கஷோக்ஜியின் கொலையுடன்  பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்பது ‘பூச்சிய சந்தர்ப்பமாகும்’

அமெரிக்க செனட்டர்கள் தெரிவிப்பு

0 708

கடந்த செவ்வாய்க்கிழமை மூடிய கதவுகளுக்குப் பின்னால் அமெரிக்க சீ.ஐ.ஏ இன்  பணிப்பாளர் ஜினா ஹஸ்பெல் விளக்கமளித்ததைத் தொடர்ந்து ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையுடன் சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்பதற்கு ‘பூச்சிய சந்தர்ப்பமே’ இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட செனட் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனக்கு ஏலவே இருந்த எனது கருத்து இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் உயர்மட்ட ஜனநாயகக் கட்சி அங்கத்தவரான பொப் மெனன்டேஸ் தெரிவித்தார்.  ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா சவூதி அரேபியாவுக்கு உறுதிமிக்க செய்தியொன்றினை வழங்க வேண்டும் எனவும், யெமனின் யுத்தத்தை நடத்தி வரும் சவூதி கூட்டுப்படைக்கான அனைத்து ஆதரவுகளையும் நிறுத்துவதற்கு சட்டமியற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மொஹமட் பின் சல்மானின் கட்டளையின் கீழ் செயற்படுகின்றவர்களால் இக்கொலை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என முடிவுக்கு வராமல் வேண்டுமென்றே கண்தெரியாதவர்கள் போன்று இருக்கிறீர்கள் என குடியரசுக் கட்சியின் செனட் சபை உறுப்பினரான லிண்ட்சே கிரஹம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

பட்டத்திற்குரிய இளவரசர் தொடர்புபட்ட ஆதாரங்களை ட்ரம்ப் நிருவாகம் அங்கீகரிக்காதிருப்பதற்கு விரும்புவதுபோல் தெரிகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ஏலவே கூறப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவரான பொப் கோர்க்கர் ‘இந்த கஷோக்ஜியின் கொலைக்கான உத்தரவைப் பிறப்பித்து அதனைக் கண்காணித்தவர் மொஹமட் பின் சல்மானே என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை’ எனத் தெரிவித்தாhர்.

இளவரசர் மொஹமட்டை விசாரணைக்குட்படுத்தினால் அவர் குற்றவாளி என்பதை சுமார் 30 நிமிடங்களில் நீதிபதி கண்டறிவார் எனவும் அவர் தெரிவித்தார்

செனட் சபையின் இராணுவ சேவைகள், வெளிநாட்டு உறவுகள், குறைநிரப்பல் மற்றும் புலனாய்வுக் குழுக்களின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி அங்கத்தவர்களுக்கு ஹஸ்பெல் விளக்கமளித்ததைத் தொடர்ந்து இக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.