(ஏ.ஆர்.ஏ.பரீல்)
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் குர்ஆன் பிரதிகளை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு புதிய விதிகளை முன்வைத்துள்ளதால் இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் குர்ஆன் பிரதிகளை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த புத்தகங்கள் மற்றும் குர்ஆன் பிரதிகளை சுங்கத்திலிருந்து விடுவித்துக் கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அரபுக்கல்லூரிகள், மத்ரஸாக்கள் உரிய காலத்தில் தேவையான புத்தகங்களைப் பெற்றுக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வித பொறுப்புமின்றி அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை உள்ளடக்கிய புத்தகங்கள் மற்றும் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களினால் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் என்பவற்றை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் மூலம் சமய நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுகிறது. இதனாலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தான் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துள்ள குர்ஆன் பிரதிகளை விடுவிப்பது தொடர்பில் உரிய நடைமுறைகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தன்னை அழைத்துள்ளதாகவும் இஸ்லாமிய புத்தகங்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனமொன்றின் உரிமையாளர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் பேருவளையில் இயங்கிவரும் நபவியா இஸ்லாமிய இளைஞர் அமைப்பு கட்டார் நாட்டிலிருந்து இறக்குமதி செய்த 90 புத்தகங்களில் 4 புத்தகங்கள் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படாது தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த 4 புத்தகங்கள் சமய நல்லிணக்கத்துக்கு சவால்களை ஏற்படுத்தும் சலபி மற்றும் வஹாபிஸ கொள்கைகளை உள்ளடக்கியுள்ளதாக கூறியே தடுத்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 4 புத்தகங்கள் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை உள்ளடக்கவில்லை எனவும் புத்தகங்களை விடுவிக்கும்படியும் நபவியா இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் செயலாளர் காமில் ஹுசைன் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவைச் சந்தித்து வேண்டியுள்ளார். 4 புத்தகங்களும் தற்போது பரிசீலனையின் கீழ் உள்ளதாகவும், பரிசீலனையின் பின்பு இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகளை உள்ளடக்கியதாக இல்லை என நிரூபிக்கப்பட்டால் அவை விடுவிக்கப்படும் என கமல் குணரத்ன தெரிவித்ததாக இளைஞர் அமைப்பின் செயலாளர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.- Vidivelli