர், யுவதிகளிடையே இல்லாமல் போய்விட்டது. அதனால், பலரின் வாழ்க்கைப் பயணங்கள் திசைமாறி ஆபத்துக்கள் நிறைந்ததான அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

மனிதன் வாழ்வில் முழுமைபெற வாழ்க்கை பற்றி சரியான மதிப்பீடுகளைக் கொண்டிருக்க வேண்டும். தனது வாழ்வோடு தொடர்புடைய யதார்த்த நிகழ்வுகளில் அறிவியல், ஆன்மீகம், ஒழுக்கம் ஆகிய நெறிகளில் வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். வாழ்வு பற்றிய இலட்சியங்கள்தான் மனித சமூகத்திற்கு வளர்ச்சியையும், நிலையான தன்மையையும் கொடுக்கும். அந்த இலட்சியங்களை அடைந்துகொள்வதற்கான விழுமியங்கள் வாழ்வில் சரியான முறையில் கடைப்பிடிக்கப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது. அவ்வாறு விழுமியங்கள் கடைபிடிக்கப்படாத நிலையில் அவை ஆபத்துக்களை விலையாக அடைந்துகொள்ளச் செய்துவிடுவதை அன்றாடம் நடந்தேறும் நிகழ்வுகள் மூலம் அவதானிக்க முடிகிறது.

19ஆம் நூற்றாண்டின் பின்னர் உலகில் ஏற்பட்ட சமூக, விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியானது நாகரிகமுள்ள மனித வாழ்வின் விழுமியங்களை மாசுபடுத்தியதாக அமைந்துவிட்டது என்று கூறுவதில் தவறேதுமிருக்காது. நாகரிகம் என்ற மாயைக்குள் மனிதகுலம் புதைந்து, ஒழுக்கத்தையும் ஆன்மீகத்தையும் மறந்து, மனித வாழ்வுக்கும் மிருக வாழ்வுக்கும் வித்தியாசமில்லை என்றதொரு நிலையை ஏற்படுத்திக்கொண்டதன் விளைவாக, அஞ்சி ஒதுங்கக்கூடிய, கேவலமாகச் சித்திரிக்கப்படக்கூடிய பல விளைவுகளுக்கு மனித சமுதாயம் ஆளாகிக்கொண்டிருக்கிறது.

அநாகரிகத்தின் ஈர்ப்பும் ஆபத்தும்

மதங்களும் மதத்தலைவர்களும் போதிக்கும் ஒழுக்கவிழுமியமிக்க நல்வாழ்வுக்கான போதனைகளும், வழிகாட்டல்களும் பின்பற்றப்படாது, அவற்றினை உதாசீனம் செய்து, தமது மனவெழுச்சிகளுக்கு  அடிமையாகி நாகரிகம் என்ற போர்வையில்  அநாகரிகத்தினால் ஈர்க்கப்பட்டு அதற்குள் சிக்கிச் சீரழிந்ததன் விளைவாக ஆபத்துக்கள் நிறைந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மானிட வர்க்கம் தள்ளப்பட்டுள்ளது.

புறக்கணிக்கத்தக்கதொரு கூட்டத்ததைத் தவிர மதங்களை ஏற்றுக்கொள்பவர்கள், அந்த மதங்கள் வகுத்த நேரிய வழியில் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைத் தவிர்த்து,  ஒழுக்க விழுமியமற்ற முறைமைகளை நாகரிகமென்றெண்ணி அவற்றையே கடைப்பிடித்து வாழ முற்பட்டதன் காரணமாக, குறிப்பாக இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல், எயிட்ஸ், ஹர்பிஸ், கொனேரியா, சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்களுக்கு ஆளாதல், ஆளுமை,  உளக் கோளாறுகள் போன்ற உளரீதியான பிரச்சினைகளுக்கு உட்படுதல், வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்களை முகங்கொடுக்கச் செய்துள்ளது.

மதங்கள் அங்கீகரிக்காத அவை தடுத்த, பாவங்கள் எனப் பிரகடனப்படுத்திய விபசாரத்தையும், ஒருபால் பாலியல் தொடர்புகளையும் ஒருசில உலக நாடுகள் அங்கீகரித்ததன் காரணமாக, இந்நாடுகளில் பாலியல் தொடர்பான நோய்கள் குறிப்பாக எயிட்ஸ் என்ற ஆட்கொல்லி நோய்த்தொற்று  ஆபத்து அதிகரித்துக் காணப்படுவதையும் உலகளாவிய புள்ளி விபரங்களின் ஊடாக அறிய முடிகிறது. உலகில் 77 நாடுகளின் சட்டங்கள் இந்த ஒருபால் உறவுக்குத் தடை விதித்துள்ளதுடன் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட  22 நாடுகளின் சட்டங்கள் இதற்கு அங்கீகாரம் வழங்கியிருக்கின்றன. இந்த 22 நாடுகளிலும் காணப்படும் பாலியல் நோய்களுக்கு பிரதான காரணமாக ஒருபால் உறவு காணப்படுவதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகையற்ற வரப்பிரசாதங்களை வழங்குவதற்கு ஒருபால் உறவை அங்கீகரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனையாக விதித்ததையும் அதனால், விழுமியங்களோடு வாழ விரும்பும் மக்களும் மதத்தலைவர்களும் அதற்கெதிராக கொதித்தெழுந்ததையும் அவற்றின் காரணமாக அரசியலில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதையும் இங்கு நினைவுகூரத்தக்க விடயங்களாகக் கொள்ளலாம்.

மனித உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டுமென்ற போர்வையில் உலகநாடுகள் சிலவற்றில் அநாகரிகத்துக்கும் அசிங்கத்திற்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திரமானது இத்தகைய ஆபத்துக்களினால் பெறுமதிமிக்க மனித வாழ்நாட்களைச் சுருக்கிக்கொண்டுவிட்டது என்பதே நிதர்சனமாகும்.

அசிங்கமான சுதந்திரங்களை சுதந்திரமாக அனுபவிக்க முற்படுவோர் ஆபத்துக்களை சுதந்திரமாக,  சுயமாகவே வரவழைத்துக் கொள்கிறார்கள். குறிப்பாக தகாத பாலியல் உறவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் அல்லது திரைமறைவில் மேற்கொள்ளப்படுகின்ற ஒழுக்க விழுமியமற்ற தகாத பாலியல் தொடர்புகள் கொனரியா, சிபிலிசு, பாலுறுப்பு உண்ணிகள், ஹர்பீஸ் சிம்பிலெக்ஸ், இரய்கோ மொனாரிஸ், எயிட்ஸ் போன்ற பாலியல் தொடர்பான நோய்  ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. இவை  வாழ்வின் இலட்சியங்களை சிதைத்து அவமானத்தோடு வாழ்நாட்களை தொடரச் செய்கிறது. இறை தண்டனைக்கும் ஆளாக்குகிறது. விழுமியங்கள் அசிங்கப்படுத்தப்படுகின்றபோது இத்தகைய ஆபத்துக்கள் தொடர்கதையாகத் தொடர்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பாலியல் தொடர்பான நோய்களில் மனித ஆயுளை ஆட்டம் காணச் செய்யும் எச்.ஐ.வி. தொற்று அல்லது எயிட்ஸ் என்ற உயிர்கொல்லிப் பாலியல் தொற்றுநோயானது உலகையே இன்று அதிர்ச்சிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. ஆரோக்கியமுள்ள சமூகக் கட்டமைப்பை முடமாக்கிக்கொண்டிருக்கிறது.

2017ஆம் ஆண்டின் சர்வதேச புள்ளிவிபரங்களின்  36.9 மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் இந்நோய்த்தொற்றுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அத்துடன் அது  உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் வயது வந்த இளைஞர், யுவதிகள், சிறுவர்களுமே இந்நோய்த் தொற்றுக்கு அதிகளவில்  ஆளாகியுள்ளனர்.

பிறழ்வுச் சமுதாயம்

இலங்கையின் இளவதியனரின் பிறழ்வான நாகரிக நடத்தைகள் அநாகரிகத்தை நோக்கி நகர்ந்து செல்வதனால்  பல்வேறு விளைவுகளுக்கு அவர்கள் முகம்கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக ஆண் – பெண் நட்பு என்பது பாலியல் உறவை அடைந்துகொள்வது என்ற அர்த்தத்திற்குள்ளாகி அதற்கான தவறான வழிகளைத் தேடிக்கொண்டு அலையும் இளைய சமூகத்தின் எண்ணிக்கையை அறைகள் வாடகைக்கு என்ற விளம்பரத்துடன் அதிகரிக்கப்பட்டுள்ள வியாபாரத்தை கணிப்பிட்டுக் கண்டுகொள்ள முடிவதுடன், ஒவ்வொரு வருடத்திலும் வெப்ரவரி மாதம் 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற காதலர் தினத்தில் வாடகைக்காகப் பதிவு செய்யப்படுகின்ற அறைகளின் எண்ணிக்கையைக் கொண்டும் மதிப்பிட்டுக்கொள்ள முடிகிறது.

இவ்வாறான தகாத உறவுகளினால் ஏற்படுகின்ற இந்நோய்களினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கையில் கணிசமான எண்ணிக்கையினர் இளவயதினராக உள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் 15 வயதிற்கும் 29 வயதுக்குமிடைப்பட்டவர்கள் பாலியல் நோய்களுக்காளாகி வருகின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

பாலியல் சம்பந்தமான  நோய்களுக்காக சிகிச்சைபெற வருவோரில் பாடசாலை மாணவ, மாணவிகளும் இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவை தொடர்பில் பெற்றோர்களும் ஆசிரியர் சமூகத்தினரும்  கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாலியல் நோய்கள் பரவும் ஆபத்திருப்பதாக எச்சரித்துமுள்ளனர்.

விழுமியங்கள் அசிங்கப்படுத்தப்பட்டு இடம்பெறுகின்ற விபசாரமும், ஒருபால் உறவும் உலகில் மலிந்து கிடக்கின்றன. மதங்களையும், கலாசாரத்தையும்  மதிக்கின்ற நமது நாட்டிலும் விபச்சாரம் அதிகரித்துவிட்டது. மசாஜ் சிகிச்சை நிலையங்கள் என்ற போர்வையில் நடாத்தப்படுகின்ற பல விபசார நிலையங்கள் பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

சமூக வலைத்தளங்கள் என்றும் கையடக்கத் தொலைபேசி என்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தியுள்ள வசதிகளின் காரணமாக தகாத உறவுகள் ஏற்பட்டு அதனால் கட்டிக்காக்கப்பட வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன. தகாத பாலியல் உறவுகளினால் பாலியல் நோய்கள் மாத்திரமல்ல உயிர்ப்பலிகளும் ஏற்படுகின்றமை இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இலங்கையில் 96 வீதமானோர் பாலியல் காட்சிகளைப் பார்ப்பதற்கும் பிறரின் குற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்குமே  இணையங்களைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதிலிருந்து நாகரிகத்தின் வெளிப்பாடுகள் அநாகரிகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் தகாத பாலியல் உறவுகள் அவசியமற்ற கருக்கலைப்புக்களையும் சிசுக்கொலைகளையும் இலங்கையில் அதிகரிக்கச் செய்துள்ளமையைக் காணமுடிகிறது.

வருடமொன்றுக்கு 4000,000 பெண்கள் கருவுறுகின்றபோதிலும,; இதில் 15,000 கருக்கள் சட்டவிரோதமாகக் கருக்கலைப்புச் செய்யப்படுகின்றன.  இச்சட்டவிரோத கருக்கலைப்பினால்  கருவுறுகின்ற  பெண்களில் 10 வீதத்தினர் உயிரிழக்கின்றனர். அத்தோடு, 24,000 இளவதியினரும் கர்ப்பமடைவதாகவும், இதற்கு போதிய கல்வியறிவின்மை, வறுமை, தகாத உறவுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்பவை காரணமாக இருப்பதாகவும் நாளாளொன்றுக்கு சராசரி 650 சட்டவிரோத கருக்கலைப்புக்கள் இலங்கையில் இடம்பெறுவதாகவும் சுகாதார தரப்புத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

திருமணமாகாத பல யுவதிகள் தகாத உறவின் மூலம் கருவுற்று கருக்கலைப்புச் செய்வதையும், கருவினைக் கலைக்க முடியாதவர்கள் பிள்ளைகளை பெற்று அச்சிசுக்களை வீதியோரங்களிலும் காடு, பற்றைகளிலும் எறிந்துவிட்டு செல்வதையும் அதற்காக அத்தகையவர்கள் கைது செய்யப்படுவதும் இலங்கையில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களின் பட்டியலில் ஒன்றாகக் காணப்படுகிறது. நாகரிகம் என்ற போர்வையில் விழுமியங்கள் மாசுபடுத்தப்படுகின்றமை இந்நிலைமைகளுக்குக் காரணமாகிறது என்பதுடன் பிறழ்வான நடத்தைகள் கொண்ட சமுதாயமொன்று உருவாகிக் கொண்டு வருகிறதா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்திருப்பதை சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

விழுமியக் கல்வியின் அவசியம்;

அநாகரிகப் போதைக்குள் வீழ்ந்து தத்தளிக்கும் இளம் சமுதாயத்தினருக்கு ஒழுக்க விழுமியங்களாடு வாழ்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுவது அவசியமாகும். சமூக, பொருளாதார, குடும்ப சீரழிவை ஏற்படுத்தும் இத்தகைய ஒழுக்க விழுமியமற்ற நடத்தைப் பிறழ்வுகளிலிருந்து எதிர்கால சமூகத்தைப் பாதுகாக்கவும்  ஒழுக்க விழுமியமிக்க எதிர்கால சமூகத்தை உருவாக்கவும் விழுமியக் கல்வித்திட்டமும் விரசமற்ற பாலியல் கல்வியும் முறையாக பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உணரப்படுவதும் அவசியமாகும்.

இலங்கையில் மாணவப் பருவத்திலுள்ளவர்களும் எயிட்ஸ் தொற்றுகைக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது. இது தொடர்பில் மாணவர்களை அறிவூட்டுவதற்காக பாடசாலைகளில் பாலியல் கல்வி நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது இக்கல்வி நடவடிக்கைகளும் அதன் பாடப்பரப்புக்களும் பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக அமைந்துவிடாத வகையில் இப்பாடத்துக்கான பாடவிதான அலகுகள் தயார்படுத்தப்படுவது அவசியமாகும்.

சமூக ஒழுங்குப் பிறழ்வுகள், பயில்நிலை வழியாக சீர்படுத்தப்பட வேண்டுமாயின் பாடசாலைக் கலைத்திட்டத்தில் அனுபவங்கள்  உள்ளடக்கப்பட வேண்டும். பாடசாலைக் கலைத்திட்ட அமைப்பியலையும் அதன் சமகால செயல் நிலைகளையும் ஆராய்ந்து பார்க்கும்போது  மாணவர்களிடையேயும் ஒருசில ஆசிரியர்களிடையேயும் ஆரோக்கிய மனவெழுச்சிக்குரிய பயிற்சிகள் போதாமலிருப்பது தெளிவாகிறது. அண்மையில் மாத்தறையில் பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் பட்டப்பகலில் நடுவீதியில் சக மாணவர்களினால் குத்திக் கொலை செய்யப்பட்டமையும், பேருவளையிலுள்ள தேசிய பாடசாலையில் ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் ஒருவர் உயிர் இழந்துள்ளமையும் மாணவர்களின் மனவெழுச்சிப் பாதிப்பிளை வெளிப்படுத்தியுள்ள நிகழ்வுகளாகும்.

ஆரோக்கியமான மனவெழுச்சிக்குரிய பயிற்சிகளும் விழுமியக் கல்வியும் ஒன்றிணைந்தவையாகக் காணப்படுவது அவசியமாகும். தற்கால மாணவ சமூகத்தின் மனவெழுச்சிகள், மனப்பாங்குகள், நடத்தைக்கோலங்களை உற்றுநோக்குகின்றபோது அவை ஆரோக்கியமானதாக அமையவில்லை என்பதோடு இந்நிலைமைகள் பாடசாலைகளில் விழுமியக் கல்வியை வலியுறுத்தும் நிலையை உருவாக்கியுள்ளதாக கல்வியிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஏனெனில், ஒழுக்க விழுமியமுள்ள எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் கேந்திரத் தளமாக பாடசாலைகள் மிளிர்கின்றன.  பாடசாலைகளிலிருந்து ஒழுக்கவிழுமியமுள்ள எதிர்கால சமூகம் உருவாக்கப்படுவது இன்றியமையாதது. நடத்தைப் பிறழ்வுகளால், விழுமியமற்ற செயற்பாடுகளால் ஏற்படுகின்ற நோய்கள் முதல் ஏனைய சமூகம் அங்கீகரிக்காத சமூகவிரோத நடவடிக்கைகள் சமூகத்தின் மத்தியிலிருந்து ஒழிக்கப்பட வேண்டுமாயின், அதன் ஆபத்துக்கள் அதிகரிக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டுமாயின் அவை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதுடன் ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடக்கக்கூடிய ஆரோக்கியமுள்ள எதிர்கால சமூகம் கட்டியெழுப்பப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

இந்தக் கட்டாயத் தேவை உணரப்பட்டு செயலுருப் பெறுகின்ற போதுதான் பிறழ்வான நடத்தைகளைக் கொண்ட சமுதாயம் உருவாகுவது தடுக்கப்படுவதுடன்,  இளைய தலைமுறையினரின் பிறழ்வான நடவடிக்கைகளினால் ஏற்படும்  ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும். தற்கால இளைய தலைமுறையினர் பிறழ்வான நடத்தைகளினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கான பொறுப்பை சமூக முகவர்களான பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமய வயதுக் குழுவினரும், வழிபாட்டுத் தலங்களும், ஊடகங்களும் சுமக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இளைய தலைமுறைச் சமுதாயம்  சமூக முகவர்களினால் முறையாக வழிகாட்டப்பட்டிருந்தால் பிறழ்வான நடத்தைககள் கொண்டதொரு சமுதாயத்தினரின் நடத்தைகளினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களைத் தடுத்திருக்க முடியும். ஆதலால், ஆநாகரித்தின் ஈர்ப்பினால் நாகரிகத்தை மறந்து ஆபத்துக்களில் சிக்கியும், ஆபத்துக்களை ஏற்படுத்தியும் வருகின்ற இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்தவர்கள் தங்களது பொறுப்பை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.