கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ஏறத்தாழ ஒரு வருட காலமாக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையின் கீழ் அமுலாக்கப்பட்டுவரும் முஸ்லிம் கொரோனாப் பிரேதங்களின் கட்டாய தகனத்தினால் முஸ்லிம்கள் வடித்த கண்ணீருக்கும் பட்ட மனவேதனைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் விடை கிடைத்ததுபோன்று அடக்கம் செய்யும் அனுமதியைத் தாங்கிய வர்த்தமானி அறிக்கை வெளியாகியுள்ளது. எனினும் கடவுள் அனுமதித்தும் பூசாரி தடை செய்வதுபோன்று சுகாதார அமைச்சு அதிகாரிகள் பல காரணங்களைச் சொல்லி இன்னும் அந்த வர்த்தமானி அமுலாகுவதைத் தாமதமாக்கி வருகின்றனர்.
இந்தத் தடங்கல்களுக்குப் பின்னால் முஸ்லிம்களுக்கெதிரான பௌத்த பேரினவாதச் சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது வெள்ளிடைமலை. இதனால் எழுகின்ற ஒரு முக்கியமான கேள்வி என்னவெனில் இலங்கையை உண்மையிலேயே ஆள்கின்றவர்கள் ராஜபக்சாக்களும் அவர்களின் அமைச்சர்களுமா அல்லது அவர்களை ஆட்டுகின்ற பேரினவாதச் சக்திகளா என்பதே. அன்றொரு நாள் முன்னைநாள் பிரதமர் ஜோன் கொத்தலாவலை மரணப்படுக்கையில் கிடந்த பிரதமர் பண்டாரநாயக்காவைப் பார்த்து, “நாயை நான் வாசலில் கட்டிப் போட்டேன். நீ அவிழ்த்து விட்டாய். அது உன்னையே கடித்து விட்டது” என்று கூறினாராம். அதே போன்று நாட்டைச் சீரழிக்கும் பௌத்த பேரினவாதச் சக்திகள் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தினுள்ளும் பிரதமைரைச்சுற்றியும் வட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றன. அதன் விளைவுகள் என்னவாகுமோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஜனாதிபதி நந்தசேன கோத்தாபய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வென்றபின்னர் தனது சத்தியப்பிரமாணத்தை ஜனநாயக மரபுகளுக்கேற்ப கோட்டை நாடாளுமன்றத்தில் எடுக்காமல், அந்த மரபையே புறந்தள்ளிவிட்டு, அனுராதபுரத்தில் பௌத்த சம்பிரதாயங்களின் முறைப்படி எடுத்தமை இலங்கையின் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு வீழ்ந்த முதலாவது அடி என்பதை ஞாபகத்திற் கொள்ளல் வேண்டும். அன்றிலிருந்தே இலங்கையின் ஜனநாயகம் படிப்படியாக மறையத் தொடங்கிற்று என்பதை இன்று நடைபெறும் இராணுவம் சூழ்ந்த பௌத்த ஏதேச்சதிகாரம் எடுத்துக்காட்டவில்லையா? அந்த பௌத்த ஏதேச்சதிகாரத்தின் துஷ்ட லீலைகளில் ஒன்றாகவே ஜனாதிபதியின் வர்த்தமானி அமுலாகுவதற்கு இடையூறாக நிற்கும் நிர்வாகத் தடங்கல்களையும் கருதவேண்டும்.
இந்த நிலையில், முஸ்லிம்களை எதிர்நோக்கும் ஒரு முக்கிய கேள்வி இதுதான். அதாவது காலந் தாழ்த்தியாவது ஜனாஸாக்களை நல்லடக்கம்செய்யும் உரிமை கிடைத்து விட்டால் (அதற்காக யாருக்கு நன்றி கூறவேண்டும் என்பதை ஏற்கனவே ஒரு கட்டுரையில் நான் விளக்கியுள்ளேன்) அத்துடன் முஸ்லிம்களின் போராட்டங்களும் ஓய்ந்துவிடுமா என்பதே.
சுதந்திர இலங்கையில் ஆளும் கட்சியுடன் இணைந்தாற்தான் முஸ்லிம்களுக்குச் சுபீட்சமுண்டு என்ற ஒரு கருத்தை முஸ்லிம் அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும், சமூகநல ஆர்வலர்களும் மக்களிடையே விதைத்துவிட்டுள்ளனர். அவ்வாறான ஓர் இணைப்பினால் முஸ்லிம் சமூகம் அடைந்த நன்மைகளைப் பட்டியலிட்டு அதற்கான ஆதாரமாகவும் காட்டுகின்றனர். இந்தக் கருத்துக்குப் பின்னால் மறைந்துள்ள ஒரு முக்கியமான கேள்விக்கு அவர்களுள் யாரும் இதுவரை விடையளித்ததாகத் தெரியவில்லை. அதாவது, இவ்வளவு நன்மைகளும் இந்நாட்டின் பிரஜைகளான சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான அடிப்படை உரிமைகளா அல்லது முஸ்லிம் என்ற இனமொன்றுக்கு அரசியல் இலாபம் கருதி கொடுக்கப்பட்ட சலுகைகளா?
சலுகைகள் அரசியல் மாற்றங்களுக்கேற்ப நிலைக்கலாம் அல்லது பறிபோகலாம். சலுகைகளுக்காகச் சட்டத்தின்மூலம் போராட முடியாது, அரசியல் ரீதியாக மன்றாடலாம். ஆனால் உரிமைகள் பறிக்கப்படும்போது அதை எதிர்த்து உலக நீதிமன்றம்வரை சென்று போராடலாம். அந்த உண்மையைத்தான் ஜனாஸா எரிப்புக்கெதிரான போராட்டம் தெளிவுபடுத்துகிறது. கொரோனாவால் உயிர் நீத்த முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வது உலக முஸ்லிம்களின் அடிப்படை உரிமை. அவ்வாறு அடக்கம் செய்வதால் தொற்று பரவுவதற்கு வாய்ப்பில்லை என்பதை இலங்கையைத் தவிர்ந்த உலக நாடுகள் எல்லாமே உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், அதனை ஒரு அடிப்படை மனித உரிமையாக ஐ. நா.வின் மனித உரிமை ஆணையாளர் வெரோணிக்கா மிச்சேல் பெச்லற் என்ற பெண்மணி தனது அறிக்கையில் குறிப்பிடும்வரை நமது முஸ்லிம் தலைவர்கள் அரசியல் மன்றாட்டம் நடத்தினார்களே ஒழிய உரிமைப் போராட்டம் நடத்தவில்லை.
இந்த நிலை மாறவேண்டும். இன்று சிறுபான்மையினராக வாழும் பிரஜைகளின் மனிதாபிமான, ஜீவாதார, அடிப்படை உரிமைகள் பௌத்த பேரினவாதத்தின் வலியுறுத்தலால் ஆட்சியாளர்களால் திட்டமிட்ட வகையில் சூறையாடப்படுகின்றன. அந்த உரிமைகளுள் ஒன்றுதான் முஸ்லிம்களின் ஜனாஸா அடக்க உரிமையும். அதனைத் திருப்பி முஸ்லிம்களிடம் ஒப்படைப்பது தவிர்க்க முடியாதது. ஆட்சியினர் அதனைப் பணயமாக வைத்து சர்வதேச மட்டத்தில் அரசியல் லாபம் திரட்ட நினைப்பது வேறுவிடயம். ஆனால் அந்த உரிமையை மீட்டுவிட்டோம் என்ற இறுமாப்புடன் திரும்பவும் பழைய குருடி கதவைத் திறடி என்ற கதைபோன்று முஸ்லிம்கள் ஆட்சியாளருடன் இணைந்து போவதே நன்மையென்று கருதினால் அதைவிடவும் ஒரு முட்டாள்தனம் இருக்க முடியாது. அவ்வாறான கருத்தே எட்டு முஸ்லிம் உறுப்பினர்களை அன்று நாடாளுமன்றத்தில் 20ஆம் திருத்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வைத்தது. இந்தத் துரோகத்தை அவர்களால் எவ்வாறுதான் நியாயப்படுத்த முடியுமோ?
ஆனாலும் ஒன்றுமட்டும் உண்மை. பேரினவாதிகள் முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை என்றிருப்பதனாலேதான் எதிரணியில் இந்த மந்திகள் குந்திக் கொண்டிருக்கின்றன. நாளைக்கே சில சலுகைகளைக்காட்டி வாவென்றழைத்தால் தாவிப்பாயும் தன்மை கொண்டவர்கள் இத்தலைவர்கள். எனவே இவர்கள் அனைவரையும் ஒதுக்கிவிட்டு முஸ்லிம்கள் தாம் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடையாளத்துடன் ஒரு தனிவழியில் நின்று போராடவேண்டி இருக்கிறது. அந்தப் போராட்டம் உரிமைகளுக்கான போராட்டமாக, நீதிக்கான போராட்டமாக, சம அந்தஸ்துக்கான போராட்டமாக ஏனைய மக்களுடன் இணைந்து, இன மத மொழி வேற்றுமைகளைக் களைந்து, நடத்தப்படவேண்டிய ஒரு போராட்டம். அண்மையில் நடந்தேறிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபவனி அவ்வாறான ஒரு உரிமைப் போராட்டத்தின் முதல் அத்தியாயம் என்று கூறினும் பொருந்தும்.
முஸ்லிம் என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட அரசியலே முஸ்லிம்களின் இன்றைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம். அதனைத் தவிர்த்து, பிரஜைகள் என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்திப் போராடினால் அப்போராட்டம் அதே பிரச்சினைகளை எதிர்நோக்கும் சகல இனத்தவர்களையும் முஸ்லிம்கள்பால் ஈர்க்கும். அது ஒரு தேசியப் போராட்டமாகவும் மாறலாம். அதுவே இன்றையத் தேவை.
நாடு பல கோணங்களிலிருந்தும் பாரதூரமான பிரச்சினைகளை இன்று எதிர்நோக்கியுள்ளது. பொருளாதார வங்குறோத்து, வறுமையின் கோரப்பிடி, இயற்கைச் சூழலின் சீரழிவு, பொதுச் சுகாதாரச் சீர்கேடு, வெளிநாட்டு நெருக்கடி, ஊழல் நிறைந்த அரசியல், அடக்குமுறை ஆட்சி என்றவாறு ஒரு நீண்ட பிரச்சினைப் பட்டியலையே தொகுத்துவிடலாம். ஆனாலும் பௌத்த பேரினவாதிகளின் ஏதோ ஒரு மாத்திரையினால் மயக்கமுற்றவர்கள்போன்று பெரும்பான்மை இனம் இவற்றைக் கண்டும் காணாததுபோல் தூங்கிக் கொண்டிருக்கிறது. அது விழிக்கும் நேரம் தூரத்தில் இல்லை. அவர்களை விழிக்கவைக்க வேண்டிய பொறுப்பு இன்று சிறுபான்மைப் பிரஜைகளின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த உண்மையை முஸ்லிம்கள் உணர்ந்தால் ஒரு புதிய தலைமைத்துவத்தின் கீழ் சகல இனங்களுடனும் கைகோர்த்து இலங்கையை அதன் ஜனநாயகப் பாதைக்குத் திருப்பி இலங்கையர் என்ற போர்வையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பப் போராடலாம். ஜனாஸாக்களை அடக்கும் உரிமையைத் திருப்பிப் பெற்றதனால் முஸ்லிம் பிரஜைகளின் ஏனைய பிரச்சினைகளும் எப்படியோ தீர்ந்துவிடும் என அல்லாஹ்விடம் அண்ணாந்து கரமேந்தி அவன் தலைமேல் பாரத்தைப் போட்டு அமைதியுடன் இருக்க முடியாது. நபிகளார் அப்படி இருந்திருந்தால் இஸ்லாமே பரவி இருக்காது. அவரது வாழ்க்கை முழுவதுமே ஒரு போராட்டக் காவியம். எனவே தொடர்ந்தும் போராடியே இந் நாட்டின் உயிரோட்டமுள்ள பிரஜைகளாக வாழவேண்டி இருக்கிறது. ஜனாஸாக்களை அடக்கினாலும் போராட்டம் அடங்கக் கூடாது. – Vidivelli