இஸ்லாமிய புத்தகங்களை இறக்குமதி செய்ய தடையா?
சலபி புத்தகங்கள் அல்ல என்கிறது நபவியா இளைஞர் அமைப்பு
ஏ.ஆர். ஏ.பரீல்
எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இஸ்லாமிய சமய புத்தகங்களும் பாதுகாப்பு அமைச்சினால் பரிசீலனை செய்யப்பட்டு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கினால் மாத்திரமே இலங்கை சுங்க திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வித பொறுப்புமின்றி அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை உள்ளடக்கிய புத்தகங்கள் மற்றும் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள ஆசிரியர்களினால் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் என்பனவற்றை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் மூலம் சமய நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுகிறது. இதனாலே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய மத புத்தகங்களை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிப்பது தொடர்பில் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவுக்கு பாதுகாப்பு செயலாளர் கமல் குணவர்தன அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட கடிதத்திலே மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
பேருவளையில் இயங்கிவரும் நபவியா இஸ்லாமிய இளைஞர் அமைப்புக்கு கட்டார் நாட்டிலிருந்து 90 புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களை சுங்க பிரிவிலிருந்து விடுவிப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கான அனுமதியை திணைக்களம் வழங்கியிருந்தது.
மேலும் குறிப்பிட்ட நபவியா அமைப்பின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு 90 புத்தகங்களின் விபரங்களை குறிப்பிட்டு அவற்றை இலங்கை சுங்கப் பிரிவிலிருந்தும் விடுவிப்பதற்கான அனுமதியைக் கோரியிருந்தார்.
அதனையடுத்து 90 புத்தகங்களில் 4 புத்தகங்கள் சமய நல்லிணக்கத்துக்கு சவால்களை ஏற்படுத்தும் சலபி மற்றும் வஹாபி அதிதீவிர இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை உள்ளடக்கியுள்ளதாக பரிசீலனையின்போது அறியப்பட்டதாக சுங்கப்பிரிவு பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்தது. இதனையடுத்து அந்த நான்கு புத்தகங்கள் விடுவிக்கப்படுவது இடைநிறுத்தப்பட்டது.
இத்தோடு இதன் பிறகு இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள் விடுவிக்கப்படுவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுமதி வழங்குவதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென கடிதம் மூலம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் விசாரித்ததில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், பாதுகாப்பு அமைச்சு விடுவிப்பதற்கு சிபாரிசு செய்யாத 4 புத்தகங்களின் பெயர்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட புத்தகப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனத்தெரிவித்து 45 புத்தகங்களின் பட்டியல் மாத்திரம் பாதுகாப்பு அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இது தொடர்பில் விசாரணையொன்று நடத்தியதாகவும் அந்த புத்தகப்பட்டியல் ஏற்றுமதியாளர் மூலம் நபவியா இஸ்லாமிய இளைஞர் அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் புத்தகங்கள் வாசிகசாலைக்காகவே இறக்குமதி செய்யப்பட்டதென்றும் அதுதவிர புத்தகங்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமைக்கு வேறு காரணங்கள் எதுவுமில்லை எனவும் நபவியா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை திணைக்களத்தின் இந்தப் பதில் தொடர்பில் ஆராய்ந்ததில் பதிலை பணிப்பாளர் அவ்வாறே ஏற்றுக்கொண்டமை, இது தொடர்பான அனுமதியை வழங்கிய அதிகாரியை ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தாது பாதுகாப்பதற்கான முயற்சியாகத் தெரிகிறது.
அதனால் எவ்வித பொறுப்புமின்றி அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை உள்ளடக்கிய நூல்கள் மற்றும் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள நூலாசிரியர்களின் புத்தகங்கள் இறக்குமதி செய்தல்,விநியோகித்தல் மூலம் இந்நாட்டின் சமய நல்லிணக்கத்துக்கு பாதகம் ஏற்படுத்தும் என்பதை அறியத்தருகிறேன்.
இதன்பிறகு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இஸ்லாமிய சமய புத்தகங்கள் பாதுகாப்பு அமைச்சினால் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டபின் மாத்திரம் சுங்கப்பிரிவு ஊடாக விடுவிக்கப்படும் என்பதை அறியத்தருகிறேன் என குறிப்பிட்டுள்ளது.
நபவியா இளைஞர் அமைப்பின் விளக்கம்
நபவியா இஸ்லாமிய இளைஞர் அமைப்பு கட்டாரிலிருந்து இறக்குமதி செய்த எந்தவொரு புத்தகமும் சலபி மற்றும் வஹாபி இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை உள்ளடக்கியதாக இல்லை. அப்புத்தகங்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக இல்லை. 4 புத்தகங்களும் முறையாகப் படித்துப் பார்க்காது பாதுகாப்பு அமைச்சினால் தடை செய்யப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள் நூற்றுக்கு 100 வீதம் தீவிரவாத சிந்தனைகளை உள்ளடக்கியதாக இல்லை என நபவியா இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் செயலாளர் காமில் ஹுசைன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் ‘ புத்தகங்களில் சுன்னத்துல் வல் ஜமா அத்தின் பாடங்களே உள்ளடங்கியுள்ளன .எமது இயக்கம் சூபி தரிக்காவின் இயக்கம். நாங்கள் சூபித்துவத்துக்கே ஊக்கமளிக்கிறோம்.
புத்தகங்கள் கட்டாரிலிருந்த அன்பளிப்பாகவே கிடைத்தன. இவற்றை எமது வாசிகசாலைக்காகவே நாம் இறக்குமதி செய்தோமேயன்றி விநியோகிப்பதற்கல்ல. எமது இயக்கம் பாரம்பரியமானது.175 கால வரலாற்றைக் கொண்டது. விடுவிக்கப்படாத 4புத்தகங்களின் உள்ளடக்கத்தின் தலைப்புகள் சலபித்துவம், வஹாபிஸம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் உள்ளடக்கம் இக்கொள்கைகளுக்கு எதிரானவையாகவே உள்ளது. இப் புத்தகங்களை படித்துப்பாருங்கள். எவ்வித தீவிரவாதக் கொள்கைகளும் இல்லை. புத்தகங்களின் உள்ளடக்கத்தின் தலைப்புகளை மாத்திரம் வாசித்துவிட்டு தடைசெய்யப்பட்டுள்ளமை கவலைக்குரியது.
வெளியூர்களில் தடை செய்யப்பட்ட நூலாசிரியர்களின் புத்தகங்கள் என்றால் அரசாங்கம் தடைசெய்யப்பட்டுள்ள நூலாசிரியர்களின் பெயர்களை ஏற்கனவே எமக்கு அறிவித்திருக்க வேண்டும். எமது இயக்கம் சலபி, வஹாபிசத்தை ஊக்குவிக்கவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறோம். தீவிரவாதத்தை எதிர்க்கும் இயக்கமே எமது இயக்கம் என்றார். – Vidivelli