(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் தற்போது அமுலிலுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அத்திருத்தங்களின் கீழ் காதி நீதிபதிகளாக பெண்களும் நியமிக்கப்படுவார்கள் என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.மேலும் தற்போது காதிநீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுவரும் தாபரிப்பு வழக்குகள் நீதவான் நீதிமன்றுக்கு பொறுப்பளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 12லிருந்து 18 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவையின் அனுமதியைக்கோரி நீதியமைச்சர் அமைச்சரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பித்துள்ளார். தற்போது அமுலிலுள்ள முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 12 என்பது குறிப்பிடத்தக்கதாகும். 12 வயதுக்கும் குறைந்த முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனின் காதிநீதிவானிடம் அனுமதி பெற்றாக வேண்டும்.
முஸ்லிம் திருமண பதிவின்போது தற்போது மணமகன் மாத்திரமே கையொப்பமிடுகிறார். மணமகளின் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை. திருமணப்பதிவுப் புத்தகத்தில் மணமகனும் மணமகளும் கையொப்பமிடவேண்டும் என்ற வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
அத்தோடு முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நீதியமைச்சர் அலிசப்ரி புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், உலமாக்கள் அடங்கிய குழுவொன்றினை நியமித்துள்ளார். இக்குழுவின் தலைவராக வக்பு சபைத்தலைவர் சட்டத்தணி சப்ரி ஹலீம்தீன் பதவிவகிக்கிறார். இக்குழு தனது அறிக்கையையும், பரிந்துரைகளையும் விரைவில் நீதியமைச்சரிடம் கையளிக்கவுள்ளது.-Vidivelli