- சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படமாட்டாது,
குளிப்பாட்ட முடியாது - சமய கிரியையில் 2 மத குருக்கள்
5 உறவினர்கள் பங்கேற்கலாம் - 10 நிமிடங்கள் மட்டுமே சமய
கிரியைகளுக்கு அனுமதி - உறவினர்களால் பிரேதப் பெட்டி
கட்டாயம் வழங்கப்பட வேண்டும்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் இரவு வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே EPID 400/ 2019 ஆம் இலக்கம் 2020.01.04 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிருபம் மற்றும் 2020.07.21 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிருபம் என்பவற்றின் திருத்தமே டி.ஜி.எச்.எஸ். கொவிட் 19/347 2021 எனும் இந்தப் புதிய சுற்று நிருபமாகும். இந்த சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு :
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதிக்கப்பட்ட அண்மித்த மயானத்திலே அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம்.
இனங்காணப்படாத சடலங்கள், உரிமைகோரப்படாத சடலங்கள் அரசாங்கத்தின் செலவில் தகனம் மட்டுமே செய்யப்படும்.
மரணம் வைத்தியசாலையில் இடம் பெற்றால் சவ அறைக்கு சட்ட வைத்திய அதிகாரி அல்லது உரிய உத்தியோகத்தர் உடல் பையினை மரணம் இடம்பெற்ற வைத்தியசாலைக்கு வழங்கவேண்டும்.
மரணித்த உடல்களை 2 மணித்தியாலங்களுக்கு வைத்தியசாலை விடுதியில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உரிய ஆவணங்கள் தயாரானவுடன் சடலம் உடனடியாக சவச்சாலை ஊழியர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். உடல் பை சவச்சாலை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் PPE (பாதுகாப்பு ஆடை) அணிந்திருக்கவேண்டும்.
உறவினர்களால் பிரேதப் பெட்டி கட்டாயமாக வழங்கப்படவேண்டும்.
உறவினர்கள் சிறியளவில் இறுதி மத கிரியைகளை வைத்தியசாலையில் வைத்தியசாலையின் உதவியுடன் ஏற்பாடு செய்யலாம்.
சடலம் தகனம் செய்யப்படுவதென்றால் உறவினர்கள் தகனம் செய்யும் நேரம், இடம் என்பவற்றை பிரேத அறைக்குப் பொறுப்பானவருக்கு அறிவிக்கவேண்டும்.
இறுதிக்கிரியை மத அனுஷ்டானத்துக்கு இரண்டு மதகுருக்கள் அனுமதிக்கப்படுவர். சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கிழேயே இது இடம் பெறும். 5 உறவினர்களும் அதற்கு அனுமதிக்கப்படுவர்.
10 நிமிடங்கள் சமய அனுஷ்டானங்களுக்கு வழங்கப்படும். சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிகாட்டல்களின்படி இது இடம்பெறவேண்டும்.
சடலத்தை தொடுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
சடலம் அடக்கம் செய்யப்படுவதற்கு அல்லது தகனம் செய்யப்படுவதற்கு சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும்.
பொலிசார் இதற்கு பாதுகாப்பு வழங்குவார்கள். பொலிஸ்மா அதிபர் இதற்கான அறிவுறுத்தல்களை வழங்குவார்.
சடலம் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் வரை குறிப்பிட்ட பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார அதிகாரி மற்றும் பொலிசார் மேற்பார்வை செய்யவேண்டும்.
சுகாதார சேவைகள் பணிபாளர் நாயகத்தினால் அனுமதிக்கப்பட்ட அடக்க ஸ்தலத்திலேயே கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்.
தகனம் செய்யப்பட்ட உடல்களின் சாம்பல் உறவினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டால் வழங்கப்படும்.
வைத்தியசாலையில் அன்றி வேறு இடங்களில் எவரேனும் மரணித்தால் பிரேத அறைக்கு சடலம் கிடைக்கப்பெற்றதும் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என பரிசோதனையின் பின் உறுதிபடுத்தப்பட்டால் பிரேத அறை பணியாளர்கள் சடலத்தை உடல் பைக்குள் இட்டு அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் வைக்க வேண்டும்.
பிரேத பரிசோதனை நடாத்தப்பட்டால், பிரேத பரிசோதனையின் பின்பு உடல் அதற்கான பையில் இடப்பட்டு அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்படும். (இறுதிக்கிரியை மஜிஸ்திரேட் / திடீர் மரண விசாரணை அதிகாரியின் உத்தரவுக்கமைய ஏற்பாடு செய்யப்படும்)
அடக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திலே தீவொன்றிலே இடம் பெறும்.
அடக்கம் செய்வதற்கான உகந்த இடத்தை மாவட்ட சூழல்கமிட்டி, மாவட்ட செயலாளர், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியொருவர், சுகாதார சேவைகள் மாகாண பணிப்பாளர், பிராந்திய பணிப்பாளர் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்போர் ஆராய்ந்து தீர்மானிக்கப்பர். இந்தத் தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும்.
சடலம் 1.5-/3.0 மீற்றர் ஆழத்தில் அடக்கம் செய்யப்படவேண்டும்.
மரணித்தவர்களின் கெளரவம், கலாசாரம் மத, குடும்ப பாரம்பரியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மரணித்தவரின் குடும்ப உறுப்பினர்களின் கெளரவம் சடலத்தை அகற்றுவதற்கான செயல்முறை முழுவதும் மதிக்கப்படவேண்டும்.
சடலத்தைப் பார்வையிட அனுமதிக்கும்போது சடலம் பிரேத பையில் இடப்பட்டிருக்கவேண்டும். பிரேத பெட்டிகள் எக்காரணம் கொண்டும் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் இடங்களில் திறக்கப்படமாட்டாது.
பொறுப்பளிக்கப்படும் சுகாதார ஊழியர்கள் மாத்திரமே சடலத்தை கையாள வேண்டும். சடலம் அடக்கம் செய்யப்படுவதற்கோ தகனம் செய்யப்படுவதற்கோ உறவினர்களிடம் ஒப்படைக்கப்படக்கூடாது. சடலத்துடன் தொடர்புபடும் அனைவரும் நிலையான தொற்று தடுப்புக்கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிப்பது உறுதி செய்யப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதை குழியின் அடிமட்டம் வேண்டும். பிரேத பெட்டிகள் எக்காரணம் கொண்டும் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் இடங்களில் திறக்கப்படமாட்டாது.
பொறுப்பளிக்கப்படும் சுகாதார ஊழியர்கள் மாத்திரமே சடலத்தை கையாள வேண்டும். சடலம் அடக்கம் செய்யப்படுவதற்கோ தகனம் செய்யப்படுவதற்கோ உறவினர்களிடம் ஒப்படைக்கப்படக்கூடாது. சடலத்துடன் தொடர்புபடும் அனைவரும் நிலையான தொற்று தடுப்புக்கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிப்பது உறுதி செய்யப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதை குழியின் அடிமட்டம் நிலக்கீழ் நீர் மட்டத்திலிருந்து 2.0M உயரத்தில் இருக்க வேண்டும். -Vidivelli