ஜனாஸாக்கள் நல்லடக்க விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு
(ஆர்.ராம்)
கொரோனா தொற்றுக்கு இலக்கான முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் விடயத்தில் பாகிஸ்தான் எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முஸ்லிம்களின் ஜஸாக்களை கட்டாய தகனத்திற்கு உட்படுத்தாது நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று உயர் மட்டத்தலைவர்களுக்கு அழுத்தங்களை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடத்தில் இதுகுறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் மேற்கொள்ளும் தீர்மானமொன்றை மாற்றியமைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. தொற்று நோய் பரவல் காணப்படும் அசாதாரண சூழலில் தீர்மானங்களை எடுத்தல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் நிறைந்தவொரு அதிகாரியாக இருப்பவர் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளரே ஆவார்.
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் தீர்மானத்தினை முற்கூட்டியே அறிவிப்பதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் விரும்பியே இருந்தார்கள். ஆனால் சுகாதாரத்துறையினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு ஆய்வுகளை பூரணமாக நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னரே நிபந்தனைகளுடனான அனுமதி அளிக்கப்பட்டது.
இக் காலகட்டத்தில் சர்வதேச ரீதியாக பலதரப்பட்ட நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட இனமொன்றின் உரிமைகளை ஏன் வழங்காது எமது அரசாங்கம் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்கள். கண்டனம் தெரிவித்தார்கள். அதேபோன்று தான் இலங்கைக்கு வருகை தந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடினார். ஆனால் அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை.
அதேநேரம், முஸ்லிம்களுக்கு மட்டும் இறந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்வதில் பிரச்சினை காணப்படவில்லை. கிறிஸ்தவ மக்களுக்கும் அவ்வாறான நிலைமைகள்தான் இருந்தன. இதனைவிடவும், பௌத்த, இந்து மக்களுக்கும் தமது அன்புக்குரியவர்களை உடனடியக தகனம் செய்ய வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டிருந்தன. தொற்று நோய் பரவல் காரணமாகவே அவ்விதமான நிலைமை ஏற்பட்டிருந்தது என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியமாகும்.
தீர்மானங்களை எடுக்கும் விடயத்தில் எவ்விதமான அரசியல் நோக்கங்ளும் காணப்படவில்லை. அதேபோன்று ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு சாதகமான வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் நாம் இவ்விதமான தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என்றார்.-Vidivelli