ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி ஓ.ஐ.சி மற்றும் முஸ்லிம் லீக் பாராட்டு
ஜனாதிபதி, பிரதமருக்கு நன்றியும் தெரிவிப்பு
(ஏ.ஆர்.ஏ. பரீல்)
இலங்கை அரசு கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளமைக்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான அமைப்பு (OIC) மற்றும் உலக முஸ்லிம் லீக் (MWL) என்பன இலங்கை அரசாங்கத்திற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில், இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான அமைப்பு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் “ இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் கொவிட் 19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்கள் தகனம் மாத்திரம் செய்யப்பட வேண்டும் என்ற உங்களது தீர்மானம் குறித்து மீள் பரசீலனை செய்யுமாறு நாம் ஏற்கனவே கோரியிருந்தோம்.
தற்போது கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்கள் தகனம் அல்லது அடக்கம் செய்யலாம் என 25.02.2021 இல் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலால் நாம் மகிழ்ச்சியடைகிறோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் அடக்கம் செய்ய அனுமதிக்கும் தீர்மானத்தை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, உலக முஸ்லிம் லீக்கின் (MWL) செயலாளர் நாயகம் கலாநிதி மொஹமட் பின் அப்துல் கரீம் அல் ஈசாவை தொலைபேசியூடாக தொடர்புகொண்டு தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் உலக முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது உலக முஸ்லிம் லீக்குக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்தியுள்ளதுடன் உலக முஸ்லிம் நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உறவினையும் மேலும் பலமடையச் செய்துள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம், இலங்கை உலக முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை ஏற்று முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதை நிறுத்தியதற்காகவும், அதற்குப் பதிலாக அடக்கம் செய்வதற்-கு அனுமதி வழங்கியதற்காகவும் இலங்கை அரசுக்கு நன்றி பாராட்டினார்.- Vidivelli